’கொர்ர்ர்ர்’ ருக்கு குட்பை!

சா.வடிவரசு

''நான் தூங்கும்போது சத்தமாகக் குறட்டை விடுவேன். ஆரம்பத்தில் கிண்டல் செய்த கணவர், பின் கோபிக்க ஆரம்பித்தார். இப்போது 'சகிக்கவே முடியலை, உன் குறட்டையால என் தூக்கம் கெடுது’ என்று வெறுத்து ஹாலில் படுக்க ஆரம்பித்துவிட்டார். இதை வெளியில் சொல்லவும் முடியவில்லை. என் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?''

- திருச்சியைச் சேர்ந்த இந்த வாசகியின் பிரச்னைக்குப் பதில் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் டாக்டர் குமரேசன்.

''குறட்டை என்பதைப் பழக்கம் என்றும், பரம்பரை என்றும்தான் பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், மற்றவர்களைத் தொந்தரவு செய்யுமளவுக்கு குறட்டை விடுவது, ஒரு நோய். குறட்டைத் தொந்தரவு உள்ளவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகமாகிறது என்பது அதிர்ச்சித் தகவல்.

பொதுவாக, குறட்டைக்கு முக்கியக் காரணம் மூக்கடைப்பு. பிற காரணங்களும் இருக்கலாம் என்பதால், அதை எண்டோஸ்கோபி போன்ற பரிசோதனை மூலமாக துல்லியமாகக் கண்டறிவோம். பிரச்னை ஆரம்ப கட்டத்திலோ, எளிய காரணியால் ஏற்பட்டதாகவோ இருந்தால், பழக்க வழக்கத்தில் சில மாறுதல்களைப் பரிந்துரைப்போம். உதாரணமாக, நாக்கு தளர்ந்துபோகாமல் இருப்பது, மல்லாந்து படுப்பதைத் தவிர்ப்பது, உடல் எடையைக் குறைப்பது, மது, புகைப்பழக்கம் போன்றவற்றை அடியோடு விடுவது, இரவு உறங்குவதற்கு முன், மூக்கில் அடைப்பின்றி நன்றாகத் திறந்திருக்கும்படி சுத்தம் செய்வது, மூக்கு வறண்டு போகாமல் பார்த்துக்கொள்வது, தலையணையை அடிக்கடி மாற்றுவது உள்ளிட்ட அடிப்படை விஷயங்களைப் பின்பற்றச் சொல்வோம்.

பிரச்னை அடுத்த கட்டத்தில் இருந்தால், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டியூப் போன்ற சாதனங்களை மூக்கில் பொருத்திக்கொண்டு தூங்க வலியுறுத்துவோம். அதைவிட பெரிய பிரச்னை எனில், அறுவை சிகிச்சை அவசியம். அறுவை சிகிச்சைக்குப் பின்னும், மருத்துவர்கள் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்'' என்று வலியுறுத்தினார்!

'நைட் குறட்டை விடுறா டாக்டர்... தூங்க முடியல... அதனால டைவர்ஸ் வேணும்!’ என்பதை ஒரு காலத்தில் ஜோக் ஆகப் படித்தோம். இன்று உண்மையிலேயே குறட்டையால் பிரிந்த உறவுகள் பல. உடனடியாக ஒரு அனுபவமிக்க மருத்துவரை அணுகுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick