கேன்சர் சிகிச்சைக்கு மொபைல் ஹாஸ்பிட்டல்!

''எனக்கு மார்பகப் புற்று வந்தப்போ, நோயை விட அது தந்த பயம்தான் கொடுமையா இருந்தது. அதிலிருந்து முழுமையா மீண்டதும், கேன்சர் பற்றிய விழிப்பு உணர்வை பெண்கள்கிட்ட ஏற்படுத்துறதோட... பரிசோதனை, சிகிச்சைனு அந்தச் செலவுகளையும் பகிர்ந்துக்கணும்னு தோணவே, 'பெண் நலம்’ ஹாஸ்பிட்டல் ஆரம்பிச்சோம். இதன் அடுத்த கட்டம், மொபைல் ஹாஸ்பிட்டல்!''

- நிதானமான வார்த்தைகளில் பேசுகிறார், ராதிகா.

'புற்றுநோய்க்குப் பின்னே புதுவாழ்க்கை!' என்ற தலைப்பில் 27.9.2011 தேதியிட்ட இதழில் வெளியான கட்டுரை மூலமாக நம் வாசகிகளுக்கு அறிமுகமானவர்தான் இந்த ராதிகா. ''2009-ல் 'ஸ்ரீதன்வந்திரி டிரஸ்ட்’ மூலமா சென்னை, மந்தைவெளியில் 'பெண் நலம்’ மெடிக்கல் சென்டர் தொடங்கினோம். மக்களை நேரடியா தேடிப் போகறதுக்காக இந்த மொபைல் ஹாஸ்பிட்டலை கடந்த வருஷம் ஆரம்பிச்சோம். குறைந்த விலையில் மார்பகப் புற்று, வாய்ப் புற்று, கர்ப்பப்பை வாய்ப் புற்றுனு மூன்று வகை கேன்சருக்கு பரிசோதனைகள் செய்றோம். இப்போ சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் களத்துல இருக்கிற எங்க டீம்ல 15 பெண்கள் இருக்கோம். இதுவரைக்கும் லட்சம் பெண்களை சந்தித்து விழிப்பு உணர்வு கொடுத்திருக்கோம். ஆயிரம் பேருக்கு மேல பரிசோதனை பண்ணியிருக்கோம்'' என்று சொல்லி வியக்க வைக்கும் ராதிகா, "இந்த டிரஸ்ட்டோட கோஃபவுண்டர் டாக்டர் செல்வி, ஒரு பிரஸ்ட் சர்ஜன். எங்க பரிசோதனையில் மார்பகப் புற்று கண்டறியப்பட்ட பெண்களுக்கு இவங்க சிகிச்சை அளிப்பாங்க. கர்ப்பப்பை வாய்ப்புற்றுக்கு டாக்டர் கலாவதி சிகிச்சை அளிப்பாங்க. வாய்ப்புற்றுக்கு மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக்கிறது குறித்து வழிகாட்டுறோம்.

10 பெண்கள் கூடும் இடம் என்றால்கூட, எங்க பஸ் அங்கே கிளம்பிடும். எங்களோட இந்த அக்கறையைப் பார்த்துதான், எங்களுக்கு ரெண்டாவது பஸ்ஸை ரோட்டரி கிளப்பில் இருந்து டொனேட் பண்ண முடிவு பண்ணியிருக்காங்க. சின்னச் சின்ன உதவிகள் எங்களுக்கு கிடைச்சா கூட, அது பெண்களுக்கு பெரிய அளவில் பயன்படும்!'' என்கிறார் வேண்டுகோளாக.


கண்டறிவது எப்படி?

ர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதை 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியும். எனவே, 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒவ்வொருவரும் இப்பரிசோதனையை செய்துகொள்ளலாம். மார்பகப் புற்றுநோய்க்கு சுயபரிசோதனை செய்துகொள்ளலாம். 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் என்றால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'மேமோகிராம்’ பரிசோதனையை செய்துகொள்ளலாம். வாய்ப் புற்றுநோயை, வந்தபிறகுதான் கண்டுபிடிக்க முடியும்.

கே.அபிநயா,  படங்கள்: ஆ.முத்துக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick