வெல்கம் டு கிரிமினாலஜி!

ச.ஸ்ரீராம் ரங்கநாத், ம.நவீன்

குற்றவியல் துறை (Department of criminology)... திருட்டு, கொலை போன்ற குற்ற வழக்குகளில் காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் கைகொடுக்கும் துறை. பலரும் அறிந்திராத இந்தத் துறைப் படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றிச் சொல்கிறார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறைத் தலைவர், ஸ்ரீனிவாசன்.

விண்ணப்பம்

பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) பயின்றவர்கள், மூன்று வருடப் படிப்பான பி.ஏ., கிரிமினாலஜிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்படிப்பு

எம்.ஏ., கிரிமினாலஜி படிக்க, இளங்கலையில் எந்தத் துறையில் (பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம்., பி.சி.ஏ) பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். டாக்டர் பட்டம் வரை பெறலாம்.

பல்கலைக்கழகங்கள்

குற்றவியலில் இளங்கலை, முதுகலை மற்றும் டாக்டர் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்கள் குறைவாகவே உள்ளன. ஆனால், இது வளர்ந்து வரும் துறை என்பதால், வரும் ஆண்டுகளில் இப்படிப்பு பரவலான கல்லூரிகளிலும் இடம்பெறும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சென்ற கல்வி ஆண்டு வரை 20 ஆக இருந்த மாணவர் சேர்க்கை, இந்தக் கல்வி ஆண்டில் 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிரிமினாலஜி படிப்புகளை வழங்கும் கல்விக்கூடங்கள்...

சென்னைப் பல்கலைக்கழகம்- சென்னை

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - திருநெல்வேலி

காமராஜர் பல்கலைக்கழகம்   - மதுரை

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் - சென்னை

சென்னையிலிருக்கும் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகள்

கல்விக் கட்டணம்

இளங்கலை மற்றும் முதுகலைக்கான கல்விக் கட்டணம் ஒரு செமஸ்டருக்கு 4,000 ரூபாய் வரை மட்டுமே.

சிலபஸ்

குற்றங்களின் பின்னணியை ஆராய்வது, தடயங்கள் அறிவது, உளவியல் சட்டம், குற்றவியல் நடைமுறைகள், காவல் நிலையத்தில் நேரடியாகக் கற்கும் எட்டு வார இன்டர்ன்ஷிப் உள்ளிட்டவை சிலபஸில் அடங்கும்.

வேலைவாய்ப்பு

பொதுத்துறை, தனியார் துறை, பேராசிரியர் பணியிடம் என வேலைவாய்ப்புகள் விரிந்திருக்கின்றன. பொதுத்துறையில் அறிவியல் ஆலோசகர், வங்கி தொடர்பான மோசடிகளைக் கண்டறிவது, பிரேத பரிசோதனையில் உடனிருப்பது, உளவுத்துறை சார்ந்த துணைப் பிரிவுகள் முதலியவற்றில் இவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. தனியார் துறையில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் துப்பறியும் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களில் ஹைடெக் ஒயிட் காலர் குற்றங்களைக் கண்டறிவது போன்ற வேலைகள் உள்ளன.
எம்.பி.பி.எஸ் பயில்வோர்க்கு தடயவியல் கல்வியைப் போதிக்கும் பேராசிரியர்கள் வாய்ப்புகள் உள்ளன. யு.பி.எஸ்.சி தேர்வுகள் இவர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதுடன், காவல்துறை தேர்வுகளில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மாத சம்பளம் குறைந்தது 20 ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கும்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick