Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிராவல் போட்டோகிராஃபி... ‘ சபாஷ்’ போடவைக்கும் சாய்பிரியா!

‘‘நெருப்பாற்றில் நீந்தி வந்தேன்னு அரசியல்வாதிகள் சொல்வாங்க. ஆனா, நான் உண்மையிலேயே நெருப்பை மிதித்து போட்டோ எடுத்திருக்கேன்!’’ - தலையை சிலுப்பிச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் சாய்பிரியா!

சாய்பிரியாவின் போட்டோகிராஃபி பக்கம் ‘Castle Mountains’ என்ற பெயரில் முகநூலில் அறியப்படுகிறது. சென்னைப் பெண்ணான இவர் கோவை, அவினாசிலிங்கம் பல்கலைக்கழத்தில் எம்.எஸ்ஸி, டெக்ஸ்டைல்ஸ் அண்ட் கிளாத்திங் படித்துவிட்டு சிலகாலம் சில இடங்களில் வேலை பார்த்திருக்கிறார். கேமராவும், லென்ஸும், `க்ளிக்'கும் அவர் பிரியத்தைக் கொள்ளையடிக்க... படித்த படிப்பு, பார்த்த வேலையை உதறிவிட்டு போட்டோகிராஃபியில் களமிறங்கிவிட்டார். அப்பா சஞ்சீவி, ரேமண்ட்ஸ் நிறுவனத்தில் கன்சல்டன்ட். சாய்பிரியாவின் போட்டோகிராஃபி ஆர்வத்துக்கு ஆதரவாக இருந்த அம்மா மறைந்துவிட்டாலும், அமெரிக்காவில் இருக்கும் சகோதரியின் மாரல் சப்போர்ட்டை பெரிய பலமாக நினைத்து, டிராவல் போட்டோகிராஃபியில் இயங்கிக்கொண்டிருக்கிறார்.

‘‘நான் எடுத்த புகைப்படங்களை, என் நண்பர்கள் கொண்டாடிய உற்சாகத்தில், ஒரு ஃபேஷனாகத்தான் இதில் இறங்கினேன். என் படங்களோட பிரத்யேகத்தன்மை, பத்திரிகைகளில் என்னைப் பற்றிய செய்தி வர வைக்க, ஆர்வம்... லட்சியம் ஆனது. டிராவல் போட்டோ கிராஃபிக்காக தென்னிந்தியா, வட இந்தியானு 35 இடங்களுக்கும் மேல, குழுவா, தனியானு பயணிச்சிருக்கேன். எல்லா துறைகளையும் போல, இங்கேயும் ஒரு பொண்ணா நான் அதிக உழைப்பைக் கொடுத்து, அதிக கேள்விகளைச் சந்திக்க வேண்டியிருந்தது!’’ என்று சொன்ன சாய்பிரியா, தன் புகைப்படங்கள் பற்றிப் பேசினார்.

‘‘ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு வித மான கலாசாரம், பண்பாடு இருக்கு. அதை என்னோட புகைப்படங்களில் வெளிக் கொண்டு வர்றதுதான் என்னோட விருப்பம். நாகாலாந்துல பழங்குடி மக்கள் ஃபெஸ்டி வல் டைம்ல ரொம்ப அழகழகா, இயற்கை சார்ந்த ஆடைகளை உடுத்தியிருப்பாங்க. பறவைகளோட இறகு, விலங்குகளோட தோல்னு அதையெல்லாம் என் லென்ஸ் மூலமா ரசிச்சு சிறைப்பிடிக்கிறதுக்காகவே வருஷா வருஷம் போவேன். அதேபோல, ஹோலி பண்டிகையைப் படமெடுக்கிறது, அப்படி ஒரு கலர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ். என் மேலயும் தூவப்படுற வண்ணங்களில் குளிச்சிட்டே வண்ணங்களையும், மக்களின் அந்த சந்தோஷத்தையும் கேமராவில் பதிவு செய்வேன்!’’ என்றவர், தன் சுவாரஸ்ய அனுப வங்களையும் பகிர்ந்தார்.

‘‘ராமேஸ்வரம் பாம்பன் பாலம் முழுக்க 2.8 கிலோ மீட்டர் தூரம் நடந்தே போய், அந்த நீல வானம், நீலக் கடலின் அழகையெல்லாம் ‘க்ளிக்‘கினோம். ராஜஸ்தான்ல ஒரு உள்ளடங்கிய கிராமத்துல போட்டோ எடுக்கப்போய், அடி வாங்கின அனுபவத்தை மறக்க முடியாது. கர்நாடகா, மங்களூர்ல ‘கம்பாலா’ங்கிற எருமைமாடு ரேஸை படம் எடுக்கப் போயிருந் தப்போ, சகதியில சிக்கி மூட்டு விலகி ஆப ரேஷன் வரைக்கும் போயிருச்சு. ம்... இதைச் சொல்ல மறந்துட்டேனே..! கேரளாவுல உள்ள கோயில்கள்ல ‘தெய்யம்’ங்கிற ஒரு நிகழ்ச்சி நடக்கும். அப்போ நீளமான

கட்டையை ஒடம்பை சுத்தி கட்டிக்கிட்டு நெருப்பு பத்த வெச்சிக்கிட்டு ஆடுவாங்க. அப்படி ஆடினவங்களை, கீழ விழுந்த நெருப்பை மிதிச்சுட்டே போட்டோ எடுத்த அனுபவம் தான் முன்னுரையில் சொன்னது!’’

- டிராவல் போட்டோகிராஃபியின் சுவாரஸ் யத்தையும், சாகசத்தையும் ரசிக்கும் விதத்தில் சொல்லி முடித்தார் சாய்பிரியா!

எம்.மரிய பெல்சின்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
‘ஸ்வீட் மேடம்’ சுனித்தி சாலமன்!
அனுபவங்கள் பேசுகின்றன!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close