கருணை மனுஷி!

மருத்துவம் 18 சாதனைப் பெண்கள்

சாய்லெட்சுமி... டாக்டர்களில் வித்தியாசமானவர்! ‘டாக்டருக்குப் படிச்சு எல்லாருக்கும் சேவை செய்யணும்’ என்று குழந்தைகள் மட்டுமே சொல்வார்கள். ஆனால், சேவையைவிட, பணத்தையே பிரதானமாகக் கொண்டு இயங்கும் மருத்துவர்கள் மிகுந்த உலகு, நாம் வாழ்வது! அபூர்வமான குறிஞ்சிப்பூக்களில் ஒரு பூவாக கைகுலுக்குகிறார், டாக்டர் சாய்லெட்சுமி... தன் ‘ஏகம் ஃபவுண்டேஷன்’ மூலம் பல குழந்தைகளை நோயின் கரங்களில் இருந்து மீட்க தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்! 

‘‘ஆந்திராதான் பூர்வீகம். குழந்தைகள்நல மருத்துவரான நான், கோவை, ஈஷா யோகா மையத்தில் பணியில் சேர்ந்தேன். தினமும் நான்கு கிராமங்களுக்குச் சென்று ஏழைகளுக்கு மருத்துவம் பார்த்த அந்நாட்கள், சேவையின் மகத்துவத்தை என் மனதில் ஆழப் பதித்தவை. பின் ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தைகள்நல மருத்துவராகப் பொறுப்பு ஏற்றபோது காச நோயால் அவதிப்பட... பணியில் இருந்து விலகினேன். 

கல்லூரி காலம் முதல் ரத்தத் தொற்று, காசநோய், மார்பகப் புற்று, தண்டுவடப் பிரச்னை என்று நான்கு நோய்களின் பிடியில் சிக்குண்டேன். பிணியின் வலி, அது தந்த மன உளைச்சல், சிகிச்சைக்கான செலவு என,  நோயாளியாக நோயை உணர்ந்த தருணமே, என் வாழ்வில் திருப்புமுனை.

ஒரு மருத்துவரான என்னையே நோய் இந்தளவுக்கு உலுக்கிப்போடும்போது... ஏழை, எளிய மக்கள் என்னாவார்கள் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அது குழந்தை நோயாளிகளை நோக்கித் திரும்பியபோது, மனம் பதைபதைத்தது. வாழ வேண்டிய அரும்புகள் பலர், மருத்துவக் கட்டணத்தால் எட்டி உதைக்கப்பட்டு மரணத்தை தழுவு வது நெஞ்சில் அறைய, அதை நோக்கி ஆக்கபூர்வமாக இயங்க முடிவெடுத்தேன். என் சகோதரி மற்றும் நண்பர்கள் உதவியுடன் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் பெற்றோர்களில், சிகிச்சை செலவுகளால் திணறுபவர்களை கண்டடைந்து உதவினோம். அந்த முயற்சியே, 2009-ல் ‘ஏகம் ஃபவுண்டேஷன்’ என்று வடிவம் பெற்றது.

ஓரிடத்தில் உள்ள குழந்தை என்னவிதமாக பாதிக்கப்பட்டிருக்கிறது; அதற்கு என்ன சிகிச்சை வேண்டும்; அதற்கு அவர்கள் எங்கு செல்லவேண்டும்; அப்படி செல்லும் இடத்தில் போதிய மருத்துவம் கிடைக்கிறதா; அப்படி கிடைக்காததற்கு என்ன காரணம் என அறிந்து... ஒரு பாலமாக இருந்து ஒவ்வொரு குழந்தைக்கும் போதிய சிகிச்சை அளித்து உதவிவருகிறோம்.

தமிழகம் முழுக்க எங்கள் அமைப்பு மூலம் இதுவரை 9 ஆயிரம் குழந்தைகள் மருத்துவ உதவி பெற்றிருக்கிறார்கள். குழந்தைகளின் சிகிச்சைக்காக எங்களைத் தொடர்புகொண்டால்... அரசு, தனியார் மருத்துவமனைகளுடன் கைகோத்து இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் மருத்துவ வசதி செய்துதருவோம்.

ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறவர்கள், சில நூறுகள் தந்து உதவலாமே... அந்தச் சிறுதுளி பெருவெள்ளமாகச் சேரும்!’’

- கருணையின் தரிசனம் தந்தார் டாக்டர்!

சா.வடிவரசு,  படம்: ம.நவீன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick