ச்சீ... பிணத்தைக் கூடவா?

டும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை, தடதடக்கும் ரயிலில் இருந்து தூக்கிவீசி பாலியல் வன்கொடுமை, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை... இவற்றுக்கெல்லாம் உச்சமாக, பிணமான பின்னும் பெண் உடல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது. அந்த அருவருப்பான செயலைப் பற்றி சொல்கிறது, ‘பர்ன் மை பாடி' (BURN MY BODY) என்னும் மலையாளக் குறும்படம்.

குறும்பட நாயகி, ஒரு மருத்துவ மனையில் செவிலியர். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் அவர், அழைப்பிதழை சக பணியாளர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது, பாலியல் துன்புறுத்தலால் தற்கொலைக்கு முயன்ற நடிகை ஒருவர், அவசரமாக அந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, காப்பாற்ற வழியில்லாமல் இறக்கிறார். அவர் உடல் பிணவறைக்கு அனுப்பப் படுகிறது.

நாயகியான செவிலியர், தான் இரவுப் பணியில் இருக்கும்போது, பிணவறை ஊழியருக்கு அழைப்பிதழ் தரச் சொல்கிறார். அப்போது அவர் காணும் காட்சி, கொடூரத்தின் உச்சம்! மூச்சு முட்டக் குடித்த பிணவறை ஊழியர், நடிகையின் உடலை வெளியே எடுத்து இழுத்து, பிணத்தை வன்புணர்வு செய்கிறார். உயிர் பிரிந்தாலும், ஒரு பெண் உடலுக்கு இங்கு பாதுகாப்பில்லை; பிணமானாலும் பெண் உடல் பாலியல் பொருள்தான் எனும் அளவுக்கு சாக்கடையாகிக் கிடக்கும் அந்த ஆண் மனசை அதிர உணர வைக்கிறது இந்தக் குறும்படம். ‘அடச்சீ... ஆம்பள மிருகமே...’ என்று அருவருப்பு தருகிறது. பிணத்துக்கே இந்த நிலை என்றால், பெண்களின் பாதுகாப்பை நினைத்து பதைபதைக்க வைக்கிறது.

ஆங்கில சப்டைட்டிலுடன் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் குறும்படம் வெளியான ஒரு வாரத்துக்குள் 2 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இதன் இயக்குநர், ஆர்யன் கிருஷ்ணமேனன். ‘‘மலையாளத்துல ‘பிரணயம்’னு ஒரு படத்துல நடிச்சேன். அப்புறம் துபாய்ல ரேடியோ ஜாக்கியா வேலை பார்த்தேன். என்னோட குருநாதர் மம்முட்டி சாரோட விருப்பத்துக்காக நான் மறுபடியும் கேரளா வந்து இயக்குனதுதான், என்னோட இந்த முதல் குறும்படம்.

அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்துல பிணவறையில் 100 பிணங்களை ஒருத்தர் வன்புணர்வு செய்தார் என்ற செய்தியும், கேரளா உள்ளிட்ட இன்னும் சில இடங்களில் நிகழ்ந்த இது மாதிரியான சம்பவங்களும் எனக்குத் தந்த ரௌத்திரத்தின் வடிகாலாத்தான், இந்தக் குறும்படத்தை எடுத்தேன். தனிமனித ஒழுக்கம் வந்தாதான் இந்த அசிங்கங்கள் எல்லாம் அழிக்கப்படும்!’’

நீங்களும் இந்தக் குறும்படத்தைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=f7s7DrcdhB0

பொன்.விமலா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick