டிடெக்டிவ் லேடி!

துப்பறியும் துறை 18 சாதனைப் பெண்கள்

பூஜா... துப்பறியும் துறையில் வேலை பார்க்கும் அரிதான பெண்களில் ஒருவர். இந்தத் துறையில் ஏழு வருடங்கள் அனுபவம் கொண்ட இவர்,  ‘சன் டிடெக்டிவ் ஏஜன்ஸி’யின் லீடிங் டிடெக்டிவ்!

‘‘நியூஸ்பேப்பர்ல ‘லேடி டிடெக்டிவ் தேவை' விளம்பரம் பார்த்தேன். அந்தத் துறை பத்தி எனக்கு எதுவும் தெரியாது. `சரி பார்ப்போமே’னு நானும் என் தோழியும் இன்டர்வியூவுக்குப் போனோம். ஒரு அறையில் காத்திருக்கச் சொன்னாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வந்த பாஸ்,

‘இந்த ரூம்ல நீங்க என்னவெல்லாம் கவனிச்சீங்க... சொல்லுங்க’னு சொன்னாரு. நான் எல்லாத்தையும் நினைவுபடுத்திச் சொல்ல, என் ஃப்ரெண்ட் எதையுமே நோட் பண்ணாம இருந்திருக்கா. என்னை செலக்ட் பண்ணினாங்க. 

மறுநாளே ஒரு போன் நம்பர் கொடுத்து, ‘இவன் எந்த மாதிரியான ஆளுனு பேசிப்பார்த்துச் சொல்லுங்க’னு சொன்னாங்க. அவன் திட்டினா என்ன பண்றது, பேச்சை வளர்த்தா என்ன பண்றதுனு எல்லாத்துக்கும் எப்படி ரியாக்ட் செய்றதுனு யோசிச்சு வெச்சிக்கிட்டு, பேங்க்ல இருந்து பேசுறதா சொல்லி அவனோட பேசினேன். அவன் ஒரு ஜொள்ளுனு ரிப்போர்ட் கொடுத்தேன். என்னை வெயிட் பண்ணச் சொன்ன பாஸ், இன்னொரு ஸ்டாஃபை அழைச்சுப் பேசினார். அப்போ என் மைண்ட்ல ஸ்பார்க் ஆகி, ‘சார், நான் போன் பண்ணினவரோட வாய்ஸ் மாதிரியே இருக்கு இவர் வாய்ஸ்’னு சொன்னேன். ‘குட்... இந்த டெஸ்ட்டையும் கிளியர் பண்ணிட்டீங்க’னு சொன்னார். பேசினவரோட கேரக்டரை இல்ல, குரலைக் கண்டுபிடிக்கிறதுதான் எனக்குத் தரப்பட்ட அசைன்மென்ட்னு புரிஞ்சது. இப்படித்தான் தினம் தினம் திகுதிகுனு இருக்கும் இந்தத் துறை.

பெர்சனல், பப்ளிக்னு நிறைய கேஸ்கள் வரும். அப்படித்தான் ஒருமுறை, ஒரு தனியார் நிறுவனத்தின் ரகசியங்கள் எல்லாம் அதில் வேலைபார்க்கும் யாரோ ஒருத்தனாலேயே வெளிநாட்டுக்கு விற்கப்படுதுனு சந்தேகப்பட்டு, அவனைக் கண்டுபிடிக்கிற அசைன்மென்ட் என் கைக்கு வந்தது. நான் அந்த கம்பெனியிலேயே வேலைக்குச் சேர்ந்து, எல்லாரோடயும் பழகினப்போ, ஒருத்தன் மட்டும் பணம் பணம்னு பேசினான். நானும் அவன் போக்கிலேயே பேசி, அவனைக் காதலிக்கிற மாதிரி நடிச்சு, அவனோட திருட்டுத்தனங்களை எல்லாம் கண்டுபிடிச்சு, ஆதாரங்களோட கம்பெனிக்குக் கொடுத்தேன். அவன்கிட்ட இருந்து நிறைய மிரட்டல்கள். அதெல்லாம் இங்க சகஜம். ஆனால், ஒரு நிறுவனத்தை, அதை நம்பி இருக்கும் குடும்பங்களை காப்பாத்தின சந்தோஷம் எனக்கு.

நான் வேலை பார்க்கும் ‘சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி’, ரொம்ப நம்பிக்கையானது. தவறான செயலுக்கு டிடெக்டிவ் வேலை செய்யமாட்டாங்க. ரொம்ப பாதுகாப்பானதும் கூட. மூணு மாசத்துக்கு முன்னாடிதான் என் காதல் திருமணம் முடிஞ்சது.

இந்தத் துறையில் பெண்களுக்கு அதிகத் தேவை இருக்கு. ஆர்வம், துணிச்சல், தெளிவு இருக்கா... வாங்க. மோசடி டிடெக்டிவ் ஏஜன்ஸிகள் பல இருக்கு என்பதால, விசாரிச்சு பணியில் சேருங்க!’’

- ராக்கிங் ஆக முடித்தார் பூஜா!

கே.அபிநயா  படங்கள்: ப.சரவணகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick