அரசுப் பயிற்சி மையம்... அசத்தல் வெற்றி!

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தின் கீழ் இயங்கிவரும் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்களில், சமீபத்தில் வெளியான ‘சிவில் சர்வீஸ் தேர்வு’ முடிவுகளில் 73 மாணவர்கள் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணமாக அமைந்த, மையத்தின் பிரின்சிபால் பிரேம் கலாராணிக்கு நன்றி சொல்ல வெற்றியாளர்கள் அவரைச் சந்தித்த நாளில், நாமும் கலந்துகொண்டோம் நிகழ்வில்.

வெற்றியாளர்களிடம் பேசியபோது, ‘‘இன்னிக்கு சிவில் சர்வீசஸ் பயிற்சி மையம் என்பது பெரிய பிசினஸ் ஆயிருச்சு. பலரும், ‘அவ்ளோ கட்டணமா?’னு யோசிச்சே பின்வாங்குறாங்க. ஆனா, இங்க கோச்சிங், ஹாஸ்டல்னு எல்லாமே இலவசம். திறமை மட்டும் இருந்தா போதும், உங்ககிட்ட பைசா வாங்காம உங்களை ஐ.ஏ.எஸ்
ஆக்குவாங்க... வாங்க!’’ என்ற பிரியங்கா பாலசுப்ரமணியனின் வார்த்தைகள் நம்பிக்கையைத் தூவ...

‘‘பலரும் யு.பி.எஸ்.சி. கஷ்டம்னு நினைச்சு, டி.என்.பி.எஸ்.சி. எழுதும் மனநிலைக்குப் போயிடுறாங்க. அந்த மாயையை, இந்தப் பயிற்சி மையம்தான் உடைச்சுக் காட்டியது. இது, பலரின் அனுபவ உண்மை!’’ என்று இன்னொரு முக்கிய விஷயம் சொன்னார் அருண், மகிழ்ந்து.

‘‘ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகும் காலகட்டத்தில் குடும்பத்தின் பொருளாதாரத் தேவையை ஈடுகட்டுறது சிரமமா இருக்கும். பலரின் கலெக்டர் கனவையும் கலைப்பது இந்தப் பிரச்னைதான். ஆனா, வேலை பார்த்துட்டே தாராளமா சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்கலாம். வேலை பார்த்துட்டே படிக்கிறவங் களுக்கு குறைவான நேரமே கிடைக்கும்னாலும், அதை நிமிஷம்கூட வீணாக்காம படிச்சா நிச்சயம் ஜெயிக்கலாம் என்னைப்போல'' என்று புவனேஷ்வரி, சொல்ல,

‘‘ஒவ்வொரு வருடமும் நுழைவுத் தேர்வு மூலம் 325 மாணவர்களுக்கு இங்கே அட்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த வருடம் செப்டம்பரில் நோட்டிஃபிகேஷனும், நவம்பரில் நுழைவுத் தேர்வும் நடக்கவிருக்கிறது. திறமையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!’’ என்று அழைப்பு வைத்தார் பிரின்சிபால் பிரேம் கலாராணி.

வே.கிருஷ்ணவேணி  படம்: தி.குமரகுருபரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick