ஒரு பயிற்சி... நல்ல முயற்சி!

ன்றைய காலகட்டத்தில் இணையவழிக் கல்வி மிகவும் அவசியமான ஒன்று. அதைக் கருத்தில்கொண்டு எஸ்.சி.ஈ.ஆர்.டி (SCERT- State Council of Educational Research and Training) இயக்குநரின் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுக்க, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு அங்கமாக, சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள கிரசன்ட் பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலைய விரிவுரையாளரான பிருந்தா, ‘‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களில் விருப்பமுள்ள 50 ஆசிரியர்களைத் தேர்வு செய்து, மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆசிரியர்கள் இணைய வழியில் பல செய்திகளைத் தெரிந்துகொண்டு, பிராக்டிகலாகப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்போது, மாணவர்களுக்கு எளிதில் புரியும். மேலும், பள்ளி நிகழ்ச்சியைத் தொகுத்து ஆவணப்படுத்தவும், தொகுத்த இணைய வழி சாஃப்ட்வேர் பாடங்களை மற்ற ஆசிரியர்களுக்கு கொடுக்கவும் இந்தப் பயிற்சி உதவும்.

மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பில் முதல் நாள் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதுவது, மைக்ரோசாஃப்ட்டில் யாமர் (Yammer) போன்ற பல்வேறு சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்துவது பற்றியும், இரண்டாம் நாள் என்.ஹெச்.எம் ரைட்டர் மற்றும் ஆட்டோகொலாஜ் (Autocollage) சாஃப்ட்வேர்களின் பயன்பாடுகளை பற்றியும், மூன்றாம் நாள் ஹாட் பொட்டேட்டோ (Hot Potato) சாஃப்ட்வேர் மற்றும் யூடியூப், கூகுள் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு சாஃப்ட்வேர் பயிற்சியும் முடிந்தவுடன் ஒரு டெஸ்ட் வைத்து, ஆசிரியர்கள் அதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொண்டார்களா என்பதை உறுதிபடுத்திய பின்தான் அடுத்த சாஃப்ட்வேர் பயிற்சியைக் கொடுத்தோம்’’ என்றார்.

பட்டதாரி ஆசிரியரும், நிகழ்ச்சியின் கருத்தாளருமான அன்பழகன், ‘‘ஏராளமான ஆசிரியர்கள் இன்றளவும் கணினியை ஒரு பயத்துடனே ஆன் செய்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் புகுத்தப்பட்டிருந்தாலும், கல்வியில் குறைவாகவே புகுத்தப்பட்டுள்ளது. எனவேதான் இந்தப் பயிற்சி. இதன் மூலம் மாணவர்களுக்குப் பாடப்புத்தகத்தில் உள்ள எழுத்து வடிவத்தை தவிர, இணைய வழி சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி காட்சி வடிவமாகவும், வீடியோவாகவும் பாடங்களை நடத்தும்போது, அவற்றை மாணவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்’’ என்றார்.

பயிற்சி பெற்ற ஆசிரியை ஜபீன், ‘‘இன்று ஆசிரியர்களைக் காட்டிலும் மாணவர்கள் அதிக தொழிற்நுட்பங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஈடுகொடுக்க இனி நாங்கள் தயார். இன்னொரு பக்கம், கிராமப்பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் கணினி தொழில்நுட்பங்களைப் பற்றி அதிகம் தெரியாமலே இருப்பார்கள். இனி அந்த நிலைமையையும் மாற்றுவோம்!’’ என்றார் அக்கறையுடன்!

நல்ல முயற்சி... இந்தப் பயிற்சி!

கு.ஆனந்தராஜ்  படங்கள்:ரா.வருண் பிரசாத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick