தூக்க நேர்ச்சை திருவிழா!

ன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில். தமிழக - கேரள எல்லையோரத்தில் அமைந்திருந்தாலும், வழிபாட்டு முறைகள் எல்லாம் கேரள கலாசாரத்தை ஒத்துள்ளது. இங்கு நடைபெறும் தூக்க நேர்ச்சை திருவிழா, வெகுபிரபலம்!

குழந்தை வரம் வேண்டுபவர்களும், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு வேண்டும் பெற்றோர்களும் தூக்க நேர்ச்சை நேர்த்திக்கடன் செலுத்த வருவர். கடந்த 1,500 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம், பரணி நட்சத்திரத்தன்று இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது.

சுமார் 30 அடி உயரமுள்ள, இரண்டு வில்கள் பூட்டப்பட்ட ரதத்தில் ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்கக்காரர்கள் என நான்கு பேரும், அவர்களின் கையில் ஆறு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள பச்சிளம் குழந்தைகளும் என, ஒரே நேரத்தில் எட்டு பேர் ரதத்தில் கோயிலை ஒரு முறை சுற்றி வரும்போது, தூக்க நேர்ச்சை நிறைவுபெறும். வரும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தொடர்ந்து ஒன்றரை நாள் வரை இந்த தூக்க நேர்ச்சை நடைபெறும்.

குமரி மாவட்டத்தில் இட்டகவேலி, மூவோட்டு கோணம் ஆகிய கோயில்களிலும் இதே போன்று தூக்க நேர்ச்சை நடைபெறும். ஆனால், ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுவது, கொல்லங்கோட்டில் மட்டுமே.

10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் விழா நாட்களில் தினமும் காலை பள்ளியுணர்தல், நிர்மால்யதரிசனம், அபிஷேகம், மதிய பூஜை, சமூக விருந்து, தீபாராதனை, இரவு பூஜை நடைபெறும். தூக்கக்காரர்கள் திருவிழா முடியும் வரை பத்து நாட்களும் கோயிலிலேயே இருக்க வேண்டும். மூன்றாம் நாள் திருவிழாவின்போது, தூக்கக்காரர்களுக்கு உடற் பரிசோதனை மேற்கொள்ளப்படும். தூக்கக்காரர்கள் உடற்பரிசோதனை முடிந்து தேர்வானவுடன் குடும்பத்தினர் முதற்கொண்டு அனைவரும் விரதம் இருப்பர். விரதம் இருப்பவர்களுக்கு அரிசிக் கஞ்சியும், திருப்பயிறும் வழங்கப்படும்.

ஒன்பதாம் நாள் திருவிழாவில் தூக்க நேர்ச்சைக்கு ஆயத்தமாக வண்டியோட்டம் நடைபெறும். அப்போது தூக்கக்காரர்கள் கடலில் நீராடி நமஸ்காரம் செய்வர். பத்தாம் நாள் திருவிழாவில்தான் முக்கிய அம்சமாக, தூக்க நேர்ச்சை நடைபெறும்.

கட்டுரை, படங்கள்: ரா.ராம்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick