முற்றுப்புள்ளி வைக்க முடியாத வெற்றிப் பட்டியல்!

சேலம், அம்மாப்பேட்டை மகளிர் காவல் நிலைத்தில் ஏட்டாகப் பணியாற்றும் வனிதாவின் இன்னொரு முகம், விளையாட்டு வீராங்கனை. மாநில, தேசிய, சர்வதேச, ஆசிய, ஒலிம்பிக் என மூத்தோர் தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு 150 பதக்கங்கள், அதில் 60 தங்கப்பதக்கங்கள் என்று அள்ளி வந்துகொண்டிருக்கும் 47 வயது பெண்மணி!

போலீஸ் வட்டாரத்தில் ‘தங்கமான ஏட்டம்மா’ என்று பெயர் வாங்கியிருக்கும் வனிதாவை, காலை நேரத்தில் பூங்கா ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சந்தித்தோம்!

‘‘சேலம்தான் சொந்த ஊர். நான் ஒரு வயசுக் குழந்தையா இருக்கும்போதே அப்பா இறந்துவிட, கூலி வேலை செஞ்சு கஷ்டப்பட்டு என்னை வளர்த்த அம்மா, சமீபத்தில்தான் தன்னோட 102 வயசுல இறந்தாங்க.

பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டில் ஆர்வம் எனக்கு. ஆனா, பன்னிரண்டாவதுக்கு அப்புறம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தால, உதவி நர்ஸா வேலைக்குச் சேர்ந்தேன். இன்னொரு பக்கம், போலீஸ் வேலைக்கு முயற்சி செய்துட்டு இருந்தேன். 97-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் `கிரேடு  2' பதவியில் சேர்ந்தேன். 2004-ம் ஆண்டு சேலம் அம்மாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் `கிரேடு  1' (பிசி) ஆக சேர்ந்தேன். பின்னர் பதவி உயர்வு    பெற்று,     2011-ம்   ஆண்டு முதல் ஏட்டாகப் பணியாற்றி வருகிறேன்.

என்னோட 35 வயசுல, `வாழ்க்கையின் ரெண்டாவது இன்னிங்ஸை நம்பிக்கையோட ஆரம்பிச்சேன். கடுமையா பயிற்சி செஞ்சேன். சென்னையில நடந்த மாநில அளவி
லான போட்டியில் மூணு தங்கம் வென்றப்போ, பெரிய நம்பிக்கை கிடைச்சது. தேசியப் போட்டிகளில் வாய்ப்பு கிடைச்சது. இதன் தொடர்ச்சியா, இத்தாலியில் நடந்த ஆசியப்போட்டியில் கலந்துக்கிற வாய்ப்பு கிடைக்க, பாஸ்போர்ட் எடுக்கப் பணம் இல்லாததால அதைத் தவறவிட்டேன்’’ என்ற வனிதா, தொடர்ந்து கவனம் செலுத்தி, மூத்தோர் தடகள போட்டிகளில் இரண்டு பதக்கங்களை சமீபத்தில் பெற்றார். அடுத்த வருஷம் சிங்கப்பூரில் நடக்கவிருக்கிற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியும் பெற்றிருக்கிறார்.

ஆனால்?

‘‘என் பயிற்சியாளர் சம்பத் சாரின் ஊக்கம், வெற்றி பெற உதவியா இருக்கும். ஆனா, கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள், மூத்தோர் விளையாட்டுப் போட்டிகள்ல பதக்கம் வாங்கிறவங்களுக்கு ஊக்கத்தொகை, பதவி உயர்வு கொடுக்குறாங்க.  எனக்கு அப்படி எந்த உதவியும், அங்கீகாரமும் கிடைக்கல. கலந்துகிட்ட வெளிநாட்டுப் போட்டிகளுக்கு செலவழிக்க பேங்கில் அடகு வெச்ச நகைகளுக்கு, வட்டி கட்ட முடியாத நிலைமை. இதனால, ‘அரசின் உதவி கிடைச்சா, வெளிநாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள்; இல்லைன்னா, உள்நாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள்!’னு என்னை நானே இப்போ சமாதானப்படுத்திக்கிட்டிருக்கேன்...’’

- ஆற்றாமையும், ஆர்வமும் கலந்து சொல்கிறார், வனிதா!

கு.ஆனந்தராஜ் படம்: க.தனசேகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick