Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

40 வயதிலும் நாட்டியம்...

வியக்க வைக்கும் விக்ரமன் மனைவிபொன்.விமலா, படம்: வீ.நாகமணி

கொடூரமான துச்சாதனன் தன் வலிமை முழுவதும் பிரயோகித்து, திரௌபதி மார்பில் மூடியிருக்கும் சேலையைப் பற்றி இழுக்க, செய்வதறியாத திரௌபதி அலறிக்கொண்டே தன் இரு கைகளையும் உயர்த்தி, 'கண்ணா... கண்ணா...’ என்றழைக்கிறாள். கண்ணன், திரௌபதிக்கு முடிவில்லாத ஆடை அளிக்கிறார். அதை இழுத்து இழுத்து சோர்ந்த துச்சாதனன் வெட்கிக் குறுக, சபதம் விடுக்கிறாள் திரௌபதி.

மகாபாரதத்தில் வரும் திரௌபதி துகில் உரியப்படும் இந்தக் காட்சி, சினிமா தொடங்கி, சீரியல் வரை நாம் பலமுறை பார்த்தது. நடன மேடையில், துச்சாதனன், திரௌபதி, கண்ணன் என இக்காட்சியின் அத்தனை கதாபாத்திரங்களையும் தான் ஒருத்தியே ஏற்று, குச்சிப்புடி நடனத்தின் மூலம் ஆடி, காண்போரை வியப்பில் ஆழ்த்தி, அத்தனை கண்களையும் ஜெயப்பிரியா தன்வசம் கட்டி இழுத்த அபிநய நிமிடங்கள்... பரவசம்! இந்த வருடம் டெல்லி, தெலுங்கு சங்கம் வழங்கிய 'சிறந்த குச்சிப்புடி நடனக் கலைஞர் விருது’ பெற்ற இவர், இயக்குநர் விக்ரமனின் மனைவி.

தஞ்சாவூர் பெயின்ட்டிங், வீணை,பாடல், காஸ்ட்யூம் டிசைனிங், குறும்பட இயக்குநர், விதவிதமான சமையல் என்று பல திறமைகளின் ஒரு முகமாக இருக்கும் ஜெயப்பிரியா விக்ரமனின் குச்சிப்புடி நடனத்தை அரங்கில் கண்ட வியப்பு அகலாமல், நாட்டியம் முடிந்ததும் கைகுலுக்கிய வாறு பேசினோம் அவரிடம்.

''மூணு வயசுல இருந்து குச்சிப்புடி நடனம் கத்துக்க ஆரம்பிச்சேன்.

94-ம் வருஷம் எங்களுக்குக் கல்யாணம் ஆச்சு. அதுக்கு முன்ன வரைக்குமே கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமான மேடைகள்ல நாட்டியம் ஆடியிருக்கேன். அது எனக்குப் பொழுதுபோக்கு இல்ல. எல்லா வகையிலும் என் மனசை பக்குவமா வெச்சிக்கிற மந்திரம்தான், நாட்டியம் எனக்கு!

கல்யாணத்துக்குப் பிறகு குழந்தைகள் பிறந்ததால, 7 வருஷம் இடைவெளி விட்டுட்டு, மறுபடியும் மேடை ஏற ஆரம்பிச்சேன். என் கணவர், பிள்ளைகள்னு எல்லோருமே என்னோட நடனத்துக்கு ஊக்கம் கொடுத்துட்டே இருப்பாங்க. கணவரோட ஷூட்டிங்குக்கு நான் போனாலும், என்னோட நடன நிகழ்ச்சிக்கு அவர் வந்தாலும், ரெண்டு பேருமே கணவன்  மனைவி என்பதைவிட, காதலர்களா இருந்து எங்களோட நிறை, குறைகளை மனசு விட்டுப் பகிர்ந்துக்குவோம்.

நடனம் மட்டுமில்லாம என் ஆர்வங்கள் இன்னும் நிறைய. வீட்டில் சும்மா இருக்கணும்னே தோணாது. காலையில் நடனம். அப்புறம் தஞ்சாவூர் பெயின்ட்டிங் பண்ண ஆரம்பிச்சுடுவேன். அடுத்து, மணக்க மணக்க சமையல். குறிப்பா, நான் செய்யும் முருங்கைக்காய் கூட்டாஞ்சோறுன்னா வீட்டுல எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். சாயங்காலம் வீட்டுல விளக்கேத்திட்டு வீணை வாசிக்க ஆரம்பிச்சிடுவேன். இப்படி நாள் முழுக்க பரபரனு ஓடிட்டே இருக்கணும் எனக்கு. மேடையில் ஆடும்போது என் கண்ணுக்கு முன்னாடி இருக்கிற ஆடியன்ஸ் யாருமே தெரிய மாட்டாங்க. முழுக்க முழுக்க நடனத்துக்கான கதாபாத்திரமாவே மனசைக் கொண்டுபோயிடுவேன்.

ஒரு முழு நீளக் கதையை நடனம் மூலமா சொல்றது அவ்வளவு சுலபம் கிடையாது. இன்னிக்கு இந்த மேடையில் சுப்ரபாதத்துல ஆரம்பிச்சு... கஜேந்திரமோட்சம், ராமாயணம், மகாபாரதம், திருப்பாவைனு பல கதைகளை குச்சிப்புடி மூலமா அபிநயம் செய்தப்போ, பார்த்தவங்க எல்லோரும் ரசிச்சு பாராட்டினது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு.

மேடைக் காட்சியில் வரக் கூடிய பல கதாபாத்திரங்களையும் ஒருவரே ஏற்று மாறி மாறி அபிநயிக்கிறதை 'ஏகபாத்திர அபிநயம்’னு சொல்வோம். நிமிஷத்துக்கு நிமிஷம் கதாபாத்திரம் மாறும்போது, ஆடியன்ஸுக்குக் குழப்பம் இல்லாம புரியுற அளவுக்கு முகத்தில் நம்ம அபிநயம் இருக்கணும். அப்படி புரிஞ்சு அவங்களை ரசிக்க வெச்சிட்டோம்னா, அதுதான் நம்மோட வெற்றி. நாட்டியத்துக்கு அழகான உடையலங்காரம், சிகை அலங்காரத்தோட கண்களும் அலங்காரத்தோட ரசிகர்கள் கிட்ட பேசணும். நடனத்தில் உச்சரிப்பு இருக்காது. அதனால வார்த்தைகள் மொத்தமும் கண்களால் மட்டுமே பேசப்படணும். அதனால நம்மோட மற்ற பாவனைகளோட கண் பாவனையும் ரொம்பவே முக்கியம்'' என்று நடனத்தின் நெளிவுசுளிவுகளை விவரித்த ஜெயப்பிரியா, தொடர்ந்தார்.

"என் வயசு... 40. இப்பவும் என்னால நடனமாட முடியுதுன்னா, அதுக்குக் காரணம் என் மனசை எப்பவும் இளமையா வெச்சுக்கிறதுதான். வயசாயிடுச்சேனு சோர்ந்து உட்காராம... எது பிடிக்குதோ அதை எப்பவும் தொடர்ந்து செஞ்சிட்டு இருந்தா... வயசான உணர்வை மனம் அறியாமலே மிதக்கும். அதுதான் என் அழகின் ரகசியம்னு நினைக்கிறேன்!''

- இதழ் நிறைந்த புன்னகையுடன் முடித்தார் ஜெயப்பிரியா விக்ரமன்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
இதழோவியம்!
‘‘வெற்றிக்கு அழகு தேவையில்லைனு நிரூபிச்சவ நான்!’’
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close