Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈசனுக்குத் தேர் செய்த இஸ்லாமியர்!

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயில்... சிவபெருமான் எழுந்தருளிய முக்கிய தலங்களில் ஒன்று. 2,000 ஆண்டு பழைமை வாய்ந்த இந்தத் தலம், பல்வேறு புராணக் கதைகளைக் கொண்டது.

வேதபட்டர் என்கிற சிவதொண்டரின் பக்தியை சோதிக்க, அவரை கொடிய வறுமைக்கு உட்படுத்தினார் சிவபெருமான். மனம் தளராத வேதபட்டர், வீடு வீடாகச் சென்று நெல் வாங்கி வந்து இறைவனுக்கு அமுது படைத்து வழிபட்டார். ஒருநாள் கோயில் முன்பாக நெல்லை உலரவைத்து, நீராடச் சென்றார். அந்தச் சமயத்தில் மழை கொட்டித் தீர்த்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நெல் என்னவானதோ என்கிற பதைபதைப்பில் வேத பட்டர் ஓடோடி வந்தார். அங்கோ... சுற்றிலும் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்க, நெல் மட்டும் வெயிலில் காய்ந்துகொண்டு இருந்தது.

உலகுக்காக மழை பெய்வித்தபோதிலும் அங்கு மட்டும் மழை பெய்யாமல் வேலியிட்டு காத்த சிவபெருமானின் சக்தியைக் கண்டு வியந்தார், அப்பகுதியை ஆண்டு வந்த ராமபாண்டிய மன்னன். அது முதல் இப்பகுதியை நெல்வேலி என்று அழைக்கத் தொடங்கினர்.

கோயிலின் முக்கிய விழா, ஆனி மாதத் தேரோட்டத் திருவிழா. கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்தத் திருவிழாவானது 10 நாட்களுக்கு நடைபெறும். இறுதி நாளில் உற்சவர் தேரில் பவனி வரும்போது, 450 டன் எடையும், 35 அடி உயரமும் கொண்ட தேரை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள்.

முக்கிய விழாக்களிலும், நேர்த்திக்கடனுக் காகவும் இக்கோயிலில் உள்ள தங்கத்தேரை இழுப்பது வழக்கம். சுமார் 15 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட இந்தத் தேரை வடிவமைத்தவர், மதுரையை சேர்ந்த இஸ்லாமியர் ரகுமான்.

‘‘இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் உள்ள தேர்களுக்கு தங்கத்தகடு பதிக்கும் பணியை செய்து வருவது எங்கள் குலத் தொழில். இப்புனிதப் பணிக்காக, மகாபலிபுரத்தில் ஆகம விதிகளை முறைப்படி கற்று இருக்கிறேன். மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் தங்கத்தேர் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறேன். என் மன நிறைவை வார்த்தைகளில் சொல்ல முடியாது!’’ என்று நெகிழ்கிறார் ரகுமான்.

- ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன்


325-வது ஆண்டு விழா காணும் அற்புத ஆலயம்!

புதுவை மாநிலம், அரியாங்குப்பத்தில் இருக்கிறது, புனித ஆரோக்கிய அன்னை ஆலயம். சிறிய வேளாங்கண்ணித் திருத்தலம் என்று அழைக்கப்படும் இக்கோயிலைச் சுற்றி சிலுவைப் பாதையின் 14 நிலைகளும் அழகான சிமென்ட் குடில்களில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் செப்டம்பர் 13-ம் தேதி தனது 325-ஆவது ஆண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடத் தயாராகி வருகிறது இந்த ஆலயம்!

 

1690-ம் ஆண்டு ஃபிரெஞ்சு அரசின் அனுமதி யுடன் கத்தோலிக்க சிரியர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம்தான் புதுச்சேரியில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் எனக் கூறப்படுகிறது. ஆலயத்துக்கு அப்போது ‘உற்பவி அன்னை ஆலயம்’ என்று பெயரிடப்பட்டது.

மூன்று நூற்றாண்டுகளைக் கடந்து விழாக்கோலத்திலிருக்கும் இத்தேவாலயம் உள்ளடக்கியிருக்கும் வரலாறுகள் ஏராளம். 1689-ம் ஆண்டு கத்தோலிக்க சிரியர்களால் ஏசு சபையினருக்கு இந்த ஆலயம் நிர்வாக மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தரங்கம்பாடியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய டச்சுக்காரர்களால் ஃபிரெஞ்சு அரசுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்த ஆலயம் தாக்குதலுக்கு உள்ளானது. இப்படி பல தடவை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இப்படி பல போராட்டங்களையும் தாண்டிய இத்திருத்தலம், பின்னாட்களில் நடந்த புனரமைப்புப் பணிகளின்போது ஒட்டுமொத்தமாக இடிந்து விழ, கோபுரம் மட்டுமே எஞ்சியது. இக்கோபுரம் மட்டும்தான் வரலாற்றின் சாட்சியாக இன்றளவும் இத்திருத்தலத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது. பழைமையான அந்தக் கோபுரத்தை இடிக்காமல் அதை மையமாகக்கொண்டு கட்டப்பட்ட ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ஆலயத்தின் பங்குத் தந்தையான ஏ.தாமஸ், ‘‘325-வது ஆண்டு விழாவுக்காக இரவு, பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த மாதம் 6-ம் தேதியிலிருந்து விழா நாளான செப்டம்பர் 13-ம் தேதி வரை நூறு நாட்கள் சிறப்பு வழிபாடுகளையும் ஆரம்பித்து விட்டோம். இங்கு வந்து அன்னையை வேண்டுபவர்களின் அனைத்து விதமான குறைகளையும் அவர் தீர்த்து வைப்பார். குறிப்பாக குழந்தைப்பேறு, திருமணம், வேலைவாய்ப்பு, உடல்நலம் ஆகியவற்றை வேண்டுபவர்கள் இத்திருத்தலத்துக்கு வந்து பலனடைகிறார்கள்!’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.


- ஜெ.முருகன்
படம்: அ.குரூஸ்தனம்


கோரிப்பாளையம் தர்ஹா!

துரை, கோரிப்பாளையம் தர்ஹா, ஒன்றரை ஏக்கர் பரப்பில் சர்வமத ஆலயமாகத் திகழ்கிறது. உடல் நோய், மனநோய்க்கு மட்டுமல்ல... தீராத வறுமை, சக மனிதர்களின் கொடுமை, தள்ளிப்போகும் திருமணம், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வேண்டி என வெளியூர் மக்களும் தேடி வரும் தர்ஹா இது!

பொதுவாக தர்ஹா இருக்கும் இடத்தில் தொழுகைக்கான மசூதி இருக்காது. ஆனால், இங்கு இரண்டும் அருகருகே அமைந்துள்ளன. தர்ஹாவில் அடக்கம் செய்யபட்டிருக்கும் மகான்களின் பெயர் ஹஜ்ரத் ஹாஜா சையத் சுல்தான் அலாவுதீன், ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் சம்சுதீன். இந்த மகான்கள் பிறந்த இடம், தற்போதைய ஆப்கானிஸ்தான்!

 கி.பி. 13-ம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானில் பிறந்த மகான் சுல்தான் அலாவுதீன், முகம்மது நபியின் பேரனான இமாம் உசேன் பரம்பரையில் வந்தவர். இஸ்லாம் மதத்தை பரப்புவதற்காக உறவினர் இருவருடன் இந்தியாவில் கேரளா கடற்கரையில் வந்து இறங்கினார். அற்புதங்கள் நிகழ்த்தி தன் ஆன்மிகப் பணியை முடித்தவர், இலங்கை சென்று சேவை ஆற்றிவிட்டு, தமிழகத்தின் அதிராம்பட்டினத்துக்கு வந்தார். தண்ணீர் பஞ்சத்திலிருந்த அவ்வூர் மக்களுக்கு வற்றாத கிணறு ஒன்றை உருவாக்கிவிட்டு பாப்பாவூருக்கு வந்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த, அந்த ஊர் கைலாசநாதர் கோயில் நிர்வாகியின் மகனை குணப்படுத்தினார்.

மகான், கோரிப்பாளையம் வந்து சேர்ந்த போது, மதுரையில் ஆட்சி புரிந்த மன்னன் கூன்பாண்டியனுக்கு  தீராத  வயிற்று வலி. மகானின் அருளைக் கேள்விப்பட்டு கோரிப்பாளையம் வந்து அவரிடம் பிரார்த்தனை செய்யச் சொல்ல, வியாதி குணமானது. மகிழ்ச்சியில் ஆறு கிராமங்களைத் தானமாக எழுதி வைத்தான் மன்னன். அதுமட்டுமல்லாமல், இன்று கோரிப்பாளையம் தர்ஹா மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும், 400 டன் எடையுள்ள, ஒரே கல்லால் செதுக்கப்பட்ட டூம், கூன் பாண்டியன் வைத்ததுதான்.

பின் இரண்டு வருடங்கள் டெல்லி சுல்தானின் பிரதிநிதியாக, மக்கள் விரும்பும் வகையில் மகான் ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. இறுதியாக திருவண்ணாமலையில் நடந்த போரில் சுல்தான் அலாவுதீன் கொல்லப் பட்டார். அங்கிருந்து அவர் உடலை எடுத்து வந்து கோரிப்பளையத்தில் அடக்கம் செய்தார்கள். அன்றிலிருந்து இது தர்ஹாவானது. அவருக்குப் பின் அவர் தம்பி சுல்தான் சம்சுதீன் நிர்வாகத்தை கவனித்து வர, அவர் இறந்த பின்பு அவருடைய உடலும் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த இரு மகான்களும் நமக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து நம்முடைய இன்னல்களை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில், மக்கள், குறிப்பாக இஸ்லாம் அல்லாத மக்களும் அதிகம் வந்தவண்ணம் உள்ளனர்!

- செ.சல்மான்
படம்: ஈ.ஜெ.நந்தகுமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கலப்பட உணவுப் பொருட்கள்... கண்டுபிடியுங்கள் இப்படி!
"பசங்க கரி எடுத்த காசுல சாப்பிட்டுருக்கோம்!"
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close