நடன தேவதை! | Eighteen Special Adventure Womens - Brirundha Master - AvalVikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/10/2015)

நடன தேவதை!

டான்ஸ் மாஸ்டர்

18 சாதனைப் பெண்கள்

பிருந்தா மாஸ்டர், பிரபல நடன இயக்குநர். தமிழ் சினிமாவில் பெண்மையின் பெருமை. கடந்த 26 வருடங்களாக நிற்காமல் ஆடும் பாதக்காரர். நடனத்துக்கான தேசிய விருது, 2 ஃபிலிம் ஃபேர் விருதுகள், தமிழ்நாடு, கேரள மாநில விருதுகள் பெற்றவர். வேகம் குறையாமல் வேலையில் இளமையாக இருப்பவர்! கலா மாஸ்டரின் தங்கை. 

‘‘எங்க வீட்ல அக்கா, தங்கைகள் ஆறு பேர். அம்மா சரோஜினிதான் எங்க எல்லாருக்கும் நம்பிக்கை ஊற்று. வீட்டில் அக்காக்கள் எல்லாம் டான்ஸ் ஆடும்போது விளையாட்டா சேர்ந்து ஆடும் எனக்கு, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவோட குரூப்ல டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைச்சப்போ வயசு 13. 

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது ரகுராம் மாஸ்டர்கிட்ட உதவி நடன இயக்குநரா சேர்ந்து, சினிமா பயணத்தை ஆரம்பிச்சேன். நான் கொரியோகிராஃபரா அறிமுகமான படம், கார்த்திக் நடிச்ச ‘நந்தவனத் தேர்’. கார்த்திக், ரம்பா நடிச்ச ‘உள்ளத்தை அள்ளித்தா’ பட ‘அழகிய லைலா’ பாட்டு, எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது. மைல் கல்லா அமைஞ்சது, மணிரத்னம் சாரோட ‘இருவர்’ படம். அந்த வெற்றிக்குப் பிறகுதான் எனக்கு குவிய ஆரம்பிச்சது வாய்ப்புகள். மஞ்சுவாரியர் நடிச்ச ‘தயா’ மலையாளப் படத்துக்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது கிடைச்சது.

சினிமா நடன இயக்குநரா மட்டு மில்லாம, ஸ்டார் நைட், விருது நிகழ்ச்சிகள்னு வெள்ளித்திரை சார்ந்த நிகழ்ச்சிகளிலும் கொரியோகிராஃப் பண்ணினேன். இந்திய அளவில் நடனத் தளத்தில் எனக்கு வெளிச்சம் தந்தது, 96 ‘மிஸ் வேர்ல்டு’. அந்த ஈவன்ட் கொரியோகிராஃபர் நான்தான். அதுக்கு அப்புறம் ஃபிலிம்ஃபேர் அவார்டு நிகழ்ச்சிகளுக்கும் கொரியோகிராஃபரா வேலை பார்த்தேன், பார்த்துட்டு இருக்கேன். இப்போ தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டுறேன். கை வலி, கால் வலி, உடம்பு வலி எல்லாம் தினமும் இருக்கும். அதையெல்லாம் பொருட்படுத்தாம நடனத்தில் கரைஞ்சிடுவேன்.

திருமணத்துக்குப் பிறகும் நான் சக்சஸ்ஃபுல் டான்ஸரா இருக்கக் காரணம், என் கணவர் சுஜு பரமேஸ்வர். பெண்களை மதிக்கத் தெரிஞ்ச ஆண்மகன். எங்களுக்கு ஆதவ், மாதவ்னு ரெண்டு பசங்க... ட்வின்ஸ். ஒரே நேரத்துல, ஒரே வயசுல ரெண்டு குழந்தைகளை வளர்க்கிறதுங்கிற பெரிய பொறுப்புக்கு நடுவுல நான் என் புரொஃபஷன்லயும் பரபரப்பா இருக்கேன்னா, அதுக்குக் காரணம் என்னோட அக்காக்கள் நிர்மலா, ஜெயந்திதான்.

என் பசங்களுக்கு ஆல்டர்நேட்டிவ் அம்மா ரோலை அன்லிமிட்டட் அன்போட பண்ற இவங்க ரெண்டு பேருக்கும் கோயில் கட்டச் சொன்னாலும் கட்டுவேன்!’’

- வெடியாகச் சிரிக்கிறார் பிருந்தா!

வே.கிருஷ்ணவேணி படங்கள்: சு.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க