இவங்க கணக்கு... தப்பவே தப்பாது!

டீக்கடையில் இருந்து சமூக வலைதளங்கள் வரை கணக்குதான் இப்போது ஹாட் டாப்பிக். கம்ப்யூட்டர், கால்குலேட்டர் வைத்துப் போடும் கணக்கே சறுக்கிவிடும் வேளையில், பள்ளிக்கூடப் பக்கம்கூட ஒதுங்காத நம் பிளாட்பாரக் கடை பா(ர்)ட்டிகள், வியாபாரத்தில் போடும் விறுவிறு கணக்கு, இந்தச் சூழலில் அதிகமாகத்தான் வியக்க வைக்கிறது. வாங்க வியக்கலாம்!

கோவை, பூமார்க்கெட் பகுதியில் பூக்கடை நடத்தி வருபவர் 78 வயது பாப்பாத்தி. `‘மல்லிகை என்ன விலை பாட்டி?’’ என நாம் கேட்ட மறுநொடி, ``கிலோ 200 ரூபாய். ஒரு முழம் பூன்னா 10 ரூபாய். உனக்கு எப்படி வேணும்?’’ என பதிலோடு கேள்வியையும் முன்வைத்தார். `‘முக்கால் கிலோ மல்லிகை எவ்வளவு பாட்டி?’’ எனக் கேட்ட மறுநொடி, ``150 ரூபாய்... அரை கிலோ 100 ரூபாய்’’ என்றார். ‘‘அப்போ, ரெண்டரை கிலோ?’’ என்றதும், ‘‘500 ரூபாய். ரெண்டரை கிலோ வாங்குனா 400 ரூபாய்க்குக்கூட தரலாம். உனக்கு எவ்வளவு வேணும்?’’ என்று கேட்டார்.  `‘சரி, 10 முழம் பூ எவ்வளவு?’’ என்றால், `‘10 முழம் 100 ரூபாய். 80 ரூபாய்க்குத் தரலாம்’’ எனச் சொன்னவரிடம், `‘அப்போ 25 முழம்?’’ என்றோம். ``250 ரூபாய். 200 ரூபாய் கொடு’’ -  மல்லிப்பூவை முழம் போட்டபடியே `‘எத்தனை முழம்?’’ என்று மீண்டும் கேட்ட பாப்பாத்தி, பள்ளிக்கூடம் பக்கம் போனதேயில்லை. 50 வருடங்களாக பூக்கடை நடத்திவரும் அனுபவம் கற்றுத் தந்த கணக்கு அது!

ஜெயங்கொண்டத்தில் கடைவீதியோரம்  காய்கறிக்கடை நடத்துகிறார் மல்லிகா.

‘‘கேரட் கால் கிலோ 10 ரூபாய்; பீன்ஸ் கால் கிலோ 20 ரூபாய்; வெண்டை அரை கிலோ 15 ரூபாய்; அவரை கால் கிலோ 20 ரூபாய்; பாவக்காய் கால் கிலோ 8 ரூபாய்; மிளகாய் 100 கிராம் அஞ்சு ரூபாய்; சுரக்காய் ஓரு கிலோ 20 ரூபாய்; தக்காளி அரை கிலோ 15 ரூபாய்; சாம்பார் வெங்காயம் 100 கிராம் மூணு ரூபாய்...’’ என படபடவென நாம் கேட்ட அயிட்டங்களைப் பையில் வைத்தாறே விலை சொன்னவர், ‘மொத்தம்?’ என்று நாம் கேட்கும் முன்னே, ‘‘மொத்தம் 116 ரூபாய்!’’ என்று சொல்லி அசரடித்தார். ‘‘வெண்டக்காய் வேணாம்’’ என்றோம். ‘‘அப்போ 101’’ என்றார் அடுத்த நொடி. நாம் இரண்டு தேங்காயை எடுத்து வைக்க, ‘‘141’’ என்றார் நம் கைகளை கவனித்தபடி. ‘‘கோச்சிக்காதீங்க. பாவக்காய் வேண்டாம்’’ என்றோம். ‘‘எட்டைக் கழிச்சா..? 133’’ என்றார் அசராமல். ‘‘கோஸ் கால் கிலோ சேருங்க’’ என்ற அடுத்த நொடி, ‘‘அஞ்சி ரூபாய் சேர்த்தா, 138 ரூபாய்’’ என்றார் பெருமூச்சுவிட்டபடி. நமக்கோ புருவங்கள் உயர்ந்தன!

தஞ்சாவூர் பூக்காரத்தெருவில் காய்கறிக் கடை வைத்திருக்கும் கண்டிதம்பட்டைச் சேர்ந்த அஞ்சம்மாளுக்கு, வயது 70. கேட்கும் காய்கறிகளை கவரில் போட்டுக்கொடுக்கும் நொடிகளில் அவர் சொல்லும் மனக்கணக்கு, அழகு. சில பொருட்கள் வாங்கினோம். ‘‘பெரிய தேங்காய் ஒரு காய் 15 ரூபாய்; ஏழு காய் வாங்கியிருக்கீங்க. சின்னத் தேங்காய் 12 ரூபாய்; ஆறு காய் இருக்கு. ரொம்பச் சின்னத் தேங்காய் 10 ரூபாய்; அதுல மூணு காய் வெச்சிருக்கேன். மாம்பழம் ஒரு கூறு 10 ரூபாய்; மூணு கூறு இருக்கு. எலுமிச்சம்பழம் 10 ரூபாய்க்கு மூணு; 30 ரூபாய்க்கு வெச்சிருக்கேன். மொத்தம் 267 ரூபாய்’’ என கண நேரத்தில் அவர் மனக்கணக்கு சொல்லி, இப்படி ஒரே நேரத்தில் பல வாடிக்கையாளர்களைச் சமாளித்துக்கொண்டிருந்தார் அஞ்சம்மாள்.

கிருஷ்ணகிரி, ஆனந்த் தியேட்டர் அருகில்  காய்கறிக் கடை வைத்திருக்கிறார் பர்கூரைச் சேர்ந்த அங்கம்மாள். 90 வயது. ‘கண்ணே சரியா தெரியாதே, இதில் கணக்கு எப்படி..?’ என்ற சந்தேகத்துடன், முதலில் அவர் வைத்திருந்த காய்கறிகளின் விலையைக் கேட்டோம். ‘‘பீட்ரூட் கிலோ 20 ரூபாய், தக்காளி கிலோ 15 ரூபாய், கேரட் கிலோ 20 ரூபாய்,  கத்திரிக்காய் கிலோ 10 ரூபாய், உருளைக்கிழங்கு கிலோ 20 ரூபாய், பீன்ஸ் கிலோ 60 ரூபாய்’’ என படபடவென விலை சொன்ன பாட்டியிடம், `‘20 கிலோ பீட்ரூட் எவ்வளவு’’ - `‘400 ரூபாய்’’; `‘4 கிலோ தக்காளி?’’ - `‘60 ரூபாய்’’; ‘20 கிலோ கேரட்?’  - `‘400 ரூபாய்’’; `‘5 கிலோ கத்திரிக் காய்?’’ - `‘50 ரூபாய்’’; `‘8 கிலோ உருளை?’’ -  `‘180 ரூபாய்’’ (இதில் மட்டும் 20 ரூபாய் அதிமாகச் சொன்னார்)’; ‘`10 கிலோ பீன்ஸ்?’’ என்றபோது, ‘`600 ரூபாய்’’ என நொடிகளில் பதில் சொல்லிக்கொண்டிருந்த பாட்டி நிறுத்தி, `‘நீ காய் வாங்க வரல. இந்தக் கெழவிக்கு கணக்குத் தெரியுதானு வௌயாண்டுபார்க்குற’ என்று சூடானவரை கூல் செய்து, வாங்கினோம் சில காய்கறிகள்!

ச.ஜெ.ரவி, எம்.திலீபன், எம்.புண்ணியமூர்த்தி, கே.குணசீலன் 

 படங்கள்: வி.சதீஸ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick