ஃபார்மஸி கோர்ஸ்... வளமான எதிர்காலம்!

‘‘பெருகி வரும் மக்கள்தொகையும், அதற்கு ஈடாகப் பெருகும் நோய்களும்... மருந்தகப் படிப்பான ஃபார்மஸி கோர்ஸ் படித்தவர்களின் எதிர்காலத்தை பலமாக்கவே செய்யும். எனவே, இதை வீழ்ச்சியில்லாத துறை எனலாம்!’’ என்று சொல்லும்  சென்னையைச் சேர்ந்த கல்வி ஆர்வலர் சிற்பி, ஃபார்மஸி கோர்ஸ் மற்றும் அதற்கான வேலைவாய்ப்பு விவரங்கள் அளிக்கிறார்!

 

‘‘நான்கு வருடப் படிப்பான பி.ஃபார்ம் கோர்ஸில் இரண்டு அம்சங்கள் உண்டு. ஃபார்மஸி ரெகுலேஷன் மற்றும் ஃபார்மஸி மேனுஃபேக்சரிங். ரெகுலேஷனில், ஆராய்ச்சி, விற்பனை என்ற இரண்டு உட்பிரிவுகளும், மேனுஃபேக்சரிங்கில் மருந்தின் உற்பத்தியும் அடங்கும். ரெகுலேஷன் துறையில் நல்ல அரசாங்க வேலை வாய்ப்புகள் உண்டு. மார்க்கெட்டிங் ஆஃப் டிரக்ஸ் எடுத்துப் படிப்பவர்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களுடன் வணிக உறவை ஏற்படுத்தும் மார்க்கெட்டிங் வேலைகள் கிடைக்கும். இவர்களைத்தான் ‘மெடிக்கல் ரெப்’ என்கிறோம். சொந்தமாகவோ அல்லது ஒரு மருத்துவருடன் இணைந்தோ ஃபார்மஸியும் வைக்கலாம். மருத்துவமனையுடன் இணைந்தும் ஃபார்மஸி வைக்கலாம்.

மருந்து உற்பத்தி துறையில்... மருந்து தயாரித்தல், கண்காணித்தலில் இருந்து தரக் கட்டுப்பாட்டு, ஆராய்ச்சி வரை வேலை வாய்ப்புகளைப் பெறலாம். சிறிய நிறுவனங் களில்கூட 10 ஆயிரம் ரூபாய் ஆரம்ப சம்பளத் தில் இருந்து லட்சங்கள் வரை சம்பாதிக்க முடியும். தரக்கட்டுப்பாட்டின் கீழ் வரும் வேலை வாய்ப்புகளுக்கு அதிக டிமாண்ட் உண்டு. இதிலும் ஆரம்ப சம்பளம் 10 ஆயிரம். திறனைப் பொறுத்து சம்பளத்துக்கு வானமே எல்லை.

பி.ஃபார்ம் கோர்ஸுடன் மேற்படிப்பு படித்தால், வெளிநாட்டு மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உண்டு. அரசாங்கத்தைப் பொறுத்தவரை சுகாதாரத் துறையில் மருந்தாளுனர் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். தமிழ்நாட்டில் சுமார் 50 ஃபார்மஸி கல்லூரிகள் உள்ளன. எம்.ஃபார்ம், பி.ஹெச்டி முடித்தவர்கள், இவற்றில் பேராசிரியர் பணியை பெறலாம்.

பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்தவர்கள் ஃபார்மஸி கோர்ஸ் படிக்கலாம். பி.ஃபார்ம்., கோர்ஸை, ‘ஃபார்மஸி கவுன்சில் ஆஃப் இந்தியா’ அமைப்பு அங்கீகரித்த கல்லூரிகளில் படிப்பது அவசியம். தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மெடிக்கல் யுனிவர்சிட்டி வலைதளத்தில், அங்கீகரிக்கப்பட்ட ஃபார்மஸி கல்லூரிகளின் விவரங்களைக் காணலாம். இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடிக்க, வேதியியலில் விருப்பம் அவசியம்!’’ என்று வலியுறுத்தி சொன்னார் சிற்பி.

கே.அபிநயா, படம்: ஜெ.வேங்கடராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick