Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"ஈவ்டீஸிங் பண்றீங்களா... கைகொடுங்க!”

ஷாக் கொடுக்கும் மாணவர்கள்

'குருக்ஷேத்ரா இன்டர்நேஷனல் டெக்னோ மேனேஜ்மெண்ட் ஃபெஸ்ட்' என்ற விழாவை, ஜனவரி 28 முதல் 31-ம் தேதி வரை விமரிசையாகக் கொண்டாடியது சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி.

கடந்த 2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த குருக்ஷேத்ரா, ஒவ்வொரு வருடமும் இளம் மாணவர்களின் அற்புதமான டெக்னாலஜி படைப்புகளால் இதுவரை வெற்றிகரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை, படைப்புகளை காண்பிப்பார்கள்.

யாரெல்லாம் குருக்ஷேத்ராவில் புராஜெக்ட் செய்ய விரும்புகிறார்களோ அவர்களுக்கு அழைப்பு விடுத்து, அதில் பெஸ்ட் புராஜெக்ட்டை செய்வதற்கு நிதியுதவி அளிக்கிறது குருக்ஷேத்ரா. அந்த வகையில் பெண்களுக்கான பாதுகாப்பு கவசமாக, 'எலெக்ட்ரானிக் க்ளோ' என்ற கையுறையைத் தயாரித்து பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள் இங்கே மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்களான வினோதா, கௌஷிக ஜனனி மற்றும் நூர் அப்துல்.

ஈவ்டீஸிங்ல இருந்து தப்பிக்க, மிளகாய்ப் பொடி, பெப்பர் ஸ்பிரே வரிசையில் லேட்டஸ்ட் வெர்ஷன்... ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் இந்த எலெக்ட்ரானிக் கிளவுஸ்!

''மிளகாய்ப் பொடி, பெப்பர் ஸ்பிரேயை எல்லாம் ஹேண்ட்பேக்ல இருந்து எடுக்குற நொடியில், அல்லது எடுக்குறதைப் பார்க்குற சந்தர்ப்பத்தில் அயோக்கியர்கள் சுதாரிக்கவோ, அதை நம்மிடம் இருந்து பறிக்கவோ அதிக வாய்ப்பிருக்கு. சொல்லப்போனா, வெளிநாடுகளில் சுயபாதுகாப்புக்காகப் பயன்படுத்துற எலெக்ட்ரானிக் கன், எலெக்ட்ரானிக் பேனாக்களில் கூட, இந்தப் பிரச்னை இருக்கு. ஆனா, இந்த கிளவுஸில் அந்தப் பிரச்னை எல்லாம் இல்ல. கையோட மாட்டிக்கலாம்; தேவைப்படும்போது பயன்படுத்திக்கலாம். தவறான எண்ணத்தோட உங்களை ஒருத்தன் நெருங்கினா, நீங்க ஜஸ்ட் அவனைத் தொட்டா போதும்... ஷாக் அடிச்சிடும்!''

கிளவுஸ் மாட்டிய கையோடு நம்மைத் தொடுவது போல் ஜாலி பயம் காட்டிச் சொல்கிறார், வினோதா.

கிளவுஸ் வடிவமைப்பு மற்றும் செயல்முறையை, ''நான் சொல்றேன்... நான் சொல்றேன்!'' என்று முன் வந்தார் கௌஷிக ஜனனி.

''இந்த கிளவுஸ்ல நாங்க அதிக மின்னழுத்தம் உள்ள சர்க்யூட்ஸ் பயன்படுத்திருக்கோம். இதுக்குள்ள வெளிய தெரியாதபடி ஒரு பட்டன் வெச்சிருக்கோம். ஆபத்து சமயத்துல அந்த பட்டனை அழுத்திட்டு, எதிரி மேல கையை வெச்சிட்டா... அடிக்குற ஷாக்ல அவன் ச்சும்மா அதிர்ந்திடுவான்ல! அந்த நேரத்தில் நாம அங்கிருந்து தப்பிச்சுடலாம்!''

ஆக்‌ஷன் சீக்வன்ஸ் போல் சொன்னார், கௌஷிக ஜனனி.

''போட்டிருக்குறவங்களுக்கும் ஷாக் அடிக்குமானு பயம் வேண்டாம் பாஸ்....'' என்ற நூர் அப்துல், ''இது 100 பர்சன்ட் பாதுகாப்பானது. பட்டன் அழுத்தினா தவிர, மற்ற சமயங்களில் ஷாக் அடிக்காது. பயன்படுத்துறவங்க இந்த கிளவுஸ் அணிந்து தாராளமா வண்டி ஓட்டலாம், இரும்புக் கம்பியைப் பிடிக்கலாம். எதிரியைத் தாக்க நினைச்சு நாம பட்டன் அழுத்தும்போது, நிலைதடுமாற வைக்கும் அளவுக்கான மின்சாரம்தான் தாக்கும். இதைவிட அதிகப்படியான ஆபத்துகள் தராது. ஒருவேளை எதிரி மழையில் நனைந்தோ, வியர்வை வழிந்தோ இருந்தா, அவங்களுக்கு சரும எரிச்சல் ஏற்படும் வாய்ப்பிருக்கு!'' என்று 'நாங்க ரொம்ப நல்லவன்ப்பா!’ மேட்டர் சொன்னார், நூர் அப்துல்.

''இந்த கிளவுஸில் எல்லா எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களையும், கிளவுஸ் மேலதான் பொருத்தியிருக்கோம். அதனால, பார்க்கக் கொஞ்சம் பெருசா தெரியும். எல்லோரும் விரும்புற மாதிரி அந்தக் கருவியை எல்லாம் பிரின்ட்டடா மாத்துறது, அவரவர்க்கு ஏற்ற சைஸ்களில் தயாரிக்குறதுனு இன்னும் கொஞ்சம் வேலைகள் முடிச்சிட்டு, இதை மார்க்்கெட்டுக்கு கொண்டு வரலாம்னு இருக்கோம்!''

கிளவுஸ் மாட்டிய கையுடன் கைகுலுக்கு கிறார்கள், மாணவர்கள்!

ஆத்தீ!

பி.ஆனந்தி, படங்கள்: ரா.வருண் பிரசாத்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
‘‘மரம் வெட்டுங்கள்!’’
ட்ரீம் புரபோசல்... டீல் புரபோசல்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close