திருமணப் பதிவு 90 நாட்களுக்குள்!

திருமணப் பதிவுக்காக marriage-certificate.in என்ற வலைதளத்தை நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்த ஷகிலா பானு, மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷன் ஃபார்மாலிட்டிகள் குறித்த சந்தேகங்களுக்கு இங்கே விளக்க மளிக்கிறார்.

திருமணப் பதிவு என்பது எதற்கெல்லாம் பயன்படும்?

‘‘பாஸ்போர்ட்டில் இணையின் பெயரை இணைக்க, விசா வாங்க, வங்கிகளில் தன் இணை பெயரில் ஜாயின்ட் அக்கவுன்ட் ஆரம்பிக்க, கணவர் அல்லது மனைவியின் பென்ஷன் பணத்தைப் பெற, திருமணம் தொடர்பான அரசு சலுகைகள் பெற... இதற்கெல்லாம் திருமணப் பதிவுச் சான்றிதழ் அவசியம்.''

திருமணத்தைப் பதிவு செய்வதற்குத் தேவையானவை எவையெவை?

``திருமணத்தைப் பதிவு செய்ய, மணமக்கள் இருவரின் வயதுச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 6 எடுத்து வருவதுடன், சாட்சிகளும் தங்களின் அடையாள அட்டையுடன் வர வேண்டும். சாட்சிகளுக்கு வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும். மணமகனுக்கு 21, மணமகளுக்கு 18 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். துணையை இழந்தவர்கள் அல்லது விவாகரத்தானவர்கள் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளும்போது, அந்தத் திருமணத்தையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம். பதிவுக்கு கொண்டு வர வேண்டிய சான்றிதழ்களுடன், இறந்த துணையின் இறப்புச் சான்றிதழையும், விவாகரத்து பெற்றவர் அது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

திருமணத்தை எத்தனை நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்?

``பொதுவாக திருமணம் முடிந்த 90 நாட்களுக்குள் அதைப் பதிவு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு பெனால்டியுடன் பதிவு செய்ய 60 நாட்கள் வரை அவகாசம் இருக்கிறது. திருமணத்தில் யாருக்காவது எதிர்ப்பு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள பதிவு அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டுவார்கள். 30 நாட்கள் வரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், அந்தத் திருமணம் பதிவு செய்யப்படும்''

திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆனாலும் பதிவு செய்ய முடியுமா?

``பல வருடங்கள் ஆகியும் பதிவு செய்யாதவர்கள் மற்றும் திருமணப் பதிவு சான்றிதழைத் தொலைத்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய முடியும். தங்களது வயது மற்றும் முகவரிச் சான்றிதழ், திருமண அழைப்பிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மற்றும் சாட்சிகளை அடையாள அட்டையுடன் அழைத்து வந்து, திருமணத்தைப் பதிவு செய்துகொள்ளலாம்.

திருமணம் பதிவு செய்யப்பட்ட ஒரு வாரத்தில், ஒரு சான்றிதழ் டிராஃப்ட் கேட்டு வாங்கலாம். அதில் ஏதாவது தவறு இருந்தால் திருத்திக் கொடுக்கலாம். இறுதியாக வழங்கப்பட்ட திருமணப் பதிவு சான்றிதழில் தவறு ஏதும் இருந்தால், இரண்டு மாதங்களுக்குள் திருத்திக் கொள்ளலாம். அதற்கு தம்பதி திருமணப் பதிவுச் சான்றுடன், அடையாள அட்டையும் கொண்டு செல்ல வேண்டும்.

திருமணப் பதிவுச் சான்றிதழின் ரசீது (receipt) எண்ணை தனியாக குறித்துவைத்துக் கொள்ளவும். ஒருவேளை சான்றிதழ் தொலைந்துவிட்டால், அந்தத் திருமணம் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் சென்று, பதிவு செய்த தேதி மற்றும் ரசீது எண்ணைத் தெரிவித்து விண்ணப்பித்தால், ஒரு வாரத்துக்குள் புதிய சான்றிதழ் கிடைத்துவிடும்.''

கலப்புத் திருமணத்தை பதிவு செய்ய முடியுமா?

``தாரளமாக பதிவு செய்யலாம். மற்ற திருமணங்களைப் போலவேதான் இதற்கான நடைமுறையும்.''

ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனி திருமண முறைகள் இருப்பதுபோல பதிவு செய்வதிலும் தனி முறைகள் உண்டா?

``ஆம் தனித்தனியான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

ஹிந்து மேரேஜ் ஆக்ட்: இந்து மணமக்கள் இருவரும் திருமணம் முடிந்து 90 நாட்களுக்குள் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும்.

ஸ்பெஷல் ஆக்ட்: மணமக்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் அல்லது இஸ்லாமியர்களாக இருந்தாலோ, இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலோ, இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்.

சிவில் ஆக்ட்: மணமக்கள் எந்த மதச் சடங்குகளையும் பின்பற்றாமல் திருமணம் செய்தால், இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும்.’’

ந.ஆஷிகா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick