ஒரு ஊர்ல ஒரு தாத்தா... ஒரு பேத்தி!

''ஹிக்கரி டிக்கரி டாக் ரைம்ஸ் உங்களுக்குத் தெரியுமா?'' குழந்தைத்தனத்தோடு பேச ஆரம்பிக்கிறார் ஆராதனாவின் தாத்தா தாமோதர் சந்துரு.

''இது ஆராதனா முதன் முதல்ல எனக்கு சொல்லிக் கொடுத்த ரைம்!'' எனும் இவர், ஈரோட்டில் உள்ள 'ஜெயச்சந்திரா மில்ஸ்’ஸின் நிறுவனர். 70 பேர் வேலை பார்க்கும் நிறுவனத்தை நிர்வகிக்கும் இவர், தன் பேத்தி ஆராதனாவை வளர்த்தெடுக்கும் சிறப்பு, கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்! ஐந்து வயதாகும் பேத்தியைப் பற்றி 'ங்கா’ என்ற கவிதைப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்!

''எனக்குப் பெண் குழந்தைனா ரொம்பப் பிடிக்கும். ஆனா, எங்களுக்கு ரெண்டும் ஆண் பிள்ளைங்க. மூத்த மருமக கருவுற்றப்போ, என் அத்தனை வருஷ ஆசையும் ஏக்கமும் பிரார்த்தனையும் சேர்த்து, பேத்திக்காக காத்திருந்தேன். அதேமாதிரி பெண் குழந்தை பிறக்க, உலகத்தோட பெரிய சந்தோஷங்களை எல்லாம் வீட்டுக்குள்ள கொண்டு வந்தா குட்டிப் பொண்ணு. 'ஆராதனா’னு பேர் வெச்சோம். அவளோட 'ங்கா’ கேட்க எல்லோரும் காத்திருப்போம். குப்புற விழுந்தது, தவழ்ந்தது, நடந்ததுனு எல்லாமே கண்ணுக்குள்ளயே நிக்குது. எந்த டைரக்டராலும் நான் சொல்லும் அந்த அன்புக் காட்சிகளை படமா எடுக்க முடியாது. அவ்ளோ ஆழமா அவளோட ஒவ்வொரு அசைவையும் உள்வாங்கியிருக்கேன்!'' என்று பூரித்தவர், ''எனக்கு மட்டுமில்ல... ஆத்தா, அம்மாயி, அப்புச்சி, மாமா, அத்தை, சித்தப்பா, சித்தினு எல்லோருக்கும் செல்லம். எல்லோரும் அவளுக்கும் செல்லம். அவ சித்தப்பா அருண்குமார் கல்யாணத்துல விருந்தினர்களுக்கு என் பேத்தி பத்தி நான் தயாரிச்ச ஒரு புத்தகத்தைப் பரிசளிக்க நினைச்சேன்.

என் இனிய நண்பர் கவிதாயினி தேனம்மை லட்சுமணன்கிட்ட, கேட்டேன். ஒவ்வொரு படத்துக்கும் பொருத்தமான அழகுக் கவிதைகளை எழுதிக் கொடுத்தாங்க. 'ங்கா’னு பெயரிட்டு நண்பர் செல்வக்குமார் புத்தகமாக்கித் தந்தார்!'' என்றபோது, தாத்தாவின் கண்களில் மின்னல்.

''எங்க கொங்குப் பகுதியில ஒரு வழக்கம் உண்டு. பேத்திங்க முதல் பொங்கல் வைக்கும்போது அம்மாயி வீட்டுல இருந்து பொங்கச் சீர் கொடுப்போம். போன வருஷம் ஆராதனா முதல் தைப்பொங்கல் வெச்சா. அதை மிகச் சிறப்பா செய்ய எண்ணி, என் அருமை நண்பர், எழுத்தாளர் நாஞ்சில் நாடன்கிட்ட ஆலோசனை கேட்டேன். 'நாஞ்சில் நாட்டு சமையல் கலைஞர்களைக் கொண்டு விருந்து செஞ்சு, கொங்கு மக்களை அசத்திடலாம்!’னு சொல்லி, அதன்படியே விருந்தினர்களை மனம் குளிர வெச்சுட்டார்!'' எனும் தாமோதரிடம் இன்னும் பேசியபோது... குழந்தை வளர்ப்பிலும் அவர் சூப்பர் தாத்தா என்பது புரிந்தது!

''இன்னிக்கு குழந்தைகளுக்கு சொந்தக்காரங்களை எல்லாம் தெரியுறதில்ல. 'ஆன்ட்டி’, 'அங்கிள்’ என்ற ரெண்டு வார்த்தைக்குள்ளயே மொத்த உறவுகளையும் சுருக்கிடுறாங்க. அப்படி இருக்கக் கூடாதுனு, சொந்தம் சூழ ஆராதனா வளர ஆசைப்பட்டு, எல்லா விசேஷங்களுக்கும் அவளையும் கூட்டிட்டுப் போவோம். ஒவ்வொரு உறவையும் அவளுக்கு அந்த உறவுக்கான பெயரைச் சொல்லியே அறிமுகப்படுத்தி, அப்படியே அழைக்கப் பழக்குறோம். வாழ்க்கையில் கஷ்டத்தில் இருக்குறவங்களுக்கு எங்களால இயன்றதைச் செய்யும்போது அவளையும் கூட்டிட்டுப் போய், அந்தப் பழக்கத்தையும் கத்துத் தர்றோம்.  

குழந்தைக்கு படிப்பு முக்கியம்தான். ஆனா, அது சுமையா இருக்கக் கூடாதுனு நினைக்குறவன் நான். ஆராதனாவை, பெரிய ஸ்கூல்னு சொல்லி ஒரு பள்ளிக்கூடத்துல எல்.கே.ஜி. சேர்த்தாங்க என் மகனும் மருமகளும். ஆனா, அவ வகுப்பறையில சிறுநீர் கழிச்சிட்டான்னு, ஒரு மணி நேரம் வகுப்பறைக்கு வெளிய நிக்க வெச்சுட்டாங்க. 'புள்ள வௌயாடுற வயசுல வகுப்பறையில அடைச்சா அப்படித்தான்’னு அவ அம்மா, அப்பாவைத்தான் திட்டுனேன். அடுத்த நாளே மான்டிசோரி பள்ளிக்கு மாத்திட்டோம். இப்போ அவ சந்தோஷமா இருக்கா!'' என்று முகத்தில் புன்னகை தேக்கும் தாமோதரின் வீடு, அழகான கூட்டுக் குடும்ப நந்தவனமும் கூட!

''இப்போ ஆராதனா யு.கே.ஜி படிக்கிறா. அடுத்தும் எனக்கு பேத்திதான் பிறக்கணும் என்பது என் பேராசை!'' கைகள் கூப்பி வேண்டிக்கொள்கிறார், தாத்தா!

- வே.கிருஷ்ணவேணி, படம்: ரமேஷ் கந்தசாமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick