Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யார் மீது, எப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கலாம்?

மன உளைச்சலைத் தவிர்க்கும் ஃபார்முலா

ம்பிக்கை... இரண்டு வயதில் இருந்து நம்முள் வளரும் பண்பு. இந்த உலகத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் நம்பிக்கைக்கு உரிய முதல் நபர், அம்மா. வளர வளர, ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு சூழலிலும் நம்பிக்கைக்கு உரிய உறவுகளையும், நட்புகளையும் தேடி, அந்தத் தேடலை மையமாக வைத்தே இந்த வாழ்க்கை நகர்கிறது.

‘நம்பிக்கை’ என்பதை ஒருவரின் நடவடிக்கைகளால் மட்டுமின்றி, தோற்றத்தாலும் சிலர் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். வெளிநாட்டு ஆராய்ச்சி ஒன்றில், 1,000 நபர்களிடம் சிலரது புகைப்படங்களைக் கொடுத்து, ‘இவர்களில் யாரை எல்லாம் நம்பலாம்?’ என்று கேட்டபோது, ‘இவன் நல்லவன்’, ‘இவன் கெட்டவன்’ என்று அவர்கள் கொஞ்ச நேரத்திலேயே தங்கள் ‘கருத்துக்கணிப்பை’ முடித்தார்கள். அதில் ‘நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல’ என்று அவர்கள் தேர்ந்தெடுத்த பலருக்குமான பொதுத்தோற்றம்: ஒட்டிய கன்னம், தூக்கிய கண், புருவம். சினிமா வில்லன்கள் பெரும்பாலும் இந்தத் தோற்றத்திலேயே காட்டப்படுவதால், அதை மனதில் வைத்தே இவர்களும் அவர்களை எல்லாம் ‘நம்பிக்கையற்றவர்கள்’ என்று சுட்டினார்கள். நம் நாட்டில் இதை இன்னும் எளிதாக, ‘அழகானவர்கள் எல்லாம் நல்லவர்கள், அசிங்கமானவர்கள் எல்லாம் கெட்டவர்கள்!’ என்றுகூடச் சொல்லியிருப்பார்கள்.

நம்மில் பலரும் தோற்றத்திலேயே ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்று தீர்மானித்துவிடத் துடிக்கிறோம். உண்மையில், இது மோசமான முயற்சி. `சரி, நடவடிக்கைகளின் அடிப்படையில் ஒருவரின் நம்பகத்தன்மையை உறுதி செய்யலாமா?’ என்றால், அதுவும் கூட சிக்கல்தான். காரணம், நல்லவர்கள் யாரும் தங்களை ‘நல்லவன்’ லேபிளுடன் காட்டிக்கொண்டு திரியமாட்டார்கள். அதேபோல, கெட்டவர்கள் தங்களை ‘மிக நல்லவர்கள்’ போலவே எப்போதும் காட்டிக்கொள்வார்கள். ‘நல்லவன் போல் நடித்து நான்கு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவன் கைது’ செய்திகள் முதல், ‘கோட்-சூட் சீட்டு கம்பெனி நபர்கள் ஓட்டம்’ செய்திகள் வரை, அனைவரும் ‘நல்லவர்’ போர்வை போர்த்தியவர்கள் தான்!

நம்பிக்கை என்பது, ஒரு நபரையும், அவரின் செயல்களையும் உற்றுநோக்கி, பாகுபடுத்திப் பார்க்கும் திறனையும், நன்கு யோசித்து, நிதானமாக முடிவெடுக்கும் அனுபவத்தையும் கொடுக்க வேண்டும். ஒருவர் மீது நாம் வைத்த நம்பிக்கை வலுப்பெற, நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். ‘அவரைப் பத்தி நமக்கு எந்தளவுக்குத் தெரியும்? அவர் சொல்வதை எதன் அடிப்படையில் நம்புவது?’ என நம்மிடமே கேள்விகள் பல கேட்டு, அதற்கெல்லாம் சரியான விடை கண்டறிந்த பிறகே, ஒருவரின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். இது காதல் விஷயத்தில் இருந்து, உறவுகளுக்குள் கொடுக்கல் வாங்கல், நட்புகளுக்கு இடையில் ரகசியம் பகிர்தல் என்று எல்லா சூழலுக்கும் பொருந்தும்.

சரியான நபர்களைக் கண்டறிந்து நம்பிக்கை வைக்க, நமக்கு பக்குவமும் காத்திருப்பும் வேண்டும். ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்கிற அவசரம் கூடாது. ‘அவனை நம்பின என்னை ஏமாத்திட்டான். இன்னொரு பொண்ணுகூட அவன் சுத்துறது இப்போதான் தெரிஞ்சது’, ‘என் சகோதரி போல அவளை நம்பினேன், இப்படி சுயநலமா நடந்துக்கிட்டாளே’, ‘அலுவலகத்தில் என்னோட ஒரு குளோஸ் ஃப்ரெண்டா அவளை நினைச்சேன். நான் அவகிட்ட ஷேர் பண்ணின சொந்த விஷயங்களை இப்படி கிசுகிசு ஆக்கிட்டாளே’ என்று புலம்ப நேர்ந்தால்... ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வேதனை... தவறான நம்பிக்கை வைத்தவர்களுக்கு மட்டுமே! அவர்களுக்கு அந்தத் துயரத்தைத் தந்த, அந்த நம்பிக்கைக்குப் புறம்பானவர்கள், ஒருபோதும் அவர்களுக்காக வருந்தமாட்டார்கள்; தான் அவர்களின் ‘குட் லிஸ்ட்’டில் இல்லாமல் போனதற்காக கவலைப் படவும் மாட்டார்கள். ‘அவளை யாரு என்னை நம்பச்சொன்னா?’ என்று சிம்பிளாக அந்த உறவை முடித்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.

எந்தவொரு விஷயத்தையும், லாஜிக்கலா கவும், எமோஷனல் விழிப்பு உணர்வோடும் சமமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். அதிகமானோர் இதில் எதையாவது ஒன்றை அதிகமாகவும், மற்றதைக் குறைவாகவும் செய்கிறார்கள். சிலரோ இரண்டிலும் ‘ஹைபர்’ ஆக இருக்கிறார்கள். ‘யாரையும் நம்பாதீர்கள்’ என்றும் சொல்லவில்லை; ‘மனிதருக்கு மனிதர் நம்பிக்கை வையுங்கள்’ என்றும் சொல்லவில்லை. தகுதியானவர்கள் மீது நம்பிக்கை வைப்பதே சரி. அந்தத் தகுதியை, ஆராய்ந்து முடிவெடுங்கள். அதே சமயம், தாய்  - மகன், கணவன் - மனைவி போன்ற நெருங்கிய பந்தங்களில், நிபந்தனையற்ற நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கையானது, தவறு செய்யும் மகன்/கணவன் மீது வைக்கும் நம்பிக்கை அல்ல. அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்ற முயற்சியில் வைக்க வேண்டிய நம்பிக்கை!

குழந்தைகளின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குங்கள்!

குழந்தைக்கு தன் பெற்றோரின் மீது ஏற்படும் நம்பிக்கையே, அந்த உறவின் பலம். ஆனால் அது, ‘நான் என்ன கேட்டாலும் என் அப்பா வாங்கிக் கொடுத்துடுவாங்க’ என்ற பொருள் சார்ந்த நம்பிக்கையாக இருக்கக்கூடாது. ‘கஷ்டமான ஹோம்வொர்க், புராஜெக்ட்னு சிரமமா இருந்தாலும், அப்பா - அம்மா உதவுவாங்க’, ‘பள்ளி, டியூஷன்ல எந்தப் பிரச்னைனாலும், என் பேரன்ட்ஸ் சரிசெஞ்சிடுவாங்க’ என்ற உணர்வு சார்ந்த நம்பிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல, குழந்தைகளை நம்பிக்கைக்கு உரியவர்களாக வளர்ப்பது, அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவதற்கு அடிப்படை. ‘முடியலைன்னா, முடியலைன்னு சொல்லலாம். முடிச்சிட்டேன்னு பொய் சொல்லக் கூடாது. அது உன் மேல எங்களுக்கு இருக்கிற நம்பிக்கையை எல்லா விஷயத்திலும் கெடுத்துடும்’, ‘உன் மிஸ், ஃப்ரெண்ட்ஸ்னு எல்லோரும் உன் மேல வைக்கிற நம்பிக்கைக்கு எதிரா எப்பவும் நடக்கக் கூடாது. அப்புறம் யாரும் எப்பவும் உன்னை நம்ப மாட்டாங்க’ என்று வலியுறுத்துவதுடன், நம்பிக்கைக்கு உரிய நபராக இருப்பதன் மாரல் வேல்யூவையும் குழந்தைக்குச் சொல்லி வளர்க்க வேண்டும்.

உங்களது பர்சனல் பிரச்னைகளுக்கு தீர்வு காண... ‘ஆல் இஸ் வெல், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2’ என்ற முகவரிக்கு கடிதம் எழுதலாம். e-mail: alliswell-aval@vikatan.com

- ரிலாக்ஸ்...
டாக்டர் அபிலாஷா
தொகுப்பு: சா.வடிவரசு

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஹலோ விகடன்....
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close