பனிக்காலத்தில் 'பளிச்'னு மின்னலாம்..!

னிக்காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க ஆலோசனைகள் தருகிறார், தேனியைச் சேர்ந்த அரோமா தெரபிஸ்ட் துர்காதேவி... 

‘‘சரும வறட்சிதான் பனிக்காலத்தின் பிரதான பிரச்னை. அதற்கான தீர்வுகளை வெளிப்பூச்சாக மட்டுமில்லாமல், உள் உணவுகளாகவும் பார்ப்போம்.

 பனியால் பிளவுபட்டிருக்கும் சருமத்தில், தக்காளிப் பழக்கூழுடன் தயிர் கலந்து தடவி, சிறிது நேரம் காயவிட்டுக் கழுவினால்... வறட்சி நீங்கும்.

 தினமும் 500 மில்லிகிராம் விட்டமின் `சி' சத்து, உடலில் சேர வேண்டும். பனிக்காலத்தில் இது மிகமுக்கியம். ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காயில் விட்டமின் `சி' சத்து உள்ளது.

 குறிப்பாக, குளிர் சீஸனில் கிடைக்கும் கமலா ஆரஞ்சைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி பளபளக்கும். அதன் தோலைக் காயவைத்து பவுடராக்கி, தண்ணீரில் குழைத்து முகம், கை, கால்களில் தடவி, சிறிது நேரத்துக்குப் பிறகு கழுவினால், சருமம் ஜொலிக்கும்.

 பாலாடை அல்லது பாலாடையுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து... முகம், கை, கால்களில் தேய்த்து, ஊறிய பிறகு குளித்தால், சருமம் பளபளப்பாகும்.

 பாலாடையுடன் கசகசாவை ஊறவைத்து அரைத்து முகம், கை, கால்களில் பூசி, சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால்... சருமம் மென்மையாகும்.

 மக்காச்சோள மாவுடன் தயிர் கலந்து தினமும் உடம்பில் தடவி காயவிட்டு, பின்னர் கழுவி வர... சருமம் மின்னுவது சர்வநிச்சயம்.

 இந்த சீஸனில் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவல்ல கிளிசரின் அதிகம் சேர்த்த சோப்பைப் பயன்படுத்தலாம், அல்லது சோப்பைத் தவிர்த்து பால், தயிர் போன்றவற்றை உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம்.

 பனிக்காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது. அது சருமத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச எண்ணெய்ப் பசையையும் எடுத்துவிடும்.

 மிகவும் வறண்ட சருமம் உடையவர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து உடலில் தேய்த்துக் குளித்து வரலாம்.

 சரும நோய்களைத் தவிர்க்க, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

 பனிக்காலத்தில் வறண்ட சருமத்துக்கு ஏற்றதாக சிம்பிள் மேக்கப் செய்துகொள்வது நல்லது.

 ஒரு டம்ளர் வெந்நீரில் அரை மூடி எலுமிச்சைச் சாறு, ஓரிரு ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேனி மினுமினுப்பாவதோடு தேவையற்ற சதை குறைந்து உடம்பும் ‘சிக்’ ஆகும்.

 இந்த சீஸனில் பொதுவாக ஜீரணம் தாமதமாகும் என்பதால், கொழுப்புமிக்க உணவுகளைத் தவிர்க்கலாம். பால், பழங்கள், காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். காய்கறி சூப், கோழி சூப், மிளகு ரசம் அருந்தலாம்.

 பப்பாளி, ஆப்பிள் பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதும், அதிகம் தண்ணீர் குடிப்பதும் சருமத்துக்கு ஆரோக்கியம் தரும். குறிப்பாக, வறண்ட சருமத்தினருக்கு இது மிக உகந்தது.’’

ச.மோகனப்பிரியா   படம்:வீ.சக்தி அருணகிரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick