தொழில்கள் 18... 'டிக்' செய்யலாம் விருப்பபட்டு!

சுயதொழில், சுயவருமானம்.... இதுவே இன்று பல பெண்களின் ஆசை, கனவு, லட்சியம். பெண்கள் செய்வதற்கு ஏற்ற முதன்மையான 18 தொழில்கள் பற்றி இங்கே தகவல்கள் தருகிறார், சென்னை, கிண்டியில் அமைந்துள்ள மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் (The Micro Small and Medium Enterprises Development Institute - MSME DI) உதவி இயக்குநர் ஜே.என்.புனிதவதி.

‘‘ஒரு தொழிலை ஆரம்பிக்கும் முன் அதில் நல்ல அனுபவம்/பயிற்சி அவசியமான தகுதி. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மானியத்துடன் தொழில்கடன் பெற, அந்தந்த மாவட்டத்தின் தொழில் மையங்களில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து, திட்ட அறிக்கையை இணைத்து அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தொழிற்கடனுக்கான திட்ட அறிக்கையை தயார் செய்யும்போது, தகுதியான இணைப்புகளுடன் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்கள், மாவட்ட தொழில் மையத்தின் பரிந்துரையின் பேரில் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுத்த வங்கிக்கு அனுப்பப்படும். வங்கிக்கடன் பெற்றவர்களுக்கு 15% மானியம் மாவட்ட தொழில் மையத்தினால் (District Industries Centre  - DIC) வழங்கப்படும்.

இங்கே பட்டியலிடப்பட்டிருக்கும் தொழில்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 50,000 முதல் ரூபாய் 1,00,000 வரை  முதலீடு தேவைப்படும். தொழில் செய்வதற்கான அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே பெரும்பாலான தொழில்களை செய்யவேண்டும் என்பது அவசியம். டே கேர் சென்டர்கள், ஹேர் ஆயில் தயாரிப்புகள் போன்ற சில தொழில்களுக்கு அந்தந்த மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் உரிய அனுமதி பெற வேண்டியிருக்கும். மின்சாரம் தேவையில்லாத தொழில்களை குடிசைத் தொழிலாக  பதிவு செய்து, வீட்டிலேயே செய்யலாம்’’ என்ற புனிதவதி, தொழில்களின் அறிமுகம் தந்தார்...

1. குழந்தைகள் காப்பகம் (டே கேர்)

அனுமதி: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்தில் அனுமதி மற்றும் நடத்துபவர்களுக்கு முறையான பயிற்சியோ, அனுபவமோ இருப்பது அவசியம்.

இடம்: அமைதியான சூழலில், குழந்தைகளுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உபகரணங்களுடன்

வேலையாட்கள்: முதற்கட்டமாக 5 பேர்

மாத வருமானம் (வேலையாட்களுக்கான சம்பளம்போக): 20,000 ரூபாய் முதல்

2. எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள்

அனுமதி: குடிசைத் தொழிலில் பதிவு செய்துகொள்ளலாம் (cottage industries). முறையான பயிற்சி தேவை.

இடம்: தொழில் செய்வதற்கான அனுமதி பெற்ற இடம்

வேலையாட்கள்: 4 பேர்

மாத வருமானம்: 15 ஆயிரம் ரூபாய் முதல்

3. ஈவன்ட் மேனேஜ்மென்ட்

அனுமதி: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அனுமதி 

இடம்: தொழில் செய்வதற்கான அனுமதி பெற்ற இடம்

வேலையாட்கள்: 10 பேர்

மாத வருமானம்: 50,000 ரூபாய் முதல்

4. ஃபேஷன் பொட்டீக்

அனுமதி: குடிசைத் தொழிலில் பதிவு செய்துகொள்ளலாம் (cottage industries). முறையான பயிற்சி மற்றும் அனுபவம் தேவை

இடம்: தொழில் செய்வதற்கான அனுமதி பெற்ற இடம்

வேலையாட்கள்: 3 பேர்

மாத வருமானம்: 20,000 ரூபாய் முதல்

5. ஃபேஷன் ஜுவல்லரி தயாரிப்பு மற்றும் பயிற்சி

அனுமதி: குடிசைத் தொழிலில் பதிவு செய்துகொள்ளலாம் (cottage industries). முறையான பயிற்சி மற்றும் முன் அனுபவம் அவசியம்.

இடம்: தொழில் செய்வதற்கான அனுமதி பெற்ற இடம்

வேலையாட்கள்: 3 பேர்

மாத வருமானம்: 10,000 ரூபாய் முதல்

6. ஃபேஷன் பிரின்ட்டிங்

அனுமதி: குடிசைத் தொழிலில் பதிவு செய்துகொள்ளலாம் (cottage industries). முறையான பயிற்சி மற்றும் முன் அனுபவம் அவசியம்.

இடம்: தொழில் செய்வதற்கான அனுமதி பெற்ற இடம்

வேலையாட்கள்: 5 பேர்

மாத வருமானம்: 15,000 ரூபாய் முதல்

7. ஹெர்பல் ஹேர் ஆயில், பவுடர் தயாரிப்பு மற்றும் பயிற்சி

அனுமதி: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்தில் அனுமதி பெறவேண்டும். மருத்துவ அறிவியல் இயக்ககம்/பரிசோதனை கூடம் இவற்றில் அவசியம் அனுமதி பெற வேண்டும்.

இடம்: தொழில் செய்வதற்கான அனுமதி பெற்ற இடம்

வேலையாட்கள்: 5 பேர்

மாத வருமானம்: 25,000 ரூபாய் முதல்

8. சணல் பொருட்கள்

அனுமதி: குடிசைத் தொழிலில் பதிவு செய்துகொள்ளலாம் (cottage industries). முன் அனுபவம் தேவை.

இடம்: தொழில் செய்வதற்கான அனுமதி பெற்ற இடம்

வேலையாட்கள்: 3 பேர்

மாத வருமானம்: 15,000 ரூபாய் முதல்

9. லேண்ட் ஸ்கேப்பிங் (சாதாரணமான இடத்தை செதுக்கி அதற்கு ஏற்றாற்போல், செயற்கையாக வாட்டர் ஃபால்ஸ், லைட்டிங், புல் மற்றும் செடிகள் வைத்து அழகு செய்வது)

அனுமதி: குடிசைத் தொழிலில் பதிவு செய்துகொள்ளலாம் (cottage industries).

இடம்: தொழில் செய்வதற்கான அனுமதி பெற்ற இடம்

வேலையாட்கள்: தேவையைப் பொறுத்து

மாத வருமானம்: 30,000 ரூபாய் முதல்

10. எக்ஸ்பிரஸ் லாண்டரி ஹவுஸ் (விரைவு சலவைத்தொழில்)

அனுமதி: குடிசைத் தொழிலில் பதிவு செய்துகொள்ளலாம் (Cottage Industries). பயிற்சி, முன் அனுபவம் தேவை.

வேலையாட்கள்: மூன்று பேர்

மாத வருமானம்: 25,000 ரூபாய் முதல்

11. மாடி காய்கறித்தோட்டம் (பெரிய பங்களாக்கள், நிறுவனங்கள், அலுவலகங்களில், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தோட்டம் பராமரித்தல்)

தகுதி: பயிற்சியும், முயற்சியும் போதுமானது

இடம்: வீட்டிலுள்ள மாடி

வேலையாட்கள்: தேவைக்கேற்ப

மாத வருமானம்: 10,000 ரூபாய் முதல்

12. சிறுதானிய உணவுப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் பயிற்சி

அனுமதி: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

இடம்: தொழில் செய்வதற்கான அனுமதி பெற்ற இடம்

வேலையாட்கள்: 4 பேர்

மாத வருமானம்: 20,000 ரூபாய் முதல்

13. ஆம்லா (நெல்லிக்காய்) புராடக்ட்ஸ்

அனுமதி: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டியது அவசியம்

இடம்: தொழில் செய்வதற்கான அனுமதி பெற்ற இடம்

வேலையாட்கள்: 2 பேர்

மாத வருமானம்: 20,000 ரூபாய் முதல்

14. செல்லப்பிராணிகள் விற்பனை மற்றும் பராமரிப்பு (ஹேர்கட், குளியல்)

அனுமதி: முறையான பயிற்சி மற்றும் அனுபவம் தேவை

இடம்: தொழில் செய்வதற்கான அனுமதி பெற்ற இடம்

வேலையாட்கள்: 2 பேர்

மாத வருமானம்: 40,000 ரூபாய் முதல்

15. ஹோம்மேட் சாக்லேட்ஸ்

அனுமதி: இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

இடம்: தொழில் செய்வதற்கான அனுமதி பெற்ற இடம்

வேலையாட்கள்: 2 பேர்

மாத வருமானம்: 20,000 ரூபாய் முதல்

16. தையல் யூனிட் மற்றும் வகுப்பு

அனுமதி: குடிசைத் தொழிலில் பதிவு செய்துகொள்ளலாம் (cottage industries). முன் அனுபவம் மற்றும் முறையான பயிற்சி அவசியம்.

இடம்: தொழில் செய்வதற்கான அனுமதி பெற்ற இடம்

வேலையாட்கள்: 2 - 3 பேர்

மாத வருமானம்: 20,000 ரூபாய் முதல்

17. வெஜிடபிள் கார்விங்

அனுமதி: குடிசைத் தொழிலில் பதிவு செய்துகொள்ளலாம் (cottage industries). முன் அனுபவம் வேண்டும்.

இடம்: வீடு

வேலையாட்கள்: 2 பேர்

மாத வருமானம்: 15,000 ரூபாய் முதல்

18. டெரகோட்டா பொருட்கள் தயாரிப்பு

அனுமதி: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்தில் அனுமதி பெறவேண்டும்.

இடம்: களிமண் உள்ள நிலப்பரப்பு

வேலையாட்கள்: வேலை தெரிந்தவர்கள்(3 - 4 பேர்)

மாத வருமானம்: 20,000 ரூபாய் முதல்

எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள், ஃபேஷன் பொட்டீக், ஃபேஷன் ஜுவல்லரி தயாரிப்பு, ஹெர்பல் ஹேர் ஆயில் பவுடர் தயாரிப்பு, சிறுதானிய உணவுப்பொருட்கள் தயாரிப்பு, தையல் யூனிட் போன்ற தொழில் களுக்கு மட்டும் எம்.எஸ்.எம்.இ நிறுவனத்தில் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. மற்ற தொழில்களுக்கு முன் அனுபவம் தேவை என்பதால் நடைமுறைப்பயிற்சி (Practical Experience) பெறுவது மிகசிறந்தது.

முகவரி:

எம்.எஸ்.எம்.இ வளர்ச்சி நிறுவனம்,
65/1, ஜி.எஸ்.டி, ரோடு, கிண்டி,
சென்னை - 32

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மாத வருமானம், தொழிலை வெற்றிகரமாக நடத்தும்போது கிடைக்கக்கூடியது.

வே.கிருஷ்ணவேணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick