பிளாஸ்டிக் டெக்னாலஜி... பிரமாத எதிர்காலம்!

பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் துறையின் பாடப்பிரிவுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றிச் சொல்கிறார், சென்னை, கிண்டியில் உள்ள சி.ஐ.பி.இ.டி (CIPET - Central Institute of Plastics Engineering and Technology) கல்லூரியின் முதல்வர் சுகுமார்.

ப்ளஸ் டூ-வில் எந்த குரூப்?

பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், உயிரியல், கணினி அறிவியல் அல்லது தொழில் சார்பு பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்த மாணவர்கள், பி.இ/பி.டெக்., பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

கட் ஆஃப்... கவுன்சலிங்

மற்ற துறைகளைப் போலவே பன்னிரண்டாம் வகுப்பின் கட் ஆஃப் மதிப்பெண்ணைப் பொறுத்து அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வின் மூலம் மாணவர்களுக்குக் கல்லூரிச் சேர்க்கை நடைபெறும். கோவை பி.எஸ்.ஜி, சென்னை எஸ்.எஸ்.என் மற்றும் பல சுயநிதிக் கல்லூரிகளும், மத்திய அரசின் மினிஸ்ட்ரி ஆஃப் கெமிக்கல்ஸின் கீழ் கிண்டியில் செயல்படும் CIPET தொழில்நுட்பக் கல்லூரியும் பி.இ., பிளாஸ்டிக் இன்ஜினீயரிங்கில் இளங்கலை பட்டம் வழங்குகின்றன. பாலிடெக்னிக்கில் டிப்ளோமா இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி (DPT), டிப்ளோமா இன் பிளாஸ்டிக் மோல்ட் டெக்னாலஜி (DPMT) முடித்தவர்கள் லேட்டரல் என்ட்ரி மூலம் நேரடியாக பொறியியல் இரண்டாமாண்டில் சேரலாம்.

ஷார்ட் டெர்ம் கோர்ஸ்கள்

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் வழங்கும் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் சார்ந்த பி.பி.எம்.ஓ (PPMO - Plastics Processing Machine Operator), ஐ.எம்.ஓ (IMO - Injection Molding machine Operator) போன்ற ஆறு மாத கால சிறப்புப் பயிற்சிகள் பெறலாம். பிளாஸ்டிக் துறையில் வேலைவாய்ப்பை வழங்கவல்லவை இந்தப் பயிற்சிகள்.

சிலபஸ்

டெக்னிகல் சப்போர்ட் சர்வீசஸ், டிசைனிங், மோல்டிங் போன்றவற்றில் நல்ல அறிவு மற்றும் CAD, CAM, CAE போன்ற டிசைனிங் சாஃப்ட்வேர்களை கையாளப் பயிற்சி என கோர்ஸை தெளிவுற முடித்தால், பிளாஸ்டிக் துறையில் வளமான வரவேற்பு பெறலாம். மேலும் கல்லூரிப் படிப்பின்போது இன்பிளான்ட் டிரெயினிங் செல்வது தொழில் அறிவை மேம்படுத்துவதோடு வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கும். ஆண்களைப் போலவே பெண்களும் இத்துறையை தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம். விருப்பமும் செயல்திறனுமே முக்கியம்.

மேற்படிப்பு

எம்.இ அல்லது எம்.டெக்., மெட்டீரியல் சயின்ஸ், பிளாஸ்டிக் டெக்னாலஜி என முதுநிலைப் பட்டம் பெறலாம். எம்.எஸ்ஸி இன் பாலிமர் சயின்ஸ் பட்டம் பெற்று ஆய்வுகளிலும் ஈடுபடலாம். நம் நாட்டின் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் துறையின் கீழ், பாலிமர் மெட்டீரியல்ஸ் அண்ட் புராடக்ட் டிசைன் இண்டக்ரேட்டட் கோர்ஸுக்கென்றே LARPM - ARSTPS என்ற இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. இதில் சேர்ந்து புதிய கண்டுபிடிப்புகளுக்கு பங்களித்து விஞ்ஞானி ஆகலாம். புவனேஸ்வரில் உள்ள மத்திய அரசின் தொழிற்கூடத்தில் எம்.டெக் இன் பாலிமர் நானோ டெக்னாலஜி துறை செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு

பெரும்பாலும் மாணவர்கள் மெக்கானிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் ஆகிய துறைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பதால், பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகம், போட்டி குறைவு. இன்று 11 மில்லியன் டன்னாக இருக்கும் பிளாஸ்டிக் டிமாண்ட், 2020-ல் 20 மில்லியன் டன்னாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் TAFE, L&T, SAMSUNG, VKC போன்ற உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான டிமாண்ட் அதிகம். சமீப காலங்களில் இந்நிறுவனங்களின் அசுர வளர்ச்சியே, இத்துறையின் உறுதியான வேலைவாய்ப்புக்குச் சான்று!

கேம்பஸ் இன்டர்வியூ

தமிழ்நாட்டில் சுமார் 6,500 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளும், சென்னையில் மட்டும் கிட்டதட்ட 1,500 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வரும் துறை சார்ந்த நிறுவனங்கள் புத்தக அறிவைவிட செயல்திறன் அறிவையே மாணவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள். எனினும் மாணவர்கள் தங்கள் ஒட்டுமொத்த மதிபெண்களின் சராசரியை 6-க்கு குறையாமல் வைத்திருப்பது அவசியம்.

பா.நரேஷ், படம்:ம.நவீன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick