கைகொடுக்கும் கிராஃப்ட்!

சாக்லேட் கிஃப்ட்!

‘‘இனிப்புகளும் பரிசுகளும் இல்லாமல் விழாக்கள் இல்லை. பரிசுக்குள்ளே இனிப்பு என்றால் டபுள் கொண்டாட்டம்தானே?!’’ என்று ஆவலைத் தூண்டும் கோவை, காந்திநகரைச் சேர்ந்த,‘சிரா’ கிராஃப்ட் ஸ்டோரின் உரிமையாளர் சொர்ணம் திருமால், வீட்டில் எளிமையாகச் செய்யக்கூடிய சாக்லேட் கிஃப்ட் செய்து காட்டுகிறார் இங்கு...

தேவையான பொருட்கள்:

கைப்பிடியுடன் கூடிய பூக்கூடை, நெட் கிளாத், கோல்டன் ரிப்பன், பிளாஸ்டிக் ரோஜாப்பூக்கள் (சிவப்பு மற்றும் வெள்ளை), கோல்டன் நிற இலைகள், டூத் பிக் குச்சிகள், தெர்மாக்கோல், கத்தரி, க்ளூ ஸ்டிக், ஊசி, நூல்.

செய்முறை:

படம் 1: கூடையைச் சுற்றி நெட் கிளாத் அமையுமாறு வைத்து ஊசியால் மடிப்புகள் வரும்படி தைத்துக் கொள்ளவும்.

படம் 2: ஊசியால் தைத்த பகுதியை கோல்டன் ரிப்பனால் சுற்றி, பின்பு க்ளூ கொண்டு ஒட்டவும்.

படம் 3: கூடைக்குள் புகும் அளவுக்கு தெர்மாக்கோலை தயார் செய்து கூடைக்குள் வைக்கவும்.

படம் 4: நெட் கிளாத் கொண்டு கூடையின் கைப்பிடி முழுவதும் சுற்றிக்கொள்ளவும்.

படம் 5: நெட் கிளாத் சுற்றப்பட்ட கைப்பிடியில் நேர்த்தியான இடைவெளி விட்டு கோல்டன் ரிப்பன் கொண்டு இறுக்கமாகச் சுற்றிக்கொள்ளவும்.

படம் 6: கோல்டன் ரிப்பனை பூ வடிவில் (விரும்பிய வடிவில்) செய்து கைப்பிடியின் ஒரு ஓரத்தில் பொருத்தி க்ளூ கொண்டு ஓட்டவும். அதேபோல் கூடையைச் சுற்றிலும் கோல்டன் ரிப்பனால் செய்யப்பட்ட பூக்களை க்ளூ கொண்டு ஓட்டவும் (விரும்பினால் செயற்கைப் பூக்கள் பொருத்தி மேலும் அழகாக்கலாம்).

படம் 7: பிளாஸ்டிக் பூக்களின் காம்புகளுடன் பிளாஸ்டிக் கோல்டன் இலைகளைச் சேர்த்து, காம்புகளை டூத் பிக்குகளுடன் க்ளூ கொண்டு ஒட்டிக் கொள்ளவும்.

படம் 8, 8a: பிளாஸ்டிக் ரோஜாப்பூக்களை கூடையைச் சுற்றிலும் அமையுமாறு தெர்மாக்கோலின் விளிம்புகளில் பொருத்திக்கொள்ளவும். வண்ணக் காகிதங்களில் சுற்றப்பட்ட சாக்லேட்டுகளை (ஹாட்டின் மற்றும் பூ வடிவ சாக்லேட்டுகள்) நீளமான குச்சிகள் கொண்டு தெர்மாக்கோலில் பொருத்திக்கொள்ளவும். இப்போது அழகிய சாக்லேட் பொக்கே தயார்!

திருமணம், பிறந்த நாள் போன்ற உறவுகளின் விழாக்களானாலும் சரி, வெளி விற்பனை என்றாலும் சரி... 200 ரூபாய் முதலீட்டில், ஒவ்வொரு `பொக்கே'விலும் 500 ரூபாய் வரையிலும்கூட வருமானம் ஈட்டலாம். கற்பனை மெருகேற, விலையும் ஏறும். இனி நல்ல காரியங்களுக்கு ஸ்வீட் செய்யுங்க... கொண்டாடுங்க!

- கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...

இரா.ஆனந்தி  படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick