வாழைப்பழத் திருவிழா!

பொதுவாக, திருவிழா நடத்துவது குறித்த முடிவை ஊர்க்காரர்கள்தான் எடுப்பார்கள். தேதி, நாள், நட்சத்திரம் பார்ப் பார்கள்; கூடிப்பேசி திருவிழாவுக்கான ஏற்பாடு களை செய்ய ஆரம்பிப்பார்கள். ஆனால், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அய்யனார் கோயிலில் திருவிழா நடத்த வேண்டுமென்றால், அதை அந்த ஊர்க்காரர்கள் யாரும் முடிவு செய்துவிட முடியாது. கோயில் பல்லிதான் உத்தரவு கொடுக்க வேண்டும்!

வாடிப்பட்டிக்கு சற்று தொலைவில் இருக் கும் நீரேத்தான் - மேட்டு நீரேத்தான் பகுதி வயக் காட்டுக்கு நடுவே அமைந்திருக்கும் அய்யனார் கோயில் வளாகத்தில், அந்த வெள்ளிக்கிழமை மாலை ஊர் மக்கள் எல்லோரும் கையெடுத்து கும்பிட்டவாறு கூடி நின்றார்கள். பெண்கள், சிறுவர்களிடம்கூட எந்தச் சத்தமும் இல்லை. அப்படியொரு அமைதி! திடீரென்று பல்லி இடும் சத்தம் கேட்கிறது. உடனே ஊர் மக்கள் கைதட்டுகிறார்கள். நம்மால் அந்தப் பல்லியைப் பார்க்க முடியவில்லை. அடுத்து அய்யனாருக்கு காவலாக வெளியே இருக்கும் சோனை சாமிக்கு முன் கையெடுத்து கும்பிட்டவாறு காத்திருக்கிறார்கள். அங்கும் அரை மணி நேரம் கழித்து பல்லி சத்தம் இடுகிறது... கைதட்டல்! சத்தத்தைக் கேட்ட நம்மால் பல்லியைப் பார்க்க முடியவில்லை. ‘‘திருவிழாவுக்கு சாமி உத்தரவு தந்துருச்சு!’’ என்று எல்லோரும் மகிழ்ச்சியாக அய்யனாரை விழுந்து வணங்கிவிட்டுக் கிளம்பினார்கள்.

அடுத்த வாரமே (புரட்டாசி இரண்டாவது வெள்ளி) திருவிழா களைகட்ட, பாட்டுக்கச் சேரி, அன்னதானம் என்று பட்டையைக் கிளப்பினார்கள். இதில் ஹைலைட், திருவிழா அன்று சாமி ஊர்வலத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வாழைப்பழங்களை சீப்பு சீப்பாக எடுத்து வந்து கூட்டத்தினர் மீது வீசுகிறார்கள். அனைவரின் உடலும் பஞ்சாமிர்தத்தில் முக்கி எடுத்தது போலிருக்கிறது. ஊர்வலத்தில் போகிற சோர்வு தெரியாமலிருக்க பலர் அந்தப் பழங்களை வாய்க்குள்ளும் கொஞ்சம் செலுத்திக்கொள்கிறார்கள். பக்தகோடிப் பெருமக்கள் வாழைப்பழத் தோல் வழுக்கி செய்யும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகள், இந்தத் திருவிழாவில் சகஜம்!

செ.சல்மான்  படம்: பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick