ஓவியம் தருமே ஒரு லட்சம் வருமானம்!

‘‘பத்தாம் வகுப்பு படிச்சிருக்கேன். ஆனா, இன்னிக்கு பி.இ., எம்.பி.பி.எஸ் படிச்சவங்களுக்கு நிகரா மாசம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கிறேன். அதுக்கான மூலதனம், என் ஓவியத்திறமை!’’
 
- தூரிகைகளை அடுக்கி வைத்துக்கொண்டே பேசுகிறார் நிர்மலாதேவி. தஞ்சாவூர் ஓவியத்தில் கடந்த 15 வருடங்களாக வெற்றிகரமாக வருமானம் ஈட்டிவரும் ஈரோட்டுப் பெண்மணி.

‘‘திருமணத்துக்கு அப்புறம் வீட்டை அழகுபடுத்துறதுக்காக தஞ்சாவூர் ஓவியங்கள் வாங்கினேன். எனக்கு இயல்பிலேயே கலை ஆர்வம் அதிகம். அதனால, அந்த ஓவியங்களை ஏன் நாமளே செய்யக்கூடாதுனு நினைச்சு, சென்னையில ஒரு மாஸ்டர்கிட்ட தஞ்சாவூர் பெயின்ட்டிங்ஸ் பற்றி முழுமையா கத்துக்கிட்டேன். அதை தொழிலா எடுத்துச் செய்யும் யோசனை இருந்ததால, பெங்களூரிலும், கோவையிலும் காபி பெயின்ட்டிங்ஸ், லைன் ஆர்ட், எம்போசிங் மாடல் பெயின்ட்டிங்ஸ்னு பல இன்டீரியர் டெகரேஷன் ஓவியங்களை முறையா கத்துக்கிட்டேன்.

அந்தச் சமயத்தில், என் உறவுக்காரப் பெண் ஒருத்தவங்க, அவங்களோட பூஜை அறைக்காக ஒரு கடவுள் ஓவியத்தை வரைந்து தரச்சொல்லிக் கேட்டாங்க. ரசனை என்பதைவிட, அது பிரார்த்தனை சம்பந்தப்பட்ட விஷயம்கிறதால, என்னோட முழு அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி ஓவியத்தை உருவாக்கினேன். அது எனக்கு நிறைய பாராட்டுகளையும், வேலைக்கு ஆட்களை நியமிக்கிற அளவுக்கு ஆர்டர்களையும் வாங்கித் தந்தது!’’ என்று பிசினஸின் ஆரம்ப அத்தியாயம் சொல்லி பெருமைப்படும் நிர்மலாதேவி, இப்போது சென்னை, ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் கரூரில் தஞ்சாவூர் ஓவியங்களுக்கான ஷோரூம்களை நடத்தி வருகிறார்.

‘‘வெளிநாட்டினர், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவங்க பலர், தஞ்சை ஓவியங்களின் சிறப்புகள், வேலைப்பாடுகள் பற்றிக் கேட்டுத் தெரிஞ்சுட்டு, ஆர்வமா வாங்கிட்டுப் போவாங்க. இதுவரை 10,000 ஓவியங்கள் விற்பனை செய்திருக்கேன். என்னோட எல்லா ஷோரூம்களிலும் சேர்த்து இப்போ ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கிறாங்க. நான் தினமும் 8 மணி நேரத்துக்கும் அதிகமா ஓவியங்கள் வரைவதில் ஈடுபடுவேன். பண்டிகை காலங்களில் இரவு, பகலா வேலை பார்த்து, சொன்ன நேரத்தில் டெலிவரி கொடுப்போம். கடின உழைப்புதான், இந்தத் தொழிலில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்க வைக்குது. பொழுதுபோக்கா ஆரம்பிச்சதை, இப்படி பொருளாதார ஊற்றா மாற்றியதில் என் கணவர் மோகனசுந்தரத்தின் ஒத்துழைப்பு அதிகம். சாதிக்க கல்வி ஒரு தடை இல்லை என்பதற்கு நான் ஓர் உதாரணம்னு நினைக்கும்போது, ரொம்ப பெருமையா இருக்கு!’’ என்று கம்பீரமாகச் சொல்லும் நிர்மலாதேவியின் வீட்டு பூஜை அறையை அவர் வரைந்த ஓவியங்கள் அலங்கரிக்க, ஹைலைட்டாக, ஹாலில் மாட்டப்பட்டுள்ளது பிரமாண்ட மான திருப்பதி வெங்கடாசலபதி பெயின்ட்டிங். அதன் மதிப்பு, நான்கரை லட்சமாம்!

‘‘இந்த ஓவியத்தை வரைய எனக்கு ஒண்ணரை வருஷம் ஆச்சு. இதோட சிறப்பம்சம்... ஓவியத்தில் உள்ள நகைகளில் ஒரிஜினல் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருக்கு. இதுபோல நான்கு ஓவியங்கள் உள்நாட்டினருக்கும், வெளிநாட்டினருக்கும் வரைஞ்சு கொடுத்திருக்கேன்!’’ என்று அதிசயக்க வைத்த நிர்மலாதேவி, ஓவியம் வரைவது, விற்பனை செய்வதுடன் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறார். வீட்டின் உள் அலங்காரத்துக்கான அனைத்து வால் டெகரேட்டர்கள் மற்றும் பூஜா செட் ஆகியவற்றையும் விற்பனை செய்து வருகிறார்.

‘‘பெண்கள் முழு ஈடுபாட்டோட இந்த ஓவியத் தொழில் செய்தா, மாதம் பத்தாயிரம் ரூபாயில் இருந்து நிச்சயம் சம்பாதிக்க முடியும். அதோட, கிட்டத்தட்ட தியானம் செய்றதுக்கு ஈடான கவனம் ஓவியம் தீட்ட தேவைப்படும் என்பதால, அது கவலைகளை, பிரச்னைகளை மறந்து கலையில் மூழ்க வைக்கும். நாம் வரைந்து முடிச்ச ஓவியத்தை இறுதியா பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷத்துக்கு ஈடுஇணை கிடையாது!’’

- லயித்துச் சொல்கிறார் நிர்மலாதேவி!

கு.ஆனந்தராஜ்   படங்கள்: அ.நவின்ராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick