Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லேடி சாப்ளின்...

`‘தன் சோகம் புதைத்து... நம்மைச் சிரிக்க வைத்தார்!’’

‘ஆச்சி’ மனோரமா... ஆண்கள் சூழ் உலகான திரைத்துறையில் ஐந்து தலைமுறைகளாக நின்று வென்றாடிய ஆளுமை. அவரின் இழப்பில் மொத்த தமிழகமும் மனம் கசிந்தது. மனோரமா பற்றி அறியாத பல தகவல்களை நம்முடன் பகிர்கிறார், கவிஞர் கண்ணதாசன் கம்பெனியில் புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்தவரும், மனோரமா தன் உடன்பிறவா அண்ணனாகக் கொண்டிருந்தவருமான வீரய்யா...

 1957-ம் வருஷம் திருச்சியில் மனோரமாவின் நாடகத்தில் அவருடைய நடிப்பு, வசன உச்சரிப்பை எல்லாம் பார்த்து, ‘மெட்ராஸ் வந்தா என்னைப் பாரும்மா... சினிமாவில் வாய்ப்பு தர்றேன்’ என்றார் கவிஞர் கண்ணதாசன். இடையில் மனோரமாவை நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், தன் நாடகக் கம்பெனியில் நடிப்பதற்காக சென்னை அழைத்து வர, கண்ணதாசன் தன் தயாரிப்பான ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் மனோரமாவுக்கு வாய்ப்பளித்தார்.

 ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் கதாநாயகனாக டி.ஆர்.மகாலிங்கமும், கதாநாயகிகளாக பண்டரி பாய், மைனாவதியும் நடிக்க, நகைச்சுவை வேடத்துக்கு காக்கா ராதாகிருஷ்ணனுக்கு ஜோடியாக மனோரமா. ‘எனக்கு கதாநாயகி வேஷம் தான் வேணும்’ என்று சொன்ன மனோரமாவை, ‘உனக்கு நகைச்சுவை வேஷம் சரியா இருக்கும்’ என்று சம்மதிக்க வைத்தார் கண்ணதாசன். மனோரமாவின் முதல் ஸீனில், நடிப்பு வந்தால் வசனம் வரவில்லை, வசனம் வந்தால் நடிப்பு வரவில்லை. 10 டேக்குக்கு மேல் போனதும், டைரக்டர் ஜி.ஆர்.நாதன், `மனோரமா வேண்டாம்' என்றார் கவிஞரிடம்! கவிஞரின் ஏற்பாட்டில், நானும் ஓர் உதவி இயக்குநரும் மனோரமா வீட்டுக்கே சென்று பயிற்சி கொடுத்தோம். மறுநாள் ஒரே டேக்கில் அசத்தி கைதட்டல் வாங்கினார் மனோரமா. இதுவரை யாருக்கும் தெரி யாத விஷயம் இது.

 ‘அண்ணே, ஒருவேளை நான் கதாநாயகியா நடிச்சிருந்தா, 10 வருஷத்துல காணாம போயிருப்பேன். நான் நடிகையானதுக்கும் நீங்கதான் காரணம், அதையும் மறக்க மாட்டேண்ணே...’ என்று 1,500 படங்கள் நடித்த பின்னரும் நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பார். என்னையும் என் மனைவியையும், ‘அண்ணே, அண்ணி’ என்று வாய்நிறையக் கூப்பிடுவார். எனக்கே தெரியாமல் என் மனைவி பெயரில் இப்போது நாங்கள் வசிக்கும் ஃபிளாட்டை வாங்கி வைத்திருந்து, எங்களுக்கு வீடு தேவைப்பட்ட நேரத்தில் கொடுத்து உதவினார்.

 பக்தி அதிகம். அறுபடை வீடுகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் காலையில் குளித்ததும் சாமி கும்பிட்டுவிட்டு, அம்மா காலைத் தொட்டு வணங்கி விட்டுதான் ஷூட்டிங் கிளம்புவார். கால்ஷீட்டே கொடுக்க முடியாத அளவுக்கு பெரிய நடிகையாக வளர்ந்த பின்னும், மாலையில் நாடகத்தில் நடிப்பார். அதைப் பெருமையாக நினைப்பார். ஏழ்மை நிலையில் இருக்கும் நாடகக் கலைஞர்களின் பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்கு, தன் இறுதி நாள் வரை பணம் கொடுத்து உதவி வந்தார். கோபிசாந்தா என்ற தன் பெயரை, திருச்சி நாடகக் கம்பெனியில் ஆர்மோனியக் கலைஞராக இருந்த தியாகராஜர், ‘மனோரமா’ என்று மாற்றிய பின்தான் தனக்குப் பெயரும், புகழும் கிடைத்ததாகக் கூறுவார்.

 மன்னார்குடி நாடகக் கம்பெனியில் உடன் நடித்த ஆர்ட்டிஸ்டான ராமநாதனைக் காதலித்து, தன் அம்மாவையும் மீறி திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். மகன் பூபதி பிறந்த சில மாதங்களிலேயே மனோரமாவை விட்டுப் பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் ராமநாதன். அன்பு, கடமை, பொறுப்பு, பாதுகாப்பு என்று எந்த வகையிலும் தனக்குக் கணவராக இல் லாத போதும்... பல ஆண்டுகளுக்குப் பின் அவர் இறந்த செய்தி வந்துசேர்ந்தபோது, ராயப்பேட்டை, அரசு மருத்துவமனைக்கு என்னை அனுப்பி அவர் குடும்பத் தினரிடம் 25,000 கொடுக்கச் சொன்னார் மனோரமா. தன் அம்மா எவ்வளவு தடுத்தும் மனது கேட்காமல், ராமநாதனின் இறுதி அஞ்சலிக்குச் சென்றார்.

 நடிகர் சிவாஜி கணேசனும், மனோரமாவும் அண்ணன், தங்கையாகவே வாழ்ந்தது அனைவரும் அறிந்தது. தன் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்து, ஷூட்டிங்கில் சிவாஜிக்கு கைப்பட பரிமாறுவார். சிவாஜி மறைந்த பின்னரும், அவர் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே இருந்தார். அதுமட்டுமல்ல, மொத்த திரையுலகத்துக்கும் பிரியமானவர் ஆச்சி.

 தமிழ், தெலுங்கு, கன்ன டம், மலையாளம், இந்தி என்று பல மொழிப் படங்களில் நடித்தவர், ‘சின்ன கவுண்டர்’, ‘சின்னத்தம்பி’ படங்களைத்தான் நடித்ததில் தனக்குப் பிடித்த படங்களாகச் சொல்வார். 
 
 பல ஆண்டுகளாக மனோரமாவுக்கு பத்ம விருதுகள் தகையாத நிலையில், 2002-ம் ஆண்டு விருதுப் பட்டியலில் மனோரமாவின் பெயர் சேர்க்கப்பட்டு, பின்னர் இந்தியில் இருக் கும் மனோரமா என்ற நடிகை தவறுதலாக கணக் கில் கொள்ளப்பட்டு, நம் மனோரமாவை நிராகரித்து விட்டனர். அந்த சமயம் பத்ம விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்த நடிகர் சோ, மனோரமாவின் புகழை சக குழுவினருக்கு எடுத்துக்கூறி, கடுமையான விவாதங்களை நடத்தி நம் மனோரமாவுக்கு பத்ம விருது கிடைக்கச் செய்தார்.

 அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, என்.டி.ராம ராவ், ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்தது மட்டுமல்ல, அனை வருடனும் நல்ல நட்பைக் கொண்டிருந்தார் மனோரமா. இந்திரா காந்தியை மனோரமாவுக்கு மிகவும் பிடிக்கும். அவர் இறந்த சமயத்தில், இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்தார். 
 
 கடந்த சில மாதங் களாக தொடர்ந்து பல மூத்த கலைஞர்களும் மறைந்துகொண்டே இருக்க, வருத்தத்தில் இருந்த ஆச்சி, கே.பாலசந்தர் இறந்தபோது, ‘நம்ம ஆளுங்கள்ல கொஞ்ச பேர் மட்டும்தாண்ணே இருக்காங்க. எனக்கும் உடம்பு ரொம்ப முடியல. அடுத்து நானாகூட இருக்கலாம்’ என்று வாய்விட்டுச் சொல்லிக் கலங்கினார்.  
 
 ஆரம்பத்தில் வறுமை நிலை, சென்னை வந்த பின் அளவில்லாத புகழ், சொத்து சேர்த்தாலும் தனிப் பட்ட வாழ்வில் துயரம், இறுதிநாட்களில் மூட்டுப் பிரச்னையால் ரணம் என... மனோரமா சந்தோஷமாக இருப்பதற்கான எந்தப் பெரிய வாய்ப்பையும் இந்த வாழ்க்கை அவருக்குத் தரவில்லை. இருந்தாலும், நம் பாட்டனில் இருந்து, நம் பிள்ளைகள் வரை சிரிக்க வைத்த, தன் அழியாத காவியங்களால் இனியும் சிரிக்க வைக்கும் லேடி சாப்ளினுக்கு... அஞ்சலி! 

 

கு.ஆனந்தராஜ் படங்கள்:ரா.வருண் பிரசாத்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கட்டடக்கலை கில்லி!
டிடெக்டிவ் லேடி!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close