Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கைநிறைய சம்பாதிக்கலாம்... சுற்றுச்சூழலுக்கும் கைகொடுக்கலாம்!

‘‘நம்பிக்கையோட நான் ஆரம்பிச்ச தொழில், இந்த ஜூட் பேக். இப்போ ஈரோட்டைச் சுற்றியுள்ள கல்லூரிப் பெண்கள், அலுவலகம் செல்லும் பெண்கள் மற்றும் ஆண்கள், ஜூட் பேக்னாலே தேடி வருவது என்னோட ‘அமிர்தா’ ஷோரூமைதான்!’’

- வெற்றித் தெம்பில் பேசுகிறார், ஈரோட்டைச் சேர்ந்த அமிர்த வைஷ்ணவி.

‘‘சென்னை, எத்திராஜ் கல்லூரியில எகனாமிக்ஸ் படிச்சேன். அப்போ இருந்தே ஜூட் பேக்ஸ்னா எனக்குப் பெரிய பிரியம். தேடித் தேடி வாங்கறதோட, மற்றவர்களுக்கும் வாங்கிக் கொடுப்பேன். திருமணமாகி ஈரோட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், ஏதாவது பிசினஸ் செய்ய ஆசைப்பட்டேன். எனக்கு என்ன தெரியும்னு, எதுல ஆர்வம்னு யோசிச்ச துல, ஜூட் பேக் க்ளிக் ஆச்சு.

‘உனக்கு ஜூட் பேக் பிடிக்கும்ங்கிறதுக்காக அந்தத் தொழிலைச் செய்ய, இது ஒண்ணும் விளையாட்டில்ல’னு வீட்டில் எச்சரிச்சாங்க. நிறைய பயிற்சி வகுப்புகளுக்குப் போய் அந்தத் தொழில் பற்றியும், பல பொருட்காட்சிகளுக்குப் போய் எந்தெந்த வயதினர் எந்தெந்த மாதிரியான பைகளை விரும்புறாங்க என்ற விற்பனை விவரங்களையும் தெரிஞ்சுக்கிட்டேன். மேலதிக தகவல்கள் தேடினப்போ, ஜூட்டை பொறுத்தவரை சீனாவுக்கு அடுத்தபடியா இந்தியாதான் நிறைய பொருட்கள் தயார் செய்யுது; குறிப்பா, மேற்கு வங்க மாநிலம்தான் சணல் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கு என்கிற விவரங்கள் கிடைச்சது. இந்தத் தொழில்ல இந்தியாவோட முதன்மை நிறுவனமான ‘ஏஞ்சல்ஸ்’ நிறுவனத்தின் தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டா என்னை நிறுவிக்கிட்டேன்!’’

- செறிவான தேடலுடனும், தெளிவான திட்டமிடலுடனும் களத்தில் இறங்கியிருக்கிறார் அமிர்த வைஷ்ணவி.

‘‘விதம்விதமான, ரகம் ரகமான சணல் பைகளை ‘ஏஞ்சல்ஸ்’ நிறுவனத்தில் இருந்து ஹோல்சேலா வாங்கி, என் குடோன்ல ஸ்டாக் வெச்சிருப்பேன். நம்ம மாநிலம் மற்றும் பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த நிறைய சில்லறை வியாபாரிகளும், ஏற்றுமதியாளர்களும் எங்கிட்ட அந்த ஜூட் பேக்குகளை வாங்கிக்குவாங்க. தவிர, குடோனுக்குப் பக்கத்துலயே நான் வெச்சிருக்கிற ‘அமிர்தா’ ஷோரூமில், கல்லூரிப் பெண்கள் விரும்பும் விதத்தில் டிசைன்கள் மற்றும் வேலைப்பாடுகளை அடிஷனலா செய்து, விற்பனை செய்றேன். மாடர்ன் டிரெஸ்ஸுக்குப் பொருந்துற மாதிரி ஃபேன்ஸி டிசைன்களில் இதைக் கொடுக்கிறதோட, அலுவலகம் செல்லும் பெண்கள் விரும்பும் வகையிலான பைகளும் இங்கே கிடைக்கும். அப்படி எனக்குக் கிடைச்ச வாடிக்கையாளர்களே தங்களோட தோழிகளுக்கும் சொல்லி அவங்களையும் இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க.

இந்த ஜூட் பைகளில் பியூர் ஜூட், ஜூட்டுடன் காட்டன் சேர்ந்த ஜுகோ (juco), பியூர் காட்டன்னு மூணு ரகம் இருக்கு. ஹேண்ட்பேக்குகள் தவிர லஞ்ச் பேக், வாட்டர் பேக், டூர் பேக், லேப்டாப் பேக்னு நிறைய வகைகள் கிடைக்குது. ஆபீஸ் போற ஆண்கள் நிறைய பேர், லேப்டாப் பேக்கை விரும்பி வாங்குறாங்க. இப்போ நிறைய கல்யாண வீடுகளில் தாம்பூல பைக்கு ஜூட் பையைத் தேர்ந்தெடுக்குறாங்க. ஒரு ஜூட் பையோட விலை 50 ரூபாயில் இருந்து ஆரம்பிச்சு, 600 ரூபாய் வரை இருக்கும்’’ என்ற அமிர்த வைஷ்ணவி, ஆரம்பித்த 4 வருடத்தில், இந்தத் தொழிலில் மாதம் 50 ஆயிரத்துக்குமேல் சம்பாதிக்கிறார். இதை ஆன்லைன் பிசினஸாகவும் செய்து வருவதுடன், சணல் பைகள் பற்றிய விழிப்பு உணர்வுக் கருத்தரங்குகளிலும் பங்கேற்று வருகிறார்.

‘‘ஜூட் பைகள், சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காதது. இது பழசாயிட்டா, சின்னச் சின்னத் துண்டுகளா வெட்டி செடிக்கு உரமாப் போடலாம். அதேபோல, பொதுவா நர்சரிகளில் பிளாஸ்டிக் பையில வெச்சுதான் செடிகளைக் கொடுப்பாங்க. அதையே ஜூட் பைகளில் வைத்து, செடியை மண்ணைத் தோண்டி வெச்சுட்டா, அந்த சணலே உரமாகி செடி நல்லா வளரும். அதனால, ஜூட் பைகள் வாங்குங்க, சுற்றுச்சூழலுக்கு கைகொடுங்க!’’

- தொழிலுடன் அக்கறையும் சேர்த்துப் பயணிக்கிறார், அமிர்த வைஷ்ணவி!

கு.ஆனந்தராஜ் படங்கள்: அ.நவின்ராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஒரு ரூபாய் டீச்சர்!
புராஜெக்ட் கண்டுபிடிப்புகள்... புத்துணர்வு மாணவிகள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close