பிரசாதப் பை தயாரிப்பு... பிரமாத லாபம்!

‘‘நான் எப்பவும் பொழுதுபோக்கக் கதைக்கிறவங்ககிட்ட அதிகமா பேசமாட்டேன். வாழ்க்கையில் கஷ்டத்தில் இருந்து எழுந்து வந்து வெற்றிக்கோட்டைத் தொட்டவங்களைத் தேடித் தேடிப் பேசுவேன். அவங்க மூலம் நிறைய விஷயங்களைக் கத்துக்கலாம்; அவங்க அனுபவத்தையே நமக்கு நம்பிக்கைப் பாடமா எடுத்துக்கலாம்!’’

- வேகமும் வெற்றியுமாகப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த பாக்கியலட்சுமி... கிண்டியில் உள்ள ‘என்விரான் நான்-ஓவன் பேக்ஸ்’ நிறுவன உரிமையாளர். கோயில்களுக்குப் பிரசாதப் பை மற்றும் விழாக்களுக்குத் தாம்பூலப் பை, டெக்ஸ்டைல்ஸ், ஷாப்பிங் பேக்ஸ், ரைஸ் பேக்ஸ், எக்ஸ்ரே பேக்ஸ் போன்றவற்றை ஆர்டரின் பேரில் செய்துகொடுக்கும் தொழில்முனைவோர்.

‘‘என் குடும்பத்தைச் சேர்ந்த பலர் அரசாங்க வேலையில இருக்காங்க. நான் அதிலிருந்து விலகி, ஹெச்.ஆர். டிபார்ட் மென்டை டிக் செய்தேன். பல நிறுவனங்களில் ஹெச்.ஆர். துறையில் வேலை பார்த்த நான், கன்சல்டன்ஸியை தனியே ஆரம்பிச்சேன். அப்போதான், ‘நாம ஒருத்தர்கிட்ட கைநீட்டி சம்பளம் வாங்கறதைவிட, மத்தவங்களுக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு முன்னேற முயற்சிக்கலாமே?!’னு தோணுச்சு. என்ன பிசினஸ் செய்யலாம்னு தேடினப்போ, நான்-ஓவன் பேக்ஸ் தொழில் சார்ந்த பயிற்சியை எம்.எஸ்.எம்.இ மூலமா எடுத்துக்கிட்டேன்.

தமிழ்நாடு முழுக்க இந்தத் தொழில் செய்பவர்களை நேரடியா சந்திச்சு, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விஷயத்தைக் கத்துக்கிட்டேன். ‘யாரோ ஒரு பொண்ணு வந்து தொழில் பத்தி விசாரிக்குது’னு சலிப்பாவோ, ‘தொழில் விஷயங்களை எதுக்குச் சொல்லணும்?’னு போட்டியாவோ என்னை யாருமே நினைக்கல, நடத்தல. ‘ஒரு பொண்ணு தன்னந்தனியா முயற்சி எடுத்து தொழில் ஆரம்பிக்கப் போகுது, அது நல்லபடியா கரை சேரணும்’ங்கிற ஆதரவோட எல்லாருமே எனக்கு இந்தத் தொழிலில் தங்களுக்குத் தெரிஞ்ச தகவல்கள், சூட்சுமங்கள் எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தாங்க!’’

- பெண் தொழில்முனைவோரை இந்தச் சமுதாயம் அடக்க நினைக்காமல், ஆரத்தி எடுத்தே வரவேற்கிறது என்ற பாஸிட்டிவ் செய்தி சொல்லித் தொடர்ந்தார் பாக்கியலட்சுமி.

‘‘டிக் (DIC - DISTRICT INDUSTRIAL CENTRE) மூலமா ஆந்திரா வங்கியின் ஐயப்பன்தாங்கல் கிளையில் கடன் வாங்கி, சீனாவில் இருந்து மெஷின்களை வாங்கி தொழிலை ஆரம்பிச் சேன். அரசின் நீட்ஸ் (NEEDS) திட்ட உதவியின் மூலம் கடனுதவி, தொழிலின் அடுத்தகட்ட வேலைகளுக்குப் பயன்பட்டது. தமிழகத்தில் பல கோயில்களுக்குப் பிர சாத பேக்குகளை செஞ்சு கொடுத்துட்டு இருக்கேன்’’ என்ற பாக்கியலட்சுமி, தலையணை உறைகள், மெத்தை உறைகள், பைகள் என இதில் பல ஆர்டர்கள் எடுத்து அசத்திக்கொண்டிருக்கிறார்.

‘‘என் சகோதரி ஒருத்தருக்கு தேவைக்கும் அதிகமா விட்டுக் கொடுக்கும், அனுசரித்துப் போகும் குணம் உண்டு. அவங்க, 10 வருஷத்துக்கு முன்ன இறந்துட்டாங்க. அவங்களோட வாழ்க்கையில இருந்து நான் கத்துக்கிட்ட பாடம்... நியாயமில்லாத எந்த விஷயத்துக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது, அநாவசியமா காம்ப்ரமைஸ் ஆகக் கூடாதுங்கிறதுதான். தொழிலைத் தடங்கல் இல்லாம நடத்த இந்த மனப்பான்மை எனக்குப் பெரிதும் உதவுது. ஒரு பொண்ணு, வீட்டை விட்டு வெளிய வந்து உலகத்தைச் சந்திக்கும்போது, அவளோட அறிவு விசாலமடையணும். அதுதான் நாம ஏமாற்றப்படாம காக்கும் கவசம். அதனால, தொழில் விஷயங்கள் மட்டுமில்லாம, அரசியல், அரசுத் திட்டங்கள்னு எல்லா விஷயங்களையும் தேடித் தேடித் தெரிஞ்சுக்குவேன்.

ஒண்ணரை வருஷத்துக்கு முன்ன ஆரம்பிச்ச இந்தத் தொழில்ல இப்ப என்னோட மாத வருமானம், 40,000 ரூபாய். இந்தத் தொழிலில் அடையாளம் காணக்கூடிய நபரா வளர்ந்திருக்கேன். அதிகம் பேர் கவனம் படாத இந்தத் தொழிலை பெண்கள் தைரியமா எடுத்துச் செய்யலாம். அஞ்சு லட்ச ரூபாய் முதலீட்டோட, கடின உழைப்பும் தந்தா... வெற்றியோட சீக்கிரமா கைகுலுக்கலாம்!’’

- வெற்றி தந்த துணிவும் தெளிவும் பாக்கியலட்சுமி முகத்தில்! 

வே.கிருஷ்ணவேணி  படம்: எம்.உசேன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick