Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்டேட் போர்டு,சி.பி.எஸ்.இ... எந்த சிலபஸ் நல்லது?

`கரு உருவானதுமே, குழந்தைக்கு கல்விக்கூடத்தில் துண்டு போட்டு இடம் பிடித்துவிட வேண்டும்' என்று நம் ஊரில் கிண்டலாகச் சொல்வார்கள். எல்.கே.ஜி வகுப்பில் குழந்தையைச் சேர்ப்பதற்காக நம்மவர்கள் படும்பாட்டைப் பார்த்தால்... இது கிட்டத்தட்ட உண்மை என்றே தோன்றும். இதோ வந்துவிட்டது டிசம்பர் சீஸன். இங்கே நாம் சொல்ல வருவது இசை சீஸன் பற்றியல்ல... எல்.கே.ஜி-க்கு இடம்பிடிக்கும் சீஸன். இந்த நேரத்தில், பெற்றோரின் முக்கியமான குழப்பமே... `ஸ்டேட் போர்டு, சி.பி.எஸ்.இ...' இப்படி எந்தப் பாடத்திட்டம் கொண்ட பள்ளியில் குழந்தையைச் சேர்ப்பது என்பதுதான். இந்த விஷயத்தில் இங்கே உங்களுக்குக் கைகொடுக்கிறார்... சென்னையைச் சேர்ந்த அரசுக் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர் ப.சிவக்குமார்.

‘‘கற்றல் திறன், தேர்ந்தெடுக்கப் போகும் மேற்படிப்பு, படிக்க நினைக்கும் கல்வி நிறுவனம் என இந்த அம்சங்களின் அடிப்படையில், எந்த சிலபஸ் பள்ளியில் பிள்ளையைச் சேர்க்கலாம் என்ற முடிவை எடுக்கலாம்.

ஸ்டேட் போர்டு

மாநில கல்வித் துறை, நேஷனல் கோர் கரிக்குலம் வரையறைகளின் படி அமைக்கும் பாடத்திட்டத்தை கொண்டது, ஸ்டேட் போர்டு சிலபஸ். பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்விப் பாடத்திட்டமும், பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே வழங்கி வந்த பாடத்திட்டமும் பின்பற்றப்படுகிறது. பாடத்திட்டங்களில் சி.பி.எஸ்.இ சிலபஸில் இருந்து பெரிதாக வேறுபாடு இல்லை. ஆனால், பரீட்சை என்பது மனப்பாடம் செய்யும் திறனை மதிப்பிடுவதாகவே உள்ளது. இதனால் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் ஸ்டேட் போர்டு மாணவர்கள் சரியாக ஸ்கோர் செய்ய முடிவதில்லை.

சி.பி.எஸ்.இ (CBSE)

மத்திய அரசின் நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் டிரெயினிங் (NCERT) பரிந்துரைக்கும் பாடத்திட்டம் இது. இந்த சிலபஸில் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தொடர்ச்சியான தேர்வு முறை (continuous comprehenvive assessment) மூலம் திறன் மதிப்பிடப்படும். பதினொன்றாம் வகுப்பில் ஸ்டேட் போர்டு சிலபஸ் பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமே, பொதுத் தேர்வின் மூலம் சி.ஜி.பி.ஏ-யாக (CGPA - cumulative grade point average) முடிவுகள் வெளியிடப்படும்.

இதன் தேர்வு முறை, மாணவர்களின் புரிதல் மற்றும் யோசிக்கும் திறனுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கும். உதாரணமாக, 10 மார்க் கேள்வியில் 2 மார்க் அனலிடிக்கல் திங்கிங், 2 மார்க் அது சம்பந்தபட்ட ஒரு பிராப்ளம், மீதி 6 மார்க்தான் புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் கேள்வியாக இருக்கும். இந்தப் பயிற்சி, அவர்களை JEE போன்ற தேசியத் தேர்வுகளை திறம்பட எதிர்கொள்ள வைக்கும். யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கும்கூட இந்த என்.சி.ஈ.ஆர்.டி புத்தகங்கள் அதிக பலன் தருவதாக உள்ளன.

ஐ.சி.எஸ்.இ (ICSE)

‘கவுன்சில் ஃபார் த இந்தியன் ஸ்கூல் சர்டிஃபிகேட்’ என்ற அரசு அல்லாத கல்வி அமைப்பால் நெறிப்படுத்தப்படும் சிலபஸ் இது. இதில் ஏழாம் வகுப்பு வரை தேர்வுகளே இருக்காது. பாடவாரியாகக் கொடுக்கப்படும் வொர்க்்ஷீட்டை மட்டும் மாணவர்கள் செய்தால் போதும். கணக்கு, அறிவியல், மொழிப்பாடங்கள் என அனைத்தும் நாடகங்கள் மற்றும் செயல்முறை விளக்கங்களாக மாணவர்களே செய்து காட்ட வேண்டும்.

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வுகள் உண்டு. பதினொன்றாம் வகுப்பில் ஸ்டேட் போர்டு, சி.பி.எஸ்.இ போர்டுகள் வழங்கும் பாடப்பிரிவுகளைவிட மிக அதிகமாக, ஆங்கில இலக்கியம், சுற்றுச்சூழல் அறிவியல், சமூகவியல், பொலிட்டிக்கல் சயின்ஸ், ஃபேஷன் டிசைனிங் என 70 பாடப்பிரிவுகளை ஆப்ஷனாக மாணவர்களுக்கு அளிக்கிறது. பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் என்ற வட்டம் விட்டு வந்து, மேற்படிப்புக்கு நிறைய கோர்ஸ் களை தேர்வு செய்ய உதவும் சிலபஸ் இது.

இன்டர்நேஷனல்

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் வழங்கும் கல்வி மற்றும் தேர்வு முறையைப் பின்பற்ற சான்றிதழ் பெற்றவையே இன்டர்நேஷனல் பள்ளிகள். சென்னையில் கேம்ப்ரிட்ஜ் கல்வியில் படிக்க பிரைமரிக் கான வயது வரம்பு (5 -11 வயது), செகண்டரிக்கான வயது வரம்பு 1 (11-14 வயது), செகண்டரி 2-க்கு (14 -16 வயது), அட்வான்ஸ்ட்க்கு (16 -19 வயது) என நான்கு நிலைகள் உள்ளன. அட்வான்ஸ்டு லெவலில் ஏ.எஸ் லெவல் (ஒரு வருடம்), ஏ லெவல் (இரண்டு வருடம்) என சாய்ஸ் உண்டு. கணிதம், அறிவியல், பொருளாதாரம், ஊடக அறிவியல், ரிலீஜியஸ் ஸ்டடீஸ், சமூகவியல், மரைன் அறிவியல், டிராவல் அண்ட் டூரிசம் உள்ளிட்ட 55 பாடங்களில் இருந்து மாணவர்கள் விரும்பும் பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பிராக்டிக்கல் தேர்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த சிலபஸில், மனப்பாடத்துக்கு இடமின்றி அந்தப் பயிற்சியை முழுமை யாகப் புரிந்து செயல்படுத்திக் காட்ட வைப்பதால், மாணவர்களின் சிந்திக்கும் திறனே இங்கு மதிப்பெண் காரணி.

மான்டிசோரி

ப்ரீ பிரைமரி என அழைக்கப்படும் இந்தக் கல்விமுறையில் 1 - 6 வயது வரையுள்ள குழந்தை களின் முழுமையான வளர்ச்சியை மனதில் வைத்து வகுப்புகளும் பாடங்களும் இருக்கும். விளையாட்டு, நாட கங்கள் மூலம் கல்வியைக் கொண்டுசேர்க்கும் இங்கு, பெரும்பாலும் செயல்முறை விளக் கங்கள் மூலமே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

ஒபன் ஸ்கூல்

பல்வேறு காரணங் களால் பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாத மாணவர்கள், இந்தக் கல்விமுறையைத் தேர்ந்தெடுக்கலாம். செகண்டரி கோர்ஸ் (பத்தாம் வகுப்பு), சீனியர் செகண்டரி கோர்ஸ் (பன்னிரண்டாம் வகுப்பு) என இரு நிலைத் தேர்வுகள் உண்டு. வீட்டிலிருந்தே டிஸ்டன்ஸ் எஜுகேஷன் மூலம் படிப்பதால், தேர்வு களுக்கு மட்டும் சென் றால் போதும்.

இப்படி கல்விச் சந்தையில் பலதரப்பட்ட சிலபஸ்கள் உள்ளன. உயர்நிலைக் கல்வியிலும் மேற்படிப்பிலும் பொறியியல், மருத்துவம் என்ற வட்டத்துக்குள் அடைக்காமல் மாணவர்களின் விருப்பதுக்கு ஏற்ப பாடங்களைத் தேர்ந்தெடுத்தால், அதில் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி, நல்ல வேலைவாய்ப்புகளை அவர்களே உருவாக்கிக்கொள்ள வழிவகுக்கும்!’’

- அழுத்தமாகச் சொல்லி முடித்தார், ப.சிவக்குமார்.

ஐ.மா.கிருத்திகா,படங்கள்:ச.பிரசாந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஒரு டஜன் யோசனைகள்!
வழிகாட்டும் ஒலி
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close