லிப் பாம் ஓ.கே... லிப்ஸ்டிக் 'நோ'!

``பள்ளி மாணவிகள் முதல் ஆன்ட்டிகள் வரை அனைவருக்குமான மேக்கப் சாதனம் என்றாகிவிட்டது லிப்ஸ்டிக்! ஆனால், அதில் சேர்க்கப்பட்டிருக்கும் வேதியியல் பொருட்களையும், அதைப் பயன் படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும் அறிந்தால், பலரும் லிப்ஸ்டிக்குக்கு ‘பை’ சொல்லிவிடுவார்கள்!’’ என்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த சரும சிறப்பு மருத்துவர் உதயகுமார்.

‘‘பொதுவாக, உதட்டுச் சாயத்தில் வேக்ஸ், வேக்ஸி பேஸ்ட், ஆயில், டெக்ஸ்சரிங் ஏஜென்ட், கலரிங் ஏஜென்ட், பெர்ஃப்யூம், சன்ஸ்கிரீன் மற்றும் சில பொருட்கள் சேர்க்கப் படுகின்றன.

 வேக்ஸ், லிப்ஸ்டிக்குக்கு வடிவத்தையும், க்ரீமி தன்மையையும் கொடுக்கிறது. இந்த வேக்ஸில், விலங்கில் இருந்து பெறப்படும் பீஸ்வேக்ஸும், தாவரத்தில் இருந்து பெறப்படும் கார்னௌபா வேக்ஸும் அடக்கம். உதட்டில் ஒட்டும் தன்மைக்காகச் சேர்க்கப்படுவது, வேக்ஸி பேஸ்ட். ஆயில், நிறம் கொடுக்கும் கலரிங் ஏஜென்ட்டைக் கரைக்கப் பயன்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் இதற்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், அதில் ஏற்படும் ஒருவித நாற்றம் மற்றும் கசப்புத்தன்மை காரணமாக இப்போது ஃபேட்டி ஆசிட் ஈஸ்டரை பயன்படுத்துகிறார்கள். சிலிக்கா பீட்ஸ், டைட்டானியம் டை ஆக்ஸைடு, பிஸ்மத் ஆக்ஸி குளோரைடு அடங்கிய டெக்சரிங் ஏஜென்ட், உதடுகளுக்கு ஈரத்தன்மையும், பளபளப்பும் அளிக்கிறது. பெர்ஃப்யூம், மணத்தையும், சன்ஸ்கிரீன் வெயிலில் இருந்து பாதுகாப்பையும் தருகிறது.

தொடர்ந்து பயன்படுத்துவதால் இந்த ரசாயனங்கள் உதட்டில் கொப்புளங்கள் மற்றும் வறட்சியை ஏற்படுத்தும். உதடு வெடிப்பு, காயம், தோல் உரிதல் போன்றவை ஏற்படுவதோடு வாயைச் சுற்றிலும் கருமை நிறம் படர வாய்ப்பு உள்ளது. உதட்டுச் சாயத்தில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் உங்கள் தோலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. கலரிங் பிக்மென்ட்டை குறிப்பிட்ட அளவுதான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதிகம் பயன்படுத்தினால், அது கேன்சரை ஏற்படுத்தக்கூடியது.

சில பெண்களுக்கு லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் அலர்ஜி, சொரியாசிஸ், வீக்கம் போன்றவை ஏற்படும்பட்சத்தில், அதைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, அனைவருமே லிப் பாம் பயன்படுத்தலாம். லிப் பாம்மில் மாய்ஸ்ச்சரைசர் மற்றும் சன் ஸ்க்ரீன் லோஷன்தான் இருக்கும். லிப்ஸ்டிக்கில் கலக்கப்படும் ரசாயனங்கள் எதுவும் சேர்க்கப்படாது. அதனால் லிப்ஸ்டிக்கைவிட லிப் பாம் சிறந்தது. சிலருக்கு உதட்டில் வெயில் பட்டால் ஒத்துக்கொள்ளாது. அவர்களுக்கு லிப் பாம்மில் இருக்கும் மாய்ஸ்ச்சரைசர், உதட்டை மென்மையாக இருக்கச் செய்யும். அதேபோல் லிப் பாம்மில் இருக்கும் சன் ஸ்கிரீன் உதட்டில் வெயிலின் தாக்கத்தை தடுக்க உதவும்!’’

- அழகாக தெளிவுபடுத்தினார் டாக்டர் உதயகுமார்.

சு.கற்பகம்   படம்: குரூஸ்தனம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick