ஸ்பேஸ் தமிழச்சி!

விண்வெளி ஆராய்ச்சி18 சாதனைப் பெண்கள்

ளர்மதி... அரியலூரில் பிறந்து, நம் தேசத்தின் பெருமையான இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (இஸ்ரோ) பணிபுரியும் தமிழகத்தின் பெருமை. அரசுப் பள்ளியில் படித்து வந்த அந்தக் கிராமத்துப் பெண்ணின் விஸ்வரூபம், நிரம்பக் கொடுக்கவல்லது நம்பிக்கை! 

‘‘1959-ல் பிறந்த பெண் நான். அந்தக் காலகட்டத்தில் பெண் பிள்ளை வளர்ப்பில் இருக்கும் கட்டுப்பாடுகளைச் சொல்லத் தேவையில்லை. ஆனால், கல்வி ஒன்றே வாழ்வு முழுமைக்குமான துணை என்று சொல்லிச் சொல்லியே, பெற்றோர் படிக்க வைத்தார்கள். கோவை, ஜி.சி.டி (GCT - Government College of Technology) கல்லூரியில் B.E (ECE) முடித்து, சென்னை, அண்ணா பல்கலைகழகத்தில் எம்.இ, கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் (COMMUNICATION SYSTEMS) படித்தபோது, ‘இஸ்ரோ’வுக்கு விசிட் செய்துள்ளோம். அப்போதெல்லாம், ‘விண்ணையும் மண்ணையும் இணைக்கும் இந்த சவால் களத்தில் பணியாற்றும் வாய்ப்பு நமக்குக் கிடைக்குமா?' என்று மனம் பரபரக்கும். ஆனால், படித்து முடித்தவுடனேயே இந்த வேலை கிடைத்துவிட்டது. இந்த வேலை மிகவும் சவாலாக இருந்தாலும் விருப்பத்துடன் செய்ய ஆரம்பித்தேன்.

31 வருடமாக  இஸ்ரோவில் பணிபுரிந்துவரும் நான், இப்போது புரோகிராம் டைரக்டராக உயர்ந்திருக்கிறேன். இதற்குப் பின் இருப்ப தெல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே. மறக்க முடியாத சந்தோஷம்...

2012-ம் ஆண்டு அனுப்பப்பட்ட ரேடார் இமேஜிங் சாட்டிலைட்டின் திட்ட இயக்குநராக நான் பணியாற்றியது. பல வருட இரவையும் பகலையும் நாங்கள் கொட்டிய டீம் வொர்க் புராஜெக்ட் அது. அந்த சாட்டிலைட், விண்ணில் எடுத்த முதல் படத்தை எங்களுக்கு அனுப்பிவைத்தபோது, அந்த நிமிட சந்தோஷத்தை... அளவு சொல்லி விளக்க முடியாது. மற்ற சாட்டிலைட்டுகள் பகல் நேரத்தில் மட்டும்தான் படங்களை எடுத்து அனுப்பும். ஆனால், இந்த சாட்டிலைட் பகல், இரவு மற்றும் மழைக்காலங்களிலும் பூமியை படம் எடுத்து அனுப்பவல்லது.

அந்த ஆண்டு இஸ்ரோவில் மெரிட் அவார்டு வாங்கியதிலிருந்து, சமீபத்தில் இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் ‘டாக்டர் அப்துல் கலாம் விருது’ வாங்கியது வரை, தொடர்ந்து கொண்டிருக்கிறது பயணம்.

ஸ்பேஸ் சயின்டிஸ்ட் வளர்மதி, வீட்டில் எல்லா அம்மாக்களையும் போல, பிள்ளைகள் பசியாறச் சாப்பிட பரபரக்கும் அம்மா. பையன் ஹேமந்த், பெண் தீபிகா, கணவர் வாசுதேவன்... என் அன்பான குடும்பம். விண்ணைப் பற்றி நுட்பமாக யோசிக்கத் தேவையான தெளிவான மனதை எனக்குக் கொடுப்பது, அமைதியான என் குடும்பத்தின் அன்புதான்.

பி பாசிட்டிவ்... நடைமுறை விஷயங்கள் தெரிந்தவர்களாக இருங்கள், தைரியமாக இருங்கள், கடினமாக உழையுங்கள்... உங்கள் வெற்றியை யாராலும் பறிக்க முடியாது!’’

- புன்னகையுடன் சொல்கிறார் வளர்மதி!

வே.கிருஷ்ணவேணி   படங்கள்:சு.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick