பசிச்ச வயிற்றுக்கு... ‘ஃபுட்பேங்க்’!

ந.ஆஷிகா, படங்கள்: எம்.உசேன்,ஜெ.விக்னேஷ்

சென்னை, தி.நகர்... ரோட்டரங்களில் இருக்கும் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், வறியவர்களுக்கு சிலர் உணவுப் பொட்டலங்களை வழங்கிக்கொண்டிருக்க, அவர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார் இளம்பெண் சினேகா மோகன்தாஸ்! 2012-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்து, தற்போது ‘பிக் ஈவன்ட்’ என்ற பெயரில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் செய்துவருகிறார். ‘ஃபுட்பேங்’ என்ற அமைப்பை, ஆதரவற்ற சாலைவாசிகளுக்கு உணவு வழங்குவதற்காக ஆரம்பித்து செயலாற்றி வரும் சினேகாவுடன் கைகுலுக்கினோம்!

“உலகத்துல 830 மில்லியன் மக்கள் பசியால வாடுறாங்க. இதுல இந்தியர்கள், மூன்றில் ஒரு பங்கு. நம்மில் பலரும் பண்டிகை, பிறந்தநாள்னா ஆதரவற்ற இல்லங்களில் உள்ளவங்களுக்கு உணவு உதவி செஞ்சிருப்போம். ஆனா, ரோட்டோரத்துல இருக்கிறவங்களுக்கும் வயிறு இருக்கும்தானே? அவங்களைத் தாண்டிப் போகும்போது சில சில்லறைக் காசுகளை கொடுக்கிறதோட சரி... அவங்களைப் பத்தி நாம யோசிக்கிறதே இல்ல. நான் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாய்பாபா கோயிலுக்குப் போகும்போது, அந்த ஏரியாவுல இருக்கிற ஆதரவற்றோருக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்ய ஆரம்பிச்சேன். அதை இன்னும் கொஞ்சம் விரிவா செய்யலாம்னு நினைச்சப்போதான், ‘ஃபுட்பேங்க்’ ஐடியா வந்தது.

ஃபேஸ்புக்ல ‘ஃபுட்பேங்-சென்னை’னு பேஜ் ஓபன் பண்ணி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் குரூப்களில் எல்லாம் ஃபார்வேர்டு செஞ்சேன். நல்ல ரெஸ்பான்ஸ். பலரும், ‘நாங்களும் இதில் சேர்ந்துக்குறோம்!’னு முன்வந்தாங்க. ஆரம்பிச்ச நாலு மாசத்துக்குள்ள தினமும் குறைஞ்சது 50 உணவுப் பொட்டலங்கள் தானம் வழங்குற அளவுக்கு உதவிகள் வந்து சேர்ந்திருக்கு. தமிழ்நாடு தாண்டி இப்போ டெல்லி, கொச்சின், புனேவில் இருந்தெல்லாம், ‘இதேபோல ஒரு ‘ஃபுட்பேங்க்’ எங்க சிட்டியிலும் ஆரம்பிக்க ஆசை... கைடு பண்ணுங்களேன்’னு தன்னார்வலர்கள் என்னைக் கேட்கிறாங்க!

இதோட மெயின் கான்செப்ட்... வீடு இல்லாதவங்களுக்கு வீட்டுச் சாப்பாடு. உங்களுக்கு சமைக்கிற சாப்பாட்டுல இன்னும் கொஞ்சம் அதிகமா சமைச்சு ரோட்டோரங்களில் இருக்குற ஆதரவற்றவங்களுக்குக் கொடுக்கப் போறீங்க... அவ்ளோதான்! ஒவ்வொரு ஏரியாவுக்கும் தனித்தனியா குரூப் பிரிச்சிருக்கோம். வாரத்துல ஒரு நாள் உங்களால முடிஞ்ச உணவ சமைச்சு ஃபுட் டிரைவ் சென்று, நீங்களே நேரடியா கொடுக்கலாம். வர முடியாதுனா... சமைத்த உணவை அந்தக் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களிடம் கொடுத்தனுப்பலாம். சிலர் தண்ணியும் சேர்த்தே தருவாங்க. இந்த ஃபுட் பேங்கில் பணமா வாங்குறதில்ல. சிலர், ‘ஹோட்டல்ல வாங்கிக் கொடுக்கலாமா?’னு கேட்பாங்க. அதையும் தவிர்த்துடுவோம்.

சென்னையில் 15 ஏரியாக்களில் எங்க வாலன்டியர்ஸ் குரூப் இருக்காங்க. குறைந்தது 50 உணவுப் பொட்டலங்களோட போவோம்; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியாவில் உணவு வழங்குவோம். இந்த அமைப்பை ஆரம்பிச்சது வேணும்னா நானா இருக்கலாம். ஆனா, இது தொடர்ந்து வெற்றிகரமா செயல்படக் காரணம், எங்க டீம்தான். சிலர், ‘நீங்க அவங்களுக்கு சாப்பாடு கொடுத்து சோம்பேறி ஆக்குறீங்க’னு சொல்வாங்க. அவங்களுக்கு எல்லாம் நாங்க பதில் சொல்றதில்ல. எங்க அக்கறையெல்லாம், பசிச்ச வயிறு பத்திதான்!” கண்களில் கருணை ஒளிர முடிக்கிறார் சினேகா!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick