``வலிமையை உணர்ந்தோம்... வாழ்க்கையில் உயர்ந்தோம்!''

சிலிர்க்க வைக்கும் 'சிங்கிள் பேரன்ட்ஸ்’

யிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்களைச் சார்ந்தே பெண்கள் வாழ்ந்து பழக்கப்பட்ட இந்த உலகத்தில், ஆண் துணையின்றி பெண் வாழ்வதும், தன் சுயசம்பாத்தியத்தில் பிள்ளைகளை வளர்ப்பதும்... சாதாரண விஷயம் அல்ல. உண்மையில், அது சாதனைதான் நம் சமூகத்தில்! அப்படி தனி மனுஷிகளாக வாழ்ந்து வரும் 'சிங்கிள் பேரன்ட்’ சிலரை, உலக மகளிர் தின (மார்ச்-8) சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம். கதைகள் கேட்டோம். கை குலுக்கவில்லை... கூப்பினோம்! இதோ அடுத்தடுத்த பக்கங்களை அலங்கரிக்கிறார்கள் இந்த வீர மங்கைகள்!

''தனி என்று யாருமில்லை... உங்களுக்கான துணை தூரமில்லை!''

கணவருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் அவரை விட்டுப் பிரிந்தவர், திருச்சியில் வசிக்கும் விஜி. தன் பெண் குழந்தையை தனியாளாக வளர்க்க, ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸையும், தையலையும் கையிலெடுத்தார். இன்று அவருடைய பெண் பி.இ. முடித்து பெங்களூரில் வேலை பார்க்கிறார்.

நிம்மதியுடன் நிமிர்ந்திருக்கிறார், விஜி! ''எனக்கு சொந்த ஊர் காரைக்குடி. என்னைத் திருநெல்வேலியில கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. என் பொண்ணுக்கு ரெண்டரை வயசானப்போ, வீட்டுக்காரர் வெளிநாடு போனார். மூன்று வருஷத்துக்கு ஒரு தடவை பணம் அனுப்புவார். ஒரு கட்டத்தில், என்னுடனான பந்தத்தை முறிச்சுக்கிட்டார். என்னை வேண்டாம்னு சொன்னவர் எனக்கு வேணும்னு போராட விருப்பமில்ல. விட்டுட்டேன். வெடிங் பிளவுஸ், தையல்னு வருமானத்துக்கு வழி பார்த்துக்கிட்டேன். சின்ன வயசுல எனக்கிருந்த இசை ஆர்வத்தையும் மீட்டெடுத்தேன். குறிப்பா எனக்கு வீணை தெரியும். அதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். ஆரம்பத்துல எல்லாம், கணவரை விட்டுப் பிரிஞ்சிருக்கேன்னு யார்கிட்டயாவது சொல்லும்போதே அழுகை வரும். ஒரு லோன் வாங்கப்போனா கூட, கணவர் பத்தி அத்தனை விவரங்கள் விசாரிப்பாங்க. சில இடங்களில், என் மீதான பார்வையே வேற மாதிரி இருக்கும். அப்போதான் நான் என் பொண்ணும், இனி என் கணவர் இருக்கார்னு யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு முடிவெடுத்தோம். என் அனுபவத்துல, கல்லூரிப் பெண்களின் பிரச்னைகளுக்கான கவுன்சலிங்கும் கொடுக்க ஆரம்பிச்சேன்... என் பொண்ணு படிச்ச கல்லூரி உட்பட! இப்போ நான் 'ஓவியா ஆர்ட்ஸ் அண்ட் மியூசிக்கல்ஸ்’ உரிமையாளர். 20 பேருக்கு வேலை கொடுக்கும் முதலாளி. நாம தனியா இருக்கோம்னு, எந்தப் பெண்ணும் நினைக்க வேண்டாம். கடவுள் எல்லோருக்கும் எல்லா நேரத்துலயும் ஆறுதலுக்கு ஒருத்தரை  பக்கத்துலயே வெச்சிருப்பாருங்கிறதை மறந்திடாதீங்க. மன தைரியத்தோட போராடுங்க!''

''மக பொறந்தப்போ ஆரம்பிச்ச போராட்டம்... பேத்தி பிறந்துதான் முடிஞ்சிருக்கு!''

திருச்சி, மணப்பாறையில் உள்ள 'நாச்சாஸ் லேடீஸ் டெய்லரிங்’ உரிமையாளர், நாச்சம்மை. இளவயதிலேயே நோய்க்கு கணவனைப் பலிகொடுத்தவர், தன் இரண்டு பெண் பிள்ளைகளையும் ஆளாக்க பட்ட போராட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இன்று நாச்சம்மையின் மூத்த பெண் தனியார் பள்ளியில் ஆசிரியர், இளைய பெண் விப்ரோவில் வேலை பார்க்கிறார்!

''புதுக்கோட்டைதான் சொந்த ஊர். ப்ளஸ் டூ வரைதான் படிப்பு. டெய்லரிங் கத்துக்கிட்டேன். கணவர் மிளகாய் அரைக்கிற மெஷின் வெச்சிருந்தார். சொந்தமா மில் வாங்கி, கொஞ்சம் கொஞ்சமா வாழ்க்கையில் முன்னேறி வந்தப்போ, பிளட் கேன்சர்ல இறந்துட்டார். மில்லை வித்து, லோனைக் கட்டிட்டு மணப்பாறைக்கு வந்துட்டோம்.

தையல், யோகாவுல ஆசிரியர் பட்டயம் வாங்கினேன். தையல் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். ஓய்வில்லாம என் கால் மெஷினை அழுத்திட்டே இருக்கும். என் குறுக்கு வலி அதிகமாக ஆக, என் புள்ளைங்க வளர்ந்து நின்னாங்க. இப்போ 10 மெஷின் போட்டு, தினமும் ஷிஃப்ட் முறையில 20 பேருக்கு கிளாஸ் எடுக்குறேன். அந்தப் பணத்துலதான் பிள்ளைகளைப் படிக்க வெச்சேன். பெரியவ எம்.ஏ., பி.எட் முடிச்சிட்டு பள்ளியில வேலை பார்க்குறா. ரெண்டாவது பொண்ணு பி.எஸ்ஸி முடிச்சிட்டு விப்ரோல வேலை பார்க்குறா. நானும் பாரதிதாசன் யுனிவர்சிட்டியில அஞ்சல்வழிக் கல்வி மூலமா பி.எஸ்ஸி., யோகா முடிச்சுட்டேன்.

ரெண்டு கிலோ தூக்கம் வாங்கி கண்ணுக் குள்ள போட்டுக்கலாமானு தோணும். அப்படி அல்லும் பகலும் உழைச்சு தூக்கம் தொலைச்சிருக்கேன். காலையில மூணு மணிக்கு எந்திரிச்சு, நைட்டு 12 மணிக்குதான் தூங்குவேன். என் சின்னப்பொண்ணு பொறந்ததுல இருந்து 18 வருஷமா சைக்கிள்ல அலைஞ்சு திரிஞ்சுதான் என் பிழைப்பை நடத்தினேன். என் பேத்தி பிறந்த பின்னாடிதான் சைக்கிள் ஓட்டுறதை நிப்பாட்டி இருக்கேன்!''

றிகொடுத்தேன் கணவரை... பாதைகாட்டியது பாக்குமட்டை!''

இன்று பாக்குமட்டை தயாரிப்பாளர், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி. நேற்று கணவனை இழந்து நின்றபோது அவரின் கல்வித்தகுதி, ப்ளஸ் டூ ஃபெயில். வாழ்க்கைக்கான வழி தேடியவருக்கு பாக்கு மட்டை பிசினஸ் பற்றித் தெரிய வர, இப்போது அவர் அதில் மாதம் 50,000 சம்பாதிப்பதோடு, 20 தொழிலாளிகளுக்கு முதலாளி!

''பிரிய மனமில்லாம, உள்ளூர் மாப் பிள்ளைக்கே என்னைக் கட்டிக் கொடுத்தார் எங்க அண்ணன். என் கணவர் ஒரு அட்வகேட். எந்தக் குறையும் இல்லாத வாழ்க்கை. எங்களுக்கு குழந்தை பாக்கியம் மட்டும் தள்ளிப் போக, எனக்கு குழந்தை பிறந்த அப்புறம்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிடிவாதமா இருந்த எங்க அண்ணன், திடீர்னு இறந்துட்டார். அந்த இழப்பில் இருந்து மீள, 12 வருஷம் கழிச்சு எனக்கு குழந்தை பிறந்தது. அவனை வளர்த்து ஆளாக்கிட்டேன். இப்போ அவன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு மூணு வயசானப்போ, என் கணவருக்கு கால் வீக்கமாகி படுத்த படுக்கையாகிட்டார். ஒருநாள் என்னைக் கூப்பிட்டவர், 'எனக்கு என் சட்ட புத்தகங்கள்னா உயிர். ஒருவேளை நான் இல்லாமப் போயிட்டாகூட, நீ வக்கீலுக்குப் படி. என் புத்தகங்கள் மூலமா நான் உன்கூட வாழ்வேன்’னு சொன்னவர், சில நாட்களில் தவறிட்டார். கிட்டத்தட்ட 18 வருஷம் கழிச்சு, மீண்டும் ப்ளஸ் டூ பாஸ் பண்ணி, வக்கீலுக்குப் படிச்சேன். இன்னொரு பக்கம், கடன் சேர்ந்திருந்தது. அப்போதான், பாக்கு மட்டை பிசினஸ் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். பஞ்சாப் நேஷனல் பேங்க்ல கடன் வாங்கி, தொழிலில் கால் ஊன்றினேன். கடனை எல்லாம் அடைச்சேன். இப்போ மாசம் 50,000க்கும் குறையாம சம்பாதிக்கிறேன். 20 பேருக்கு வேலை கொடுத்திருக்கேன்.  இடி மேல் இடினு சொல்வாங்கள்ல... அதை எனக்குப் புரியவெச்ச வாழ்க்கை, பெண்கள் வலிமையானவங்கன்னும் புரியவெச்சது. என் வலிமையை எனக்கு உணரவெச்சது!''

 ''நேர்மையான எந்த வேலையும் செய்யலாம்!''

கணவர் என்ற உறவுக்கான எந்தக் கடமையையும் செய்யாத ஒருவருக்கு வாக்கப்பட்ட வாழ்க்கை, பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சிலோன் காலனியில் வசிக்கும் கலைச்செல்விக்கு. தினக்கூலி வேலை செய்து, மூன்று பிள்ளைகளுக்கும் பசியாற்றி ஆளாக்கினார். மூத்தவர் டிரைவர், இளையவர் பொறியியல் மாணவர், மூன்றாவது பையன் பள்ளிப் படிப்பு முடிக்க இருக்கிறான். தான் உழைத்து வாங்கிய இடத்தில், ஆஸ்பெஸ்டாஸ் வீடு கட்டி கம்பீரமாக வாழ்கிறார், கலைச்செல்வி!

''ஒன்பதாம் வகுப்புதான் படிப்பு. காதலிச்சுதான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதனால இன்னிக்கி வரைக்கும் எங்க வீட்டு ஆளுங்க எங்கூட பேசமாட்டாங்க. மூணு புள்ளைங்க பொறந்ததும், வெளிநாட்டுக்குப் போனார். ஆனா, எனக்கு காசு அனுப்பல. ரெண்டு வருஷம் கழிச்சு வந்தவர், என்னை சந்தேகப்பட்டார். மறுபடியும் வெளிநாட்டுக்குப் போனார். ஆனாலும் எனக்குப் பணம் அனுப்ப மாட்டார். ஒரு முடிவு பண்ணுனேன்... ’திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, வேசியா போகக்கூடாது. என் பிள்ளைகளை காப்பாத்த வேற எந்த வேலையும் செய்யலாம்'னு, கட்டட வேலை, வீட்டு வேலை, பள்ளிக்கூட ஆயாம்மா வேலைனு தினக்கூலி வேலைக்குப் போனேன். ஆனா, புள்ளைங்க பள்ளிக்கூடத்துல இருந்து வரும்போது வெறும் வீடா இருக்ககூடாதுனு, சாயங்காலம் சீக்கிரமா வீட்டுக்கு ஓடிருவேன்.

என் சின்னப்பையனுக்கு அவனோட அப்பா முகம் கூட தெரியாது. திடீர்னு ஒரு நாள் ஊரு திரும்பினவரு, என் வீட்டுலதான் இருந்தார். ஆனா, எங்களுக்கு சரிப்பட்டு வரலை. என் பசங்க, 'இத்தனை நாள் அப்பா இல்லாம இருந்த மாதிரியே இனியும் நாங்க இருந்துக்குறோம்.  எங்களுக்கு எங்கம்மா மட்டும் போதும். நீ எங்க வீட்டுல இருக்காதே''னு சத்தம் போட்டானுங்க. அன்னிக்கு வீட்டை விட்டுப் போனவரு, இன்னொரு பொண்ணைக் கல் யாணம் பண்ணிக்கிட்டு அசலூருல இருப்பதா சொன்னாங்க. நான் என் பசங்களுக்காக வாழ, அவனுங்க எனக்காக வாழ்ந்தானுங்க. நாளும் பொழுதும் ஓடி நிமிர்ந்து பார்த்தா, என் மகனுங்க வளர்ந்து நிக்குறானுங்க. பத்தாவதுல 476 மார்க்கு வாங்குன கடைசிப் பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட, ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் அஞ்சு வட்டிக்கு கடன் வாங்குனேன். வாழ்க்கை முழுக்க கஷ்டம்தான். ஆனா, இப்போ சொந்த வீடு கட்டியாச்சு. தோளுக்கு மேல வளர்ந்து நிக்குறானுங்க மகனுங்க. இனி என்ன கவலை எனக்கு?!''

''என் பையன் இருக்கான் எனக்கு!''

இரண்டு திருமணங்கள் ராணியின் வாழ்வில். இரண்டுமே தோல்வியில் முடிய, தனியாளாகத் தன் பிள்ளை வளர்க்கும் அம்மாக்களில் ஒருவராக உழைத்துக்கொண்டிருக்கிறார், பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூர் குடிக் காட்டைச் சேர்ந்த இந்தப் பெண்!

''பத்தாவது முடிச்சதும், சொத்துக்கு ஆசைப்பட்டு என் தாய்மாமனுக்கே என்னைக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. ஒருநாள் கூட அவரோட வாழல. வாழவும் முடியாதுனு சொல்லிட்டேன். அவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லனு எழுதி வாங்கிக்கிட்டாங்க. நாலஞ்சு வருஷம் கழிச்சு, என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி வந்தார் ஒருத்தர். எல்லோரும் பேசி அந்தக் கல்யாணத்தை செஞ்சு வெச்சாங்க. ஒரு பையன் பொறந்தான். அதுவரை நல்லா இருந்தவர், அதுக்கு அப்புறம் என்னைக் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சார். 'ஏதோ ஒரு வேகத்துலதான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், உன்னைப் பிடிக்கலை’னு சொன்னார். ’பிடிக்காதவங்களை கஷ்டப்படுத்தி ஏன் வாழணும்?'னு நான் நினைச்சிட்டு இருந்தப்போ, அவர் இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ’வீட்டுக்காரர்தான் இல்ல, வாழ்க்கை இருக்கு நமக்கு'னு முடிவெடுத்தேன்.

அதுவரை வெளிய போயிப் பழக்கமில்லாத நான், என் புள்ளைக்காக வீட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். இப்போ என் பையன் அஞ்சாவது படிக்குறான். பொதுவா, பொண்ணு வாழாவெட்டியா வந்தா, எப்பவும் அவளையேதான் குறை சொல்லும் இந்த உலகம். அதிலும் ரெண்டு கல்யாணம் பண்ணி, ரெண்டும் தோல்வியானா, என்னென்ன சொல்லும்? எதையும் நான் கண்டுக்கல. என்னோட கஷ்டத்தைப்  புரிஞ்சுக்காதவங்களுக்கு, என் நியாயத்தை விளக்கணும்னு அவசியமில்ல. என் பையன் இருக்கான் எனக்கு!''

அன்று வீட்டு வேலைக்காரி... இன்று வீட்டு முதலாளி!

கோகிலா, சேலம், கென்னடி நகரைச் சேர்ந்தவர். 25 வருடங்களாக கணவன் துணையின்றி, தனிமரமாக நின்று, வீட்டு வேலை பார்த்து, தன் இரண்டு மகன்களையும் வளர்த்து, படிக்க வைத்தவர். அவரின் மூத்த மகன், இன்று பொறியாளர்!

''எத்தன வயசுனுகூடத் தெரியல... அந்தாளோட எனக்குக் கல்யாணம் ஆனப்போ! 18, 19 இருக்கும்னு நெனைக்குறேன். மூத்த பையன் பொறந்தப்போ விட்டுட்டு ஓடிட்டாரு. ஒரு நாள் திரும்பி வந்தாரு. வொயர் வேலை செஞ்சு, சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் சாராயத்துக்குக் கொடுப்பாரு. ரெண்டாவது பையன் பொறந்த 20 நாள்ல, ஹார்ட் அட்டாக்ல செத்துப் போயிட்டாரு. வீட்டு வேலை செய்ய ஆரம்பிச்சேன். வேலை பார்க்கும் வீடுகள்ல, சாப்பிட ஏதாச்சும் கொடுத்தா, பிளாஸ்டிக் கவர்ல எடுத்துட்டு வீட்டுக்கு வந்து, என் புள்ளைகளுக்குக் கொடுப்பேன். உடம்புல இருக்குற வலுவை எல்லாம் கொட்டி உழைச்சு, எம்புள்ளைகள படிக்க வெச்சேன். மூத்த புள்ளைய இன்ஜினீயர் ஆக்கிட்டேன். வேலைக்குப் போயிட்டு இருக்கான். சின்னவன் ப்ளஸ் டூ படிக்கிறான். அவனையும் நல்ல படிப்பு படிக்க வெச்சிரணும். சிறுகச் சிறுகச் சேமிச்சு, ஒரு வீடு கட்டினேன். மாடியை வாடகைக்கு விட்டுட்டு, கீழ் வீட்டுல நாங்க இருக்கோம்.

அக்கம்பக்கத்துல இருக்குறவங்க எல்லாம், 'அவ கெட்டிக்காரி!’னு என்னை ரொம்பப் பாராட்டிப் பேசுவாங்க. என் புள்ளைங்கள வளர்க்கணுமேங்குற தவிப்புதான், என்னை கரையேத்தி விட்டிருச்சு. ஆம்பளையவிட அக்கறையா, தெறமையா குடும்பத்த காப்பாத் துவா பொம்பளை!''

வே.கிருஷ்ணவேணி, சி.ஆனந்தகுமார், ர.ரஞ்சிதா

 படங்கள்: என்.ஜி.மணிகண்டன், எம்.விஜயகுமார், தே.தீட்ஷித்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick