சாலை விதிமுறைகள்... சரியான நடைமுறைகள்!

‘விபத்தில்லா தேசம்’ உருவாக்கும் எண்ணத்துடன் குழுவினருடன் இணைந்து செயல்படும், சென்னையைச் சேர்ந்த, தன்னார்வத் தொண்டர் ராதாகிருஷ்ணன், சாலை விதிமுறைகள் சார்ந்த நடைமுறைகள் பற்றிய கேள்விகளுக்கு இங்கே பதிலளிக்கிறார்...

 

‘‘லைசன்ஸ், ஆர்.சி புக், இன்ஷூரன்ஸ் போன்றவை கையில் இல்லாத சமயத்தில் போக்குவரத்துப் போலீஸார் சோதனையில் ஈடுபட்டால், தரப்படும் தண்டனை என்ன?’’

‘இவை கைவசம் இல்லாவிட்டால் அபராதத் தொகை 100 ரூபாய். அதற்கு மேல் வசூலித்தால் உயரதிகாரியிடம் புகார் அளிக்கலாம். லைசன்ஸே எடுக்காமல் வாகனம் ஓட்டுகிறவர்களுக்கு அபராதத் தொகை 500 ரூபாய். இன்ஷூரன்ஸ் செய்யாமல் வண்டி ஓட்டுகிறவர்களுக்கு அபராதத் தொகை 1,000 ரூபாய். பதிவு செய்யாமல் வண்டி ஓட்டுபவர் முதல் முறை பிடிபட்டால் அபராதத் தொகை 2,500 ரூபாய்; இரண்டாவது முறை பிடிபட்டால் 5,000 ரூபாய்.

அதிகாரி அபராதத் தொகைக்கு ரசீது தரவில்லை என்றால், கேட்டு வாங்குவதற்கு உரிமை உள்ளது. கேட்டும் ரசீது தரவில்லை என்றால், உயரதிகாரியிடம் (டிராஃபிக் இன்ஸ்பெக்டர்) புகார் அளிக்கலாம். ரசீது கொடுக்கவில்லை என்றால் அபராதத் தொகை கட்ட வேண்டியதில்லை. அபராதத் தொகைக்கான ரசீதிலேயே காலக்கெடு தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்குள் லைசன்ஸ், ஆர்.சி புக் போன்ற டாக்குமென்ட்டுகளை அதே அதிகாரியிடம் காண்பித்தால், செலுத்திய அபராதத் தொகையையும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் திரும்பப் பெறமுடியும்.

‘‘இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணம் செய்கிறவர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறவர்களின் மேல் எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?’’

‘‘இருவருக்கு மேல் பயணம் செய்யும் பட்சத்தில் முதல் முறை பிடிபட்டால் (அதிகாரியின் கைகளில் உள்ள 3ஜி கனெக்டிவிட்டி உள்ள டிவைஸ் மூலம், பிடிபட்ட நபர் முதல் முறையா அல்லது இரண்டாம் முறையா எனக் கண்டுபிடித்துவிடலாம்) 100 ரூபாய் மற்றும் இரண்டாம் முறை பிடிபட்டால் 300 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறவர்களுக்கு முதல் முறை 2,000 ரூபாய் அபராதத் தொகையும், அதிகபட்ச தண்டனையாக 6 மாதகால கடுங்காவல் தண்டனையும், இரண்டாம் முறை பிடிபட்டால் 3,000 ரூபாய் அபராதத் தொகையும், அதிகபட்ச தண்டனையாக 2 வருட கடுங்காவல் தண்டனையும் விதிக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் இடமிருக்கிறது.’’

‘‘ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் போடாமல் இருப்பது மற்றும் மீட்டருக்கு மேல் வசூலிப்பது குறித்து எங்கு புகார் அளிக்கலாம்?’’

‘‘ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் போடாமல் இருப்பது, மீட்டருக்கு மேல் பணம் வசூலிப்பது, செல்ல வேண்டிய இடத்தைச் சொன்னதும் வர முடியாது என்று மறுப்பது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, அதிகமாக பணம் கேட்டோ அல்லது வேறு ஏதாவது காரணத்துக் காகவோ வாக்குவாதம் செய்வது, கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகிப்பது, உடலளவில் தாக்க முயற்சிப்பது... இது போன்ற எல்லா காரணங்களுக்கும் அருகில் உள்ள டிராஃபிக் போலீஸிடம் ஆட்டோ பதிவு எண்ணுடன் புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட ஓட்டு நரிடம் அவர் செய்த தவறுக்கேற்ற அபராதம் வசூலிக்கப்படும்.’’

‘‘நம்பர் போர்டுகளில் ஒட்டப்பட்டிருக்கும் ஐ.என்.டி சிப் எதற்காக?’’

‘‘இது முழுக்க முழுக்க ஒரு வாகனத்தை டிரேஸ் செய்ய உதவி செய்யும் திட்டம். குறிப்பிட்ட ஒரு வண்டி இந்த நிமிஷம் எந்த சிக்னலை கடந்து போகிறது என்பது முதற்கொண்டு இதில் டிரேஸ் செய்ய முடியும். வண்டி காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்க, இருசக்கர வாகனங்களில் வந்து குற்றம்புரிபவர்களைப் பிடிக்க, உரிமை யாளர், இன்ஷூரன்ஸ் விவரங்களைத் தெரிந்துகொள்ள என எல்லாவற்றுக்கும் இது பயன்படும். இது தற்போது பாண்டிச்சேரியில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இது இன்னும் அமல்படுத்தப் படாத நிலையிலும் சிலர் தங்கள் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் போலி ஐ.என்.டி ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள். இது சட்டப்படி குற்றம்.

‘‘வாகன விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன?’’

‘‘ஒரு வாகனம் இடித்துவிட்டுச் சென்றால், அதன் பதிவு எண்ணைக் குறித்துக்கொண்டு அருகில் உள்ள டிராஃபிக் போலீஸிடம் புகார் அளிக்கலாம். அவர் அந்த வாகனத்தை டிரேஸ் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இடித்த நபருடன் பேச்சு வார்த்தை நடக்கும்பட்சத்தில், அபராதத் தொகை மட்டும் வசூலிக்கப்படும். அதுவே விபத்து நடந்து விபத்துக்குள்ளான நபர் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருந்தும், இடித்த வண்டி நிற்காமல் போனால், அந்த நபர் குற்றவாளியாக கருதப்படுவார். அவர் மீது ஐ.பி.சி சட்டத்தின்படி புகார் பதிவு செய்து அதிகபட்சமாக 3,00,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

போக்குவரத்துக் காவலர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், உயரதிகாரியிடம் புகார் கொடுக்கலாம். வேலை நேரத்தில் வேலை செய்யத் தவறியதன் அடிப்படையில், ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அவருக்கு அபராதம் விதிக்கப்படும்.

புகார் அளிக்க, விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் பதிவு எண் மற்றும் சம்பவத்தை பார்த்த ஒரு நபர் அல்லது அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிந்துள்ள வீடியோ காட்சி (இதை காவல்துறை உதவியுடன் பெறமுடியும்)... இதில் ஏதாவது ஒரு சாட்சி கட்டாயத் தேவை.

அதே சமயம் சாலை விதிமுறையை மீறி போக்குவரத்துப் போலீஸிடம் பிடிபட்டு, ‘எனக்கு எம்.எல்.ஏ-வை, உயரதிகாரியைத் தெரியும்’ என்றெல்லாம் பேசி அவரை வேலை செய்யவிடாமல் தொந்தரவு செய்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி உங்கள் மீதும் புகார் அளிக்க முடியும்!’’

இந்துலேகா.சி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick