Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சோஷியல் மீடியா சீண்டல்கள்!

-வக்கிர வலையும், தப்பிக்கும் விதமும்...

மீபத்தில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களின் நிவாரணப் பணிகளுக்கு இணைந்த கைகளில், வளைகரங்களும் பல! இளம்பெண்களில் இருந்து இல்லத்தரசிகள் வரை, பொருள் உதவி மட்டுமல்லாது, உடல் உழைப்பையும் தந்தது, பலரும் அறியாதது. அப்படி நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் மற்றும் உரியவர்களிடம் சேர்க்கும் பணிகளுக்கான சமூகவலைதள குறிப்புகளில் தங்களின் மொபைல் எண்களை அளித்தனர் பெண்கள் பலர்.

‘ரொம்ப துயரமான ஒரு சூழலில், பாதிக்கப் பட்டவங்களுக்கு உதவும் நோக்கத்தில் அப்படி பகிர்ந்த எங்களோட மொபைல் எண்களுக்கு, சில வக்கிர ஆண்களிடம் இருந்து அநாவசிய போன் கால்களும், அசிங்கமான மெசேஜ்களும் வந்த அதிர்ச்சியை என்னனு சொல்ல?! அது மனசைரொம்பவே காயப்படுத்தினதோட, கோபப் படுத்திருச்சு.  உன்னதமான செயலுக்காக பெண்கள் பொதுவெளிக்கு வரும் போதுகூட அநாகரிகமா நடந்துக்கிற ஆண் ஜென் மங்கள் இருக்கிற இந்த சமூகம், ரொம்ப வருத்தம் தருது!’

- நிவாரணப் பணிகளில் களத்தில் நின்ற தோழி ஒருவரின் ஃபேஸ்புக் பதிவு ஆதங்கம் இது.  

சென்னையில் உள்ள ‘காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்’டின் உரிமையாளரும், தொழில் நுட்பம் சார்ந்த பல புத்தகங்களை எழுதியவருமான ‘காம்கேர்’ கே.புவனேஸ்வரி, பொதுவெளியில் பெண்களை, ஆண்கள் அணுகும் முறையில் உள்ள பிழைகளைப் பேசினார்...

‘‘வெள்ள நிவாரண சம்பவத்தில் மட்டுமல்ல... ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் சுதந்திரமாக இயங்க நினைக்கும் பெண்கள், வக்கிர ஆண்களின் தாக்குதல்களுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாகவே இருக்கிறது. இணையவெளியிலும், தான் கொள்ளும் சுதந்திரத்தை பெண்ணும் பெறுவதில், பெரும்பாலான ஆண் மனம் ஒப்புவதில்லை.

சமூக வலைதளங்களில் பல துறைகள் சார்ந்த பெண்களின் பயனுள்ள பதிவுகள், உதவிக் குறிப்புகள், சமூக அக்கறை, சளைக்காத தைரியமெல்லாம் பாராட்டுகளுக்கு உரியவை. ஆனால், ‘என் எண்ணங்களை நான் வெளிப்படுத்த எனக்கு யார் அனுமதியும் தேவையில்லை’ என அப்படித் துடிப்புடன் செயல்படும் பெண்களின் பதிவுகள், ஆணாதிக்கர்களை தொந்தரவு செய்கிறது. குறிப்பாக, தான் விரும்பிய தன் புகைப்படத்தை ஒரு பெண் பதிவிட்டால்கூட, ‘அப்போ இவளுக்கு மெசேஜ் அனுப்பலாம்’ என்ற மனக்கோளாறு ஏற்பட்டுவிடுகிறது ஆண்கள் பலருக்கு! இன்னும் சிலர் ஆபாச மெசேஜ்கள், படங்கள் என அனுப்பக் கிளம்பிவிடுகிறார்கள்.

21-ம் நூற்றாண்டில், `4ஜி’ நெட்டில், இணையவெளியில் ஒரு பெண்ணை எதிர்கொள்ளும்போதும், அவளைப் பெண் என்ற உடலாக மட்டுமே எதிர்கொள்வதுதான் ஆண் சமூகத்தின் அராஜகம், அவலம்! அதிலும், ஒரு முக்கிய சமூகப் பணியின் அவசரத் தேவைக்காக தங்கள் தொடர்பு எண்ணைப் பதிவிட்ட பெண்களுக்கு அந்த எண்ணில் தொந்தரவு கொடுப்பது என்பது சகிக்க முடியாதது, மன்னிக்க முடியாதது.

இணையவெளிக்கு வராத பெண்கள், இனிவரும் யுகத்தில் இருக்கப்போவதில்லை. இந்த அநாகரிக ஆண்களின் வீட்டில் இருந்தும் நாளை அவர்களின் தங்கையோ, பெண்ணோ ஃபேஸ்புக், ட்விட்டருக்கு வரலாம். அவர்களும் மற்ற ஆண்களால் இப்படித்தான், இப்படி அசிங்கம் படிந்த மனதுடன்தான் அணுகப்படுவார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் பொதுவிதியாக ஏற்கிறீர்களா? சிந்தியுங்கள்.’’

- சாட்டையடி கொடுத்தார் புவனேஸ்வரி.

சா.வடிவரசு


உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்!

மூக வலைதளங்களில் இயங்கும்போது பெண்கள், தங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள ‘காம்கேர்’ புவனேஸ்வரி தரும் டிப்ஸ்...

 ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் முடிந்தவரை புகைப்படம் பதிவிடுவதைத் தவிர்க்கலாம். மீறி பதிவிட்டாலும் நட்பில் உள்ளவர்கள் மட்டுமே பார்க்கும் விதமாக செட்டிங்ஸை பலப்படுத்த வேண்டும்.

 பொதுவாக 5, 10 நண்பர்களிடமே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு எனும்போது, 5,000 நண்பர்களை, அதிலும் நேரடியாக அறியாதவர்களை நண்பர்களாகக் கொள்ளும்போது பிரச்னைகளும் பெருகவே செய்யும். எனவே, ‘ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட்’டை அக்சப்ட் செய்யும்போதே அதிக கவனத்துடன் ஃபில்டர் செய்துவிடுவது நல்லது.

 சாட் விண்டோ கூடுமானவரை ஆஃப்லைனில் இருக்கட்டும். நள்ளிரவில் ஆன்லைனில் வேலை செய்வதை, அநாவசியமாக பிறர் அறியும் சந்தர்ப்பத்தைத இதன் மூலம் தவிர்க்கலாம்.

 சமூக வலைதளங்களில் வீணர்களின் வீண் வம்புகளுக்குப் பதில் சொல்லாதிருப்பது, வெட்டிப் பேச்சுகளில் கலந்துகொள்ளாமலிருப்பது, தரம் குலைக்கும் உரையாடல்களுக்கு இடம் கொடுக்காமலிருப்பது என தேவையற்றவைகளை தவிர்க்கலாம்.

 திறமையை வளர்த்துக்கொள்ளவும், தொழிலை விரிவுபடுத்தவும், வேலையில் முன்னேறவும், சமூக சேவைகளுக்கும் பயன்படுத்தலாம். நேரத்தையும், உழைப்பையும் சேமிக்கலாம்.

இவையெல்லாம் கட்டுப்பாடுகள் அல்ல, அயோக்கியர்கள் அண்டாமல் இருப்பதற்கான வேலியே!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வேலைவாய்ப்பை வசப்படுத்தும் புராஜெக்ட் வொர்க்!
டூனி கிஃப்ட்ஸ்... சூப்பர் டூப்பர் ஹிட்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close