விளையாட்டுப் பெண்!

ஸ்போர்ட்ஸ்18 சாதனைப் பெண்கள்

ஜோஷ்னா சின்னப்பா... சர்வதேச ஸ்குவாஷ் அரங்கில் சாதனைகள் குவித்து வரும் தமிழ்நாட்டுப் பெண். 13 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகத் தரவரிசைப் போட்டியில் பங்குபெற்ற முதல் இந்தியர், 14 வயதிலேயே தேசிய சாம்பியன் பட்டம், 2003-ம் ஆண்டில் பிரிட்டனில் உள்ள ஷெஃபீல்டில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஸ்குவாஷ் பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியப் பெண், அடுத்த பத்தாண்டுகளில் அர்ஜுனா விருது, 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம்... இளம்பெண்ணின் சாதனைகள் இன்னும் தொடரும்!    

      

‘‘என் அப்பா அன்ஜன் சின்னப்பா, ஸ்குவாஷ் விளையாட்டு வீரர். தமிழ்நாடு சார்பாக விளையாடியிருக்கும் அவர், ஆறு வயதில் இருந்து என்னையும் அவர்கூட மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் கூட்டிட்டுப் போவார். அப்பா ஆடுவதை வேடிக்கை மட்டும் பார்க்க என்னால முடியல. நானும் விளையாட ஆரம்பிச்சேன். தினமும் அதிகாலை அஞ்சு மணிக்கு எழுந்து, நேரு ஸ்டேடியத்தில் இருக்கிற ஸ்குவாஷ் அகாடமிக்குப் பயிற்சிக்குப் போவேன். எல்லாருமே ஆண்களா இருக்க, அங்கே ஒரே கேர்ளா நாலு மணி நேரம் நான் பயிற்சி எடுக்கிறதை எல்லோரும் ஆச்சர்யத்தோட பார்ப்பாங்க. மீண்டும் மாலை நாலு மணி நேரப் பயிற்சி. 

ஒவ்வொரு நாளும், ‘ஸ்குவாஷில் உலகிலேயே நம்பர் 1 இடத்துக்கு வரணும்’னு எனக்கு நானே சொல்லிக்குவேன். வலிகள் பழகிப்போற உடம்பை வார்த்தெடுத்தேன். உணவு விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். காய்கறிகள், பருப்பு, மீன்... இப்படி இந்த விளையாட்டுக்கு எனக்குத் தேவையான ஸ்டாமினாவையும், உடலையும் கொடுக்கிற உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன். மேட்ச் இருந்தால் பெரும்பாலும் பழங்கள் மட்டும்தான். இன்னிக்கு வரைக்கும் தினமும் 5, 6 மணி நேரப் பயிற்சியை விடாமல் செய்றேன்.

என்னை நான் சோர்ந்துபோக விட மாட்டேன். எனக்கு நானே மோட்டிவேட் செஞ்சுக்குவேன். சர்வதேசப் போட்டிகளில் உலகின் தலைசிறந்த ஸ்குவாஷ் பிளேயர்கள் என் போட்டியாளர்களா நிற்கும் ஆட்டங்களில் எல்லாம், இந்த நிமிஷம் அந்த வரலாற்றை மாற்றி எழுதும் வாய்ப்பு என் கைகளுக்கு இருப்பதா நினைச்சு, ஆட்டத்தின் இறுதிவரை முழு நம்பிக்கையோட விளையாடுவேன். எத்தனையோ விருதுகள் வாங்கியிருந்தாலும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் ‘அர்ஜுனா விருது’ வாங்கினப்போ, இந்த சென்னைப் பொண்ணுக்கான அந்த தேசிய கௌரவம், ரொம்ப சந்தோஷமா, பெருமையா இருந்தது.

எந்தத் துறையா இருந்தாலும் அர்ப்பணிப்போட செயல்படுங்க. சூழ்நிலை எவ்வளவு கஷ்டமானதாவும் இருக்கலாம், ஆனா, அதுவே முடிவில்ல. அதைக் கடந்துபோகத் தெரிஞ்சா... இலக்கினை எட்டிடலாம்!’’

ந.ஆஷிகா   படங்கள்:சு.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick