ஆம்பள புள்ளைய இப்படித்தான் வளர்க்கணும்!

'ஆண்களிடம் இருந்து விலகி இருங்கள்’ என்கிற அறிவுரையைச் சொல்லிச் சொல்லியே பெண் குழந்தைகளை வளர்க்கும் நம் குடும்பங்கள், 'பெண்களைத் தவறான கண்ணோட்டத்துடனேயே பார்க்காதீர்கள்’ என்கிற அறிவுரையை ஆண் குழந்தைகளிடம் சொல்லி வளர்ப்பதில்லை. இத்தகைய போக்குக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில், 'உங்கள் சகோதரியிடம் எப்படி கண்ணியமாக நடந்து கொள்வீர்களோ... அதைப்போலவே மற்ற பெண்களிடம் நடந்து கொள்ளுங்கள் ஆண்களே’ என உரக்கச் சொல்வதுடன், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளைக் கண்முன் கொண்டுவந்து எச்சரித்து, இனி என்ன செய்ய வேண்டும் என கேள்வி கேட்கிறது, சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'மனதில் உறுதி வேண்டும்’ என்கிற குறும்படம்.

பிரபல சீரியல் நடிகர்கள் வேணு அரவிந்த், ஷைலஜா தம்பதியாக நடித்துள்ளனர். மகன் வீட்டை விட்டுவெளியே செல்லும்போது சமூகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற அறிவுறுத்தல் இல்லாமல், மகளுக்கு மட்டும் பல அறிவுறுத்தல்களைச் சொல்லி வெளியே அனுப்புகின்றனர் இந்தத் தம்பதி. இருவருமே பாதுகாப்பாக வீடு திரும்புகிறார்கள். ஆனால், ஒரு பாவமும் அறியாத வேறொரு பள்ளிச் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாகிவிடுகிறாள். விசாரிக்கும்போது, இந்தத் தம்பதியின் மகன்தான் குற்றவாளி எனத் தெரிகிறது. மகள் பாதுகாப்பாக வீடு திரும்புவாளா என்று காட்டுகிற அக்கறையில் ஒரு பங்கையாவது, மகன் வெளியிடங்களில் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதில் காட்ட வேண்டும் என்பதை நெற்றியிலடித்துச் சொல்கிறது படம் (https://www.youtube.com/watch?v=rarKN-MRNN8).

படத்தின் இயக்குநர் பாம்பே சாணக்யா, 'வீட்டுக்கு வீடு லூட்டி’, 'இரண்டாம் சாணக்யா’ ஆகிய தொலைக்காட்சி சீரியல்களை ஏற்கெனவே இயக்கியிருப்பவர். தற்போது குறும்படங்கள் இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

''போராட்டங்கள், சட்டங்கள், தண்டனைகள் போன்றவற்றுக்கெல்லாம் மேலாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க, ஆண்களுக்கான ஒழுக்கத்தை அவர்களின் குடும்பங்கள் கற்றுத் தருவதே தீர்வாக இருக்கும். 'நீங்கள் வெளியே பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும், எங்களைப் போல ஓர் உயிர், உடல்தான்’ என்பதை ஆண் பிள்ளைகளுக்கு குடும்பத்திலிருக்கும் பெண்கள் வலியுறுத்திச் சொன்னாலே, பெண்களை வக்கிரமாகப் பார்க்கும் பார்வை மாற வாய்ப்பிருக்கிறது'' என்றவர், வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடர்ந்து 24 குறும்படங்கள் இயக்கி வெளியிடவிருக்கிறார்.

''எல்லாமே சமூக கருத்துக்களைச் சொல்லும் படங்கள்!''

சமூக அக்கறையுடன் சொன்னார், நிஜ படைப்பாளி பாம்பே சாணக்யா.

பொன்.விமலா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick