ரோபோட்டிக் ஸ்கேவஞ்சர்..!

ஆளே இல்லாமல் சுத்தமாகும் தண்டவாளங்கள்

''நம்ம வீட்டுக் குப்பையை கையால தொடவே நமக்கு எல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கும்? அப்போ மனிதக் கழிவை மனிதனே அள்ளுவது என்பது எவ்வளவு கொடுமையான விஷயம்? இதை முழுசா தடுக்க முடியலைனாலும், முடிஞ்ச அளவுக்கு குறைக்கலாமே? அதுக்கான ஒரு தொடக்கப்புள்ளிதான், எங்களோட இந்தக் கண்டுபிடிப்பு!''

ரயில் தண்டவாளத்தில் சேரும் மனிதக் கழிவுகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் அகற்றும் ரோபோட்டிக் ஸ்கேவஞ்சரை, தங்கள் கல்ச்சுரலான 'குருஷேத்ரா’ நிகழ்வின் புராஜெக்ட் ஆகக் கண்டுபிடித்திருக்கும் கிண்டி, பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளின் அக்கறை வார்த்தைகள் இவை!

பிரியா, ஸ்வாதி, சாய் மோஹித், சரண்யா, ஹரிகுமார், அஸ்வின் மற்றும் பார்கவி... இந்த ஏழு பொறியியல் மாணவ, மாணவிகளும்தான் 'ரோபோட்டிக் ஸ்கேவஞ்ச’ருக்கு உருவமும் உயிரும் கொடுத்திருப்பவர்கள். தங்கள் கண்டுபிடிப்பின் ஆரம்ப அத்தியாயங்கள் சொன்னார்கள் பிரியாவும், பார்கவியும்.

''குருஷேத்ராவுக்கான புராஜெக்ட் தேடலில் இருந்தப்போ, 2009-ம் ஆண்டு ரயில்வே துறை வெளியிட்ட செய்தி எங்க கண்ணில் பட்டது. 'இந்தியாவில் நாடு முழுவதும் தினசரி இயக்கப்படும் 9,000 ரயில்களில் 14 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள். இந்த ரயில் தண்டவாளங்களில் ஒருநாளைக்கு 3,980 மெட்ரிக் டன் மனிதக் கழிவுகள் சேர்கின்றன. டெல்லியில் உள்ள 3 ரயில் நிலையங்களில் மட்டுமே 6,758 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றன. இந்தக் கழிவுகளைச் சரியாக சுத்தம் செய்யாததால் தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது’னு படிச்சப்போ... ஒரு சேவையா மாணவர்கள் இணைந்து ரயில் நிலையங்களை சுத்தம் பண்ணலாமேனு தோணுச்சு.

அந்த ரயில்வே டிராக்குகளில் காலையும் கையையும் வெச்சப்போதான், குப்பை அள்ளுறவங்களோட வலி என்னனு புரிஞ்சது. ஜஸ்ட் ஒரு நாள் சுத்தம் பண்ணினதுக்கே எல்லோரும் நொந்துட்டோம். அப்போ இதுவே வேலையாவும், வாழ்க்கையாவும் ஆகிப்போன துப்புரவுப் பணியாளர்கள் எவ்வளவு பாவம்னு மனசு வருந்த, அதுக்கு என்ன பண்ணலாம்னு மூளை யோசிச்சப்போ க்ளிக் ஆனதுதான், இந்த இந்த ஆட்டோமேட்டிக் கிளீனர்!''

பிரியாவும், பார்கவியும் பிரேக் போட, மெஷினின் செயல்பாட்டைச் சொன்னார்கள் சுவாதி மற்றும் சரண்யா.

''இந்த மெஷின்ல முன்னாடி ஒண்ணு, பின்னாடி ஒண்ணுனு ரெண்டு மோட்டார் இருக்கும். ரெண்டு மோட்டாருக்கும் ஏ.சி. சர்க்யூட்ல இருந்து கரன்ட் சப்ளை வரும். முன்னாடி இருக்கிற மோட்டார்ல நமக்குத் தேவையான அளவில் ஸ்பீட் செட் பண்ணிட்டோம்னா, அது அந்த வேகத்துல போய் டிராக்ல இருக்கிற பிளாஸ்டிக் குப்பை, மனிதக் கழிவுகள்னு எல்லாத்தையும் அள்ளி உள்ள இருக்கிற டேங்க்ல போட்டுடும். இந்த மோட்டார் கூட கனெக்ட் பண்ணியிருக்கற பிரஷ், டிராக்கை சுத்தம் பண்ணிட்டு வரும்போதே, பின்னாடி இருக்கிற மோட்டார் கிருமிநாசினி மருந்தை தண்டவாளத்துல தெளிச்சிட்டு வந்துடும். ஆபரேட் பண்ணப் போறவங்களோட அலைபேசி நம்பரை இந்த மெஷின்ல செட் பண்ணி வெச்சிட்டா, டிராக் முடிஞ்ச உடனே அதுவே ஆபரேட்டருக்கு போன் பண்ணிடும். மத்தபடி இந்த ரோபோ வேலை செய்யும்போது எல்லாம் தனிக்காட்டு ராஜாதான். இயக்க யாரும் தேவை இல்லை என்பதுதான் இதோட பிளஸ்!'' என உற்சாகமானார்கள் சுவாதியும், சரண்யாவும்.

ரயில் தண்டவாளங்கள் சமமின்றி இருப்பதால் அதற்கேற்ற மாதிரி மெஷினை வடிவமைப்பதுதான் இந்தக் கண்டுபிடிப்பில் இவர்கள் சந்தித்த பெரிய சவால். டிராக்கில் மேடு வரும்போது மட்டும் ஏறி இறங்குவது போல ஸ்பிரிங் செட் செய்து அசத்தியுள்ள இவர்கள், முப்பதாயிரம் ரூபாய் செலவில், ஒரே மாதத்தில் இந்த ரோபோடிக் ஸ்கேவஞ்சரை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெரும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்கள்.

''எங்க டீம்ல உள்ளவங்க ஒரே கிளாஸ், ஏன்... ஒரே டிபார்ட்மென்ட்கூடக் கிடையாது. 'மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு துருவம். பொதுவா, இன்ஜீனியரிங் காலேஜ்ல டிபார்ட்மென்ட் களுக்கு இடையில எப்பவும் ஒரு உரசல் இருக்கும்’னு சொல்வாங்க. ஆனா, வேற்றுமையில் ஒற்றுமைதான் எங்களோட வெற்றிக்குக் காரணம்!'' என்று கோரஸாகச் சொன்னவர்கள், ''எங்களோட இந்தக் கண்டுபிடிப்பை, தங்களை அழுக்காக்கிக்கொண்டு, இந்த சமுதாயத்தை சுத்தம் செய்யும் ஒவ்வொரு ஸ்வீப்பருக்கும் காணிக்கையாக்குறோம்!''

உள்ளத்தில் இருந்து சொன்னார்கள் ஸ்டூடன்ட்ஸ்!

க.தனலட்சுமி, படங்கள்: கு.பாலசந்தர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick