பணம் உங்கள் பலம்!

வருமானம் - சேமிப்பு = செலவு!

சேமிப்பு (சேவிங்ஸ்) என்பது வேறு. முதலீடு (இன்வெஸ்ட்மென்ட்) என்பது வேறு. நீங்கள் உண்டியலில் பணத்தைப் போட்டு வருவது சேமிப்பு. அதனை வங்கி சேமிப்புக் கணக்கு, ஆர்.டி, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் போட்டு வருவது முதலீடு.

உதாரணமாக, கமலா, ரம்யா, நிவேதா, வித்யா என நான்கு தோழிகள். இவர்கள் அனைவரும் மாதம் தலா 1,000 ரூபாய் சேமிக்கிறார்கள். கமலா உண்டியலிலும், ரம்யா அவரின் வங்கி சேமிப்புக் கணக்கிலும், நிவேதா வங்கித் தொடர்சேமிப்பு (ஆர்.டி) திட்டத்திலும், வித்யா மியூச்சுவல் ஃபண்ட் (ஓரளவுக்கு ரிஸ்க் குறைவான பேலன்ஸ்டு ஃபண்ட்) திட்டத்திலும் பணத்தைப் போட்டு வருகிறார்கள். ஓராண்டு முடிவில் கமலா உண்டியலை உடைக்கும்போது அவருக்கு மொத்தமாக 12,000 ரூபாய் கிடைத்தது. வித்யாவுக்கு மிக அதிகமாக 12,683 ரூபாய் கிடைத்திருந்தது (அட்டவணையைப் பார்க்கவும்).

சேமிப்பு என்பது அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் நிறைய மாறிவிட்டது. நீங்கள் உங்கள் முன்னோர் போல் சேமித்து வந்தீர்கள் என்றால், அது முட்டாள்தனம். அந்தக் காலத்தில் தங்கம், அதைவிட்டால் நிலம் என ஃபிசிக்கல் சொத்து என்கிற அசையா சொத்துகளில் மட்டுமே முதலீடு செய்துவந்தார்கள். இன்று ஃபைனான்ஷியல் அசெட்ஸ் என்கிற நிதி சொத்துகள் (பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவை) அதிகம் வந்துவிட்டன. அந்தக் காலத்தில் பணத்தை முதலீடு செய்துவைக்க வங்கிகள், தபால் அலுவலகங்கள், பங்குச் சந்தைகள், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் போன்றவை இல்லாததால், பெண்கள் உண்டியலில் சேமிக்க வேண்டியிருந்தது. இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. எல்லா வாய்ப்புகளும் உங்களை சுற்றிச் சுற்றியே இருக்கின்றன. அந்த வகையில், குடும்பத் தலைவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் தாராளமாக நவீன முதலீட்டு வழிகளில் முதலீடு செய்யலாம்.

உங்கள் குடும்ப பட்ஜெட்டில் சேமிப்புக்கான முதலீட்டு தொகையை எப்படி ஒதுக்குகிறீர்கள்? வருமானம் - செலவு = சேமிப்பு. பெரும்பாலோர் பின்பற்றும் சேமிப்பு பார்முலா இதுதான். செலவுகள் எல்லாம் போக மீதியை முதலீடு செய்கிறீர்களா? சில மாதங்களில் செலவுகள் கையை மீறிப் போகும்போது சேமிப்புக்குத் தொகை இல்லாமல் போய்விடுமே? எந்தச் சிக்கலும் இல்லாமல் சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ள எளிய முதலீட்டு சூத்திரம் எது என்று பார்ப்போம். வருமானம் - சேமிப்பு = செலவு. அதாவது, உங்களின் வருமானத்திலிருந்து சேமிப்புக்கான தொகையை எடுத்து வைத்துவிட்டு, மீதியை செலவு செய்வது மூலம் சுலபமாக பணம் சேர்க்கலாம்.

பலரும் வருமானம் கூடும்போதும், சம்பளம் அதிகரிக்கும்போதும் செலவை அதிகரித்து வருகிறார்கள். ஆனால், ஏற்கெனவே சேமித்த அளவே முதலீடு செய்துவருகிறார்கள். அப்படிச் செய்யாமல் சம்பளம் கூடும்போது சேமிப்பையும் அதிகரிப்பது அவசியம், தோழிகளே!

சி.சரவணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick