Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆண்களுக்கும் பிரசவ வலி!

'எவ்வளவு சிரமப்பட்டு பிள்ளையைப் பெற்றெடுக்கிறோம்... இதை ஆண்கள் உணர்வதேயில்லை’ என்பது தொடங்கி, 'பிரசவ வலியின் வேதனையை அனுபவித்தால்தான் தெரியும் ஆண்களுக்கு’ என்பது வரை உலகம் முழுக்கவே ஒன்றாகத்தான் ஒலிக்கிறது பெண் களின் வேதனை மொழி. இதிலும், 'மற்ற நேரங்களைவிட, கர்ப்பகாலம், பேறுகாலத்தில் அனுசரணையற்ற ஆண்களின் நடவடிக்கை வேதனையாக இருக்கிறது’, 'ஒரு குழந்தைக்குத் தாயாக, பெண்ணுடல் கடக்கும் சிரமங்கள் புரியாதவர்களாக இருக்கிறார்கள் ஆண்கள்’ என்கிற குமுறல் சீனாவில் அதிகமோ அதிகம்! இத்தகைய சூழலில், ஆண்களுக்கும் பேறுகால வலியை உண்டாக்கி, அவர்களையெல்லாம் பெண் வலியைப் புரியவைக்கும் வேலையைத் தொடங்கியிருக்கிறது... சீனாவின் ஜினான் நகரில் இருக்கும் ஐமா மருத்துவமனை!

நான்கு மாதங்களுக்கு முன், ஆரம்பிக்கப்பட்ட இந்த 'பிரசவ வலி உணர் முகாம்' (Pain Experience Camp), தற்போது பயங்கர பிஸி. வாரத்தில் இரண்டு நாட்கள் இதற்காக ஒதுக்கப்பட்டதோடு, ஜினான் நகரின் ஷாப்பிங் மால் ஒன்றிலும், இதற்கான பூத் ஒன்றை ஆரம்பிக்கும் அளவுக்கு வரவேற்பு பெருகிவிட்டது. மனைவி சகிதமாக கணவன்மார்கள் பலர் வலி உணர வரும் காட்சி, வேடிக்கை!

மருத்துவமனையில், காட்டன் பேடுகள் பொருத்தப்பட்ட மின் சாதனம், ஆண்களின் அடிவயிற்றில் வைக்கப்பட்டு, எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டு, செயற்கை வலி உண்டாக்கப்படுகிறது. ஒன்றிலிருந்து பத்து வரையுள்ள லெவல்களில், ஒவ்வொரு லெவலாக அதிகரிக்க அதிகரிக்க, வலியின் அளவும், ஆண்களின் அலறலும் அதிகரிக்கிறது. பல ஆண்கள் லெவல் மூன்றிலேயே நர்ஸிடம் ஷாக்கை நிறுத்தும்படி கெஞ்ச ஆரம்பிக்க, லெவல் ஐந்து வரை தாக்குப் பிடிக்கும் சிலர் அதற்கு மேல் திணறித் தெறித்து ஓடுகிறார்கள். வெகு சிலர், லெவல் 10 வரை சென்றடைந்து, வெளிறிய முகத்துடன், நடுங்கும் உடலுடன் படுக்கையில் இருந்து எழுகிறார்கள்.

''பெண்கள் எதிர்கொள்ளும் பேறுகால சிரமங்களுடன் ஒப்பிடுகையில், இது மிகச் சாதாரணமே! ஆனாலும், இதற்கு உட்படுத்தப்படும் ஆண்கள், இந்த வலியின் மூலமாகவே பேறுகால வலியின் ஒப்பீடற்ற வேதனையைப் புரிந்துகொள்வார்கள்; அம்மாவாகப் போகும் தங்கள் மனைவியின் சிரமங்களை மனதார உணர்வார்கள்; குழந்தை பிறப்பிலும் வளர்ப்பிலும் அவர்களுக்கு உதவியாக இருப்பார்கள்'' என்கின்றனர் மருத்துவமனை நிர்வாகத்தினர்.

''இது வெறும் செயற்கைவலி மட்டுமே. இந்த வலியை, நினைத்தால் நிறுத்திவிடலாம். இதற்கே நாங்கள் உயிர் பிரிந்து, உயிர் வந்து சேர்ந்ததுபோல உணர்கிறோம். ஆனால், பேறுகாலத்தின்போது இதைவிட அதிகம் வதைக்கும், பல மணி நேரம் நீடிக்கும் கட்டுப்பாடற்ற குரூர வலியுடன், ரத்த இழப்பு, உடல் சிக்கல்கள், ஹார்மோன் மாறுபாடுகள், மனச்சோர்வு என்று எண்ணற்ற வேதனைகளையும் சேர்த்து அனுபவிக்கும் பெண்களின் வலிமைக்கு முன்னால், ஆண்கள் பூஜ்யம் என்பதை புரிந்துகொண்டோம்!'' என்கிறார்கள் இந்த வலி உணர் முகாமுக்கு வந்து செல்லும் ஆண்கள், பெண்மைக்கு சல்யூட் வைத்தபடி!

ஆபரேஷன் சக்சஸ்!


''உணர்வதற்கு முன்... ஒப்புக்கொள்ளுங்கள்!''

இந்தச் செய்தி குறித்து, மதுரையைச் சேர்ந்த மகப்பேறு சிறப்பு மருத்துவர், டாக்டர் சுதா தீப் பேசும்போது, ''இதுபோன்ற ஒரு செயற்கை வலிக்கு உட்பட்டுதான், ஒரு கணவன் தன் மனைவியின் பிரசவகால கஷ்டங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. மனைவியின் சிரமங்களை உணர்வதற்கு முன், அவள் சிரமப்படுகிறாள் என்பதை ஒப்புக்கொள்வதே இந்தப் புரிதலின் முதல்படி. கர்ப்பகாலத்தில் மனைவி மருத்துவரிடம் செல்லும்போது கணவரும் உடன் செல்வதில் ஆரம்பித்து, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, இறுதியாக பிரசவ அறை வரை அவளுடன் இருக்க வேண்டும். பொதுவாக, வலியின் அளவு 'டெல்’ என்று குறிக்கப்படும். ஒரு மனிதனால் அதிகபட்சமாகத் தாங்கக்கூடிய வலியின் அளவு, 45 டெல். ஆனால், ஒவ்வொரு பெண்ணும் தன் பிரசவத்தின்போது, 57 டெல் வலியைக் கடக்கிறாள். இது, 20 எலும்புகள் ஒரே நேரத்தில் ஒருசேர முறியும்போது ஏற்படும் வலிக்கு இணையானது. கணவன், தன் மனைவியின் அந்தப் போராட்டத்தைக் கண்கூடாகக் காணும்போது, நிச்சயம் அது அவர்களுக்கு இடையிலான பந்தத்தை அதிகரிக்கும்!'' என்றார்.

ஜெ.எம்.ஜனனி,  படம்: பா.காளிமுத்து

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வெண்புள்ளிகள் கொண்டவர்களுக்கான சுயம்வரம்..!
ஆர்கானிக் உணவு... அலைமோதும் கூட்டம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close