வியர்வை துர்நாற்றத்திலிருந்து விடுதலை

கொளுத்தும் வெயிலுக்கு, கொட்டும் வியர்வையை மட்டுமல்ல, வியர்வை துர்நாற்றத்தையும் சமாளிக்கவேண்டி உள்ளது. ‘‘அதற்காக வாசனை பவுடர், சென்ட், பெர்ஃப்யூம், டியோடரன்ட் என்று கண்டபடி வாங்கிப் பயன்படுத்தக் கூடாது!’’ என்று எச்சரிக்கும் சென்னை, கேர் அண்ட் க்யூர் அரோமா கிளினிக்கின் நிர்வாகி கீதா அஷோக், அவற்றால் ஏற்படும் விளைவுகளையும், வியர்வை துர்நாற்றத்தைச் சமாளிக்கும் தீங்கில்லா வழிகளையும் சொல்கிறார்.

வியர்வைக்கு பவுடர்... நோ!

வியர்வையை உறிஞ்சிக் கொள்ள அக்குள் பகுதியில் பவுடர் போடுவது தவறான பழக்கம். செயற்கை நறுமணங் கள் கலந்திருக்கும் முக பவுடர், சென்சிட்டிவான அக்குள் பகுதிக்குப் பொருந்தாது. மேலும் சருமத் துவாரங்களை அடைத்துக்கொள்வதால்... அக்கி, கட்டி, கொப்புளம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

வேண்டாம் இறுக்கமான உடைகள்!

கோடையில் இறுக்கமான உடை அணிந்தால், வியர்வையின் நிரந்தர ஈரப்பதம் அக்குள் பகுதியில், எரிச்சல், அரிப்பு, தொற்று என்று பிரச்னைகள் தரும். காற்றோட்டமான பருத்தி உடைகளைத் தளர்வாக அணியலாம். சிலருக்கு வியர்வை அதிகம் வெளியேறும்போது அப்பகுதியில் அரிப்பு தோன்றும். மருந்துக்கடைகளில் கிடைக்கக் கூடிய ஆன்டி பெர்ஸ்பிரன்ட் பவுடரை (anti perspirant powder) அரிக்கும் பகுதியில் போடலாம்.

ரோல் ஆன் டியோடரன்ட்... சரியா, தவறா?

டியோடரன்ட்கள் க்ரீம் மற்றும் ரோல் ஆன் என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. அளவுக்கு அதிகமான வியர்வை பிரச்னை உள்ளவர்கள் க்ரீம் வடிவ டியோடரன்ட்டும், மற்றவர்கள் லிக்விட் ரோல் ஆன் டியோடரன்ட்டும் பயன்படுத்தலாம். அது தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.

இன்ஸ்டன்ட் பெர்ஃப்யூம்!

தினமும் காலை குளித்து முடித்ததும், நீங்கள் உபயோகிக்கும் தரமான பாடி லோஷனில் சிறிதளவு எடுத்து அதில் லெமன் கிராஸ் ஆயில், கெரேனியம் ஆயில், லாவண்டர் ஆயில் தலா 5 சொட்டுகள் கலந்து உடலில் தடவிக்கொண்டால், நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷாகவும், வாசனையாகவும் வலம் வரலாம்!

இந்துலேகா.சி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick