பிரியாணித் திருவிழா!

துரை மாவட்டம் திருமங்கலம் அருகே புகழ்பெற்ற வடக்கம்பட்டி முனியாண்டி சாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரியாணித் திருவிழா, வெகு பிரபலம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘மதுரை முனியாண்டி விலாஸ்’ ஹோட்டல்களை நடத்தி வருகிறார்கள்.

தற்போது எவ்வளவோ நவீன ஹோட்டல்கள் வந்துவிட்டாலும், சுவையான அசைவ அயிட்டங்களை மக்களுக்கு ஆரம்பத்தில் வழங்கியவர்கள் இவர்கள்தான். வேறு ஊர்க்காரர்களும் லாபத்துக்காக தங்கள் சாமியின் பெயரைப் பயன்படுத்தி தொழில் நடத்தினாலும், ‘முனியாண்டி விலாஸ்’ முனியாண்டி சாமியின் பூர்வீகக் குடிகள் இவர்களே! இரண்டு சமுதாயத்தினர் வாழும் இவ்வூரில் வருடந்தோறும் இரண்டு தரப்பினரும் பிரியாணித் திருவிழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.

நாடெங்கும் உள்ள ‘முனியாண்டி விலாஸ்’களில், தினமும் தங்கள் உணவகத்தின் முதல் வியாபாரக் காசை அப்படியே முனியாண்டிக்காக எடுத்து வைத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு வருடத்துக்கு சேரும் தொகையை, தங்கள் பங்காக பிரியாணித் திருவிழாவுக்கு கொடுத்துவிடுகிறார்கள். இதை வசூல் செய்யவே வசூல் வண்டி ஒன்று ஆண்டுதோறும் வடக்கம்பட்டியிலிருந்து கிளம்பி இந்தியா முழுக்கச் சுற்றி வருகிறது.

பிரியாணித் திருவிழா நடைபெறும் நாளில் பல்வேறு ஊர்களில் இருந்தும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்துபவர்கள் குடும்பத்துடன் இங்கு வந்துவிடுகிறார்கள். அன்று மாலை
யில் பொதுமக்கள் திரண்டு பூ, பழம், தேங்காய், பரிவட்டம் அடங்கிய அபிஷேக  தட்டுகளை ஏந்தி, நிலைமாலையை எடுத்துக்கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலம் செல்லும்போது, அப்படியே சாமிக்கு பலியிட ஆடுகள் மற்றும் சேவல்களையும் அழைத்து வருகிறார்கள்.

நள்ளிரவில் சாமிக்கு முதல் கிடா பலியிடப்படும். அடுத்து காணிக்கையாக வந்து குவிந்திருக்கும் நூற்றுக்கணக்கான ஆடுகளும், சேவல்களும் அறுத்து சுத்தம் செய்யப்பட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டப்படும். ஊரே அமர்ந்து பிரியாணிக்கான மசாலாக்களை உரித்தும், அரைத்தும் தயார் செய்கிறார்கள். வரிசையாக பிரியாணி தேக்ஸாக்கள் விறகு அடுப்பில் அடுக்கி
வைத்திருக்க, எங்கு பார்த்தாலும் இஞ்சி - பூண்டு வாசனை. சட்டி சட்டியாக தம் போடப்பட்ட பிரியாணி தயாராக, பெரிய கூடமொன்றில் வைக்கிறார்கள். முதல் படையல் சாமிக்கு.

அனைத்துச் சட்டிகளும் தயாராக, சரியாக விடிந்துவிடும். அடுத்து, ஊர் இளைஞர்கள், வந்திருக்கும் அனைவருக்கும் பாத்திரங்களில் பிரியாணியை போதும் போதுமென்று சொல்லு
மளவுக்கு அள்ளி வழங்குவார்கள். அன்றைய தினம் கள்ளிக்குடி வட்டாரம் முழுக்க அனைவர் வீடுகளிலும் பிரியாணிதான். தமிழகத்தில் பிரியாணியே பிரசாதமாக வழங்கப்படும் ஒரே கோயில், வடக்கம்பட்டி முனியாண்டி கோயில்தான்!

செ.சல்மான்  படங்கள்: பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick