Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனைவிகளின் முதல் எதிரி !

மீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். டீ கொடுத்த நண்பரின் மனைவி, ''அண்ணே, இந்த ஒலகத்துலேயே நான் வெறுக்கிற ஒரே விஷயம் என்ன தெரியுமாண்ணே?'' என்றார். நான் சிரித்துக்கொண்டே அவரைப் பார்க்க, பதிலுக்கு அவர் கொஞ்சம்கூட புன்னகைக்காமல் ''செல்போன்!''என்றார். ''ஏன்?'' என்றேன். ''சாயங்காலம் ஆபீஸ் விட்டு வந்ததும் அந்த செல்போனை நோண்ட ஆரம்பிச்சிடுவார். டி.வி பார்க்கிறது, சாப்பிடறது, புக் படிக்கிறதுனு என்ன வேலை செஞ்சாலும், செல்லு கையோடயே தான் இருக்கும். அப்பப்போ அதை எடுத்துப் பாத்துக்கிட்டே இருப்பார். தூக்கம் சொக்குற வரைக்கும் அதுதான் கதி. அப்படியும்கூட, சார்ஜ் போட்டு அவர் கைக்கு எட்டும் தூரமா வெச்சுக்குவார். காலையில அது முகத்துலதான் முழிப்பார். பாத்ரூமுக்கும் எடுத்துட்டுப் போவார். ஆபீஸுக்கு கிளம்பும்போது நாம அவர் காதோடதான் பேசலாம். செல்லை நோண்டிக்கிட்டே நம்மள நிமிந்துகூடப் பாக்காமதான் பதில் சொல்லுவார். வீட்டுல நான் தனியாத்தானே கிடப்பேன்... என்ன, ஏதுன்னு எங்கிட்ட ஒரு வார்த்தை பேசுறதில்ல...''  பொருமித் தீர்த்தார் விரக்தியும் வெறுப்புமாய்!

இது ஏதோ ஒரு நண்பனின் மனைவியின் கூற்று அல்ல. இன்று செல்போனும், அதில் இணைய இணைப்பும், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இத்யாதிகளும் என கணவர்கள் பொழுதைக் கழிக்க, நடுத்தரவர்க்கத்து மனைவிகளுக்கு அது தரும் மனத்தளர்வு நிறைய. செல்போனில் உடனுக்குடன் செய்திப் பரிமாற்றம், கருத்து களை எந்தவிதத் தயக்கமுமின்றி பதிவிடும் சுதந்திரம், இணையப் புரட்சி மூலம் ஒரு நாட்டின் தலை எழுத்தையே மாற்றி அமைக்கலாம் என்பதெல்லாம் சரிதான். ஆபீஸ் டென்ஷன், வீட்டு டென்ஷன்களை சற்றே மறக்க ஒரு ரிலாக்ஸேஷன் தளமாக இருக்க வேண்டிய கருவிக்கு, பல ஆண்களும் அடிமையாகிப் போனதுதான் துயரம். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது, அந்த அடிமைகளின் மனைவிகள்தான்.

அந்தப் பெண், எனக்கு தங்கை முறை. அவர் கணவருக்கு அலுவலக வேலை மாலை 6 மணிக்கே முடிந்துவிடும். ஆனால், அவர் அலுவலகத்தில் இருந்து கிளம்புவது இரவு 10 மணிக்கு. காரணம், அலுவலகத்தில் முகநூலில் நண்பர்களுடன் பேசி, கருத்துகள் பரிமாறி, புரட்சி செய்து களைத்து, பின்னர் அவர் வீடு திரும்ப நள்ளிரவாகிவிடும். என்றோ ஒருநாள் அல்ல, இதுதான் வாடிக்கை. ''நானும் பிள்ளைங்களும் படுத்து தூங்கிடுவோம். 11 மணிக்கு காலிங்பெல் அடிக்கிறவர்கிட்ட, ஏன் லேட்?’னுகூட இப்போவெல்லாம் கேட்கிறதில்ல. காலையில பழையபடி அவசர அவசரமா கௌம்பிப்போகத்தான் சரியா இருக்கும்...''  துயரம் தொண்டையை அடைக்கப் பேசிய தங்கைக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை. முகநூலில் பல நண்பர்களுடன் பல விஷயங்களைப் பேசும் கணவனுக்கு, தன் மனைவியிடம் பேச எதுவுமில்லாமல் போனது துயரமே!

இன்னொரு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவர் மனைவி சொன்னதுதான் நறுக் சுருக்’... ''ஆமா, இவரு காலையில 4 மணிக்கு எல்லாருக்கும் குட்மார்னிங் சொல்லாட்டி அவங்களுக்கு விடியாது பாருங்க!'' விடியும் முன்னே கணவர் படுக்கையில் அமர்ந்தபடி தனது ஆண்ட்ராய்டு மொபைலில் ஊர் உலகத்துக்கு குட்மார்னிங் டைப் பண்ணுவதைப் பார்க்கும் எந்த மனைவிக்கும் எரிச்சல் வரத்தானே செய்யும்.

பெரும்பாலும் மிடில்கிளாஸ் இல்லத்தரசிகளுக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்றால் என்னவென்று தெரிவதில்லை. அவற்றை, ஏதோ தன் கணவனைத் தன்னிடமிருந்து பிரித்துவிடும் மாயசக்தியாகப் பார்க்கிறார்கள். சில பெண்களுக்கு புரிந்தும் புரியாமலே இருக்கின்றன. தன் கணவனுக்கு முகநூலில் ஏராளமான நண்பர்கள் என்றாலே அது அந்த மனைவிகள் வயிற்றில் கொஞ்சம் புளியைக் கரைப்பதாகவே இருக்கிறது. இன்னொரு நண்பரின் மனைவி சொன்னது அதை உறுதிபடுத்துகிறது. அவர் குழந்தை, சிறு விபத்தில் சிக்கி மீண்டபோது செய்தியினைக் கேள்விப்பட்ட அவரின் முகநூல் நண்பர்கள் அவருக்கு போன் செய்து விசாரித்திருக்கிறார்கள். இதில் முக்கால்வாசி வெளிநாட்டிலிருந்து வந்த விசாரிப்பு. ''அதாண்ணே எனக்கும் பயமா இருக்கு. அவங்க ஒலக ஃபேமஸா இருக்கட்டும். அவங்க ஃப்ரெண்ட்ஸா இருக்குற பொண்ணுங்க போட்டோவை எல்லாம் பார்த்தா... என்னை விட்டுப் போய்டுவாங்களோன்னு மனசைக் கலக்குது!''

இணையம் இந்த பயத்தை பல மனைவிகளுக்குத் தந்திருக்கிறது.

''ஒண்ணுமில்ல ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டு இந்த செல்லுல அப்படி என்னதான் பார்க்கிறாரு? பொண்டாட்டி, புள்ள மொகத்த நிமிந்து பாக்காம, பேசாம, ராத்திரி ஒருவேளை ஒண்ணா உக்காந்து சாப்பிடும்போதுகூட அந்த எழவ நோண்டிக்கிட்டே இருக்கிற அளவுக்கு, அப்படி அதுல என்னதான் இருக்கு? அதை தூக்கி வீசினாதான் வருவேன்!'' என்று அம்மா வீட்டுக்கே சென்றுவிட்டார் ஒரு நண்பரின் மனைவி. அந்தளவுக்கு அவருக்குப் புறக்கணிப்பு, அவமானம், தனிமை, தாழ்வுமனப்பான்மையைத் தந்திருக்கிறது அவர் கணவரின் கைப்பேசி.

வாட்ஸ்அப்பில் குழு குழுவாகப் பொழுதுபோக்கி, முகநூலில் முன்பின் அறியாதவர்களுக்கு எல்லாம் வாழ்த்துகளும், ஆறுதல்களும் சொல்லும் கணவன்மார்கள், வீட்டில் அத்தனை பொறுப்புகளையும் தலையில் சுமக்கும் தங்கள் மனைவிகளின் உழைப்புக்கு கொஞ்சம் நன்றிசொன்னால் என்ன? அவர்களின் சிரமங்களுக்கு ஆறுதல் சொன்னால் என்ன? அட, அதைக்கூட அவர்கள் கேட்கவில்லை. 'வீட்டுக்கு வந்தா, அந்தக் கருமத்தை ஓரங்கட்டி வெச்சுட்டு, எங்ககிட்ட பேசணும்!’  இதைவிட ஓர் அடிப்படை உரிமை உலகத்தில் இல்லை.

இறுதியாக... என் நெருங்கிய நண்பன் ஒருவனின் மொபைல் பழுதாகிவிட்டது. அவன் பிறந்த நாள் பரிசாக ஆண்ட்ராய்ட் மொபைல் வாங்கித்தரலாம் என்று அவனிடம் கேட்டேன். ''நீ எனக்கு செல்போன் வாங்கித் தந்தா, 'எப்பப் பார்த்தாலும் செல்லும் கையுமா’னு என் மனைவி திட்டும்போதெல்லாம், 'இதவாங்கிக்கொடுத்தாரு பாருங்க... அவரைச் சொல்லணும்’னு உன்னையும் சேர்த்துத்திட்டுவா... பரவாயில்லையா?!'' என்றான்.

மனைவியின் மிகத் தீவிர எதிரியை, பல கணவர்களும்பாக்கெட்டில் சுமந்துகொண்டுதான் திரிகிறார்கள்!

கணேசகுமாரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஆல் இஸ் வெல்
பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close