Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"கேப்டன்கிட்ட பிடிச்சது அவரோட எளிமை!"

- பிரேமலதா விஜயகாந்த்சந்திப்பு

ரு நடிகர்... நடிகர் சங்கத் தலைவராகி, அரசியல் கட்சித் தலைவராகி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைக் கடந்து முதல்வர் நாற்காலியை நோக்கிய பயணத்தில், கணவரின் ஏணிக்கு தன் அன்பையும் படிக்கட்டுகள் ஆக்கிக்கொண்டிருப்பவர் பிரேமலதா விஜயகாந்த். இன்று அரசியல் அரங்கில் தே.மு.தி.க-வுக்காகவும், வருங்கால தமிழகத்துக்காகவும் பேசி, இயங்கி வரும் பிரேமலதாவை, சென்னையில் அவர் இல்லத்தில் சந்தித்தோம்...

‘‘நீங்கள் பிறந்து வளர்ந்த சூழல் பற்றி?’’

‘‘வடஆற்காடு மாவட்டத்தில் எளிமையான குடும்பம். அப்பா சுகர் ஃபேக்டரியில மேனேஜர். ஒரு அக்கா, ஒரு தம்பி. நான் பி.ஏ பட்டதாரி. நான், அக்கா, தம்பி எல்லாருமே நேஷனல் லெவல் அத்லெட்ஸ். ஐ.பி.எஸ் ஆசையும் இருந்துச்சு. பலரும் கேட்பாங்க... சில வருஷங்களுக்கு முன்வரை இல்லத்தரசியா இருந்த பிரேமலதாவுக்கு, இப்போ மேடையில் ஆட்சியாளர்களை விமர்சனம் செய்யும் வலிமை எப்படிக் கிடைச்சதுனு! விளையாட்டுக் களத்துல நம்ம கண் முன்னால நிக்கிற போட்டியாளரை ஜெயிச்சே ஆகணும்கிற வெறி மட்டுமே இருக்கும். ஒருவேளை இன்னிக்கு எங்கிட்ட வெளிப்படுற வலிமைக்கும், தைரியத்துக்கும் அடிப்படை, என் விளையாட்டு மைதான அனுபவங்களா இருக்கலாம்.

``முதல்வர் ஜெயலலிதா பற்றி உங்கள் கருத்து என்ன..?''

``தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு நல்ல நிர்வாகியாக இருப்பார் என நினைத்தது உண்டு. ஆனால், நல்ல நிர்வாகியாகவும் இல்லை. நல்ல முதல்வராகவும் இல்லை.''

‘‘கேப்டனின் முதல் சந்திப்பு..?’’

‘‘பெரியவங்க பார்த்து செஞ்சுவெச்ச கல்யாணம். எங்க குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் தொடர்பே இல்ல. அப்பாவோட நண்பர் ஒருத்தர் கேப்டனுக்கு பொண்ணு பார்க்கிறதா எங்கப்பாகிட்ட சொல்லி, என்னைக் கேட்டார்கள். கேப்டனோட நண்பர்கள், உறவினர்கள் வந்து, என்னைப் பார்த்தார்கள். இறுதியா, கார்த்திகை மாதத்தின் ஒரு நாளில் கேப்டன் பெண் பார்க்க வர்றதா சொன்னாங்க. அப்போ அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த ஹீரோ! ஒரு ஹீரோ என்னைப் பெண் பார்க்க வர்றாருன்னா, எனக்கும் எங்க வீட்டுல இருந்தவங்களுக்கும் எவ்வளவு பரவசமா இருந்திருக்கும்?!

வாசல்ல கார் வந்து நின்னது. கேப்டன் இறங்குறாரு. பார்த்தா... கறுப்பு வேஷ்டி, நெற்றியில் சந்தனம், கால்ல செருப்பில்லை. மாலை போட்டிருந்தாரு. அப்போ சபரிமலைக்கு தவறாம மாலை போடுறது கேப்டனோட வழக்கம் என்று கூறினார்கள். அவரோட எளிமையில் எல்லோரும் அசந்துட்டோம். ‘மொதமுறை பார்க்கும்போதே எனக்கு என் சொந்தத் தம்பி போல தோணிருச்சு’னு சிலிர்த்துட்டாங்க எங்கம்மா. காபி கொடுக்கச் சொன்னாங்க. எதுவும் பேசிக்கல. வீட்டுக்குப் போயி சொல்றேன்னு சொன்னாரு. அப்ப அவர் ரொம்ப பிஸி. ‘புலன்விசாரணை’ படத்துல நடிச்சுட்டு இருந்தாரு. என்னைப் பார்க்க பாம்பேவில் இருந்து வந்துட்டு, பார்த்த கையோட நாகர்கோவிலுக்கு ஷூட்டிங்குப் கிளம்பிட்டாரு. அரை மணி நேரத்துல, ‘பிடிச்சிருக்காம்!’னு தகவல் வந்துருச்சு.’’

‘‘திருமணத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள்..?’’

‘‘அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையில், ஐயா ஜி.கே.மூப்பனார் முன்னிலையில் மதுரை, ராஜா முத்தையா மஹாலில் கல்யாணம் நடந்தது. அங்கிருந்து தமுக்கம் மைதானம் வரை நாங்க ஜீப்பில் நின்னுட்டே போறோம்... எங்களுக்கு முன்னாடியும் பின்னாடியும் ரசிகர்கள் ஓட்டமும் நடையுமா வர்றாங்க. கண் பார்வைக்குத் தெரிஞ்ச வரைக்கும் மக்கள் வெள்ளம். திரண்ட கூட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியா மிரண்டுட்டேன் நான். அந்த ஜனத்திரளுக்கு நடுவில்தான் எங்க கல்யாணம் நடந்தது. ரசிகர்கள்தான் எங்க திருமண விருந்தினர்கள். `இது ஒரு நடிகருக்கு வந்த கூட்டம் அல்ல, நாளைய தலைவராக வரப்போறவருக்கு வந்த கூட்டம்'னு அன்னிக்கே என் மனசில் பட்டது. இதை இப்போ சொன்னா மிகைனு தோணலாம்... ஆனா, அதுதான் உண்மை!’’

‘‘ஹீரோவின் ரியல் ஹீரோயின் ஆனதுக்கு அப்புறம் வாழ்க்கை பற்றி...''

‘‘நானும் அந்தக் கனவுகளோடதான் வந்தேன். ஆனா, அதுக்கு நேரெதிரா எந்த ஆடம்பரமும் இல்லாம இருந்தது வீடு. ஒரு ரூமில் இரண்டு கப்போர்டு இருந்துச்சு. ‘இதில் ஒண்ணை இனி நீ எடுத்துக்கோ’னு சொன்னார். அவரோட கப்போர்டைத் திறந்து பார்த்தா, நாலஞ்சு வேஷ்டி, சட்டைதான் இருந்துச்சு. எவ்ளோ பெரிய நிகழ்ச்சியா இருந்தாலும், கதர் வேஷ்டிதான் கட்டிட்டுப் போவார். அவர் போடும் கதர் சட்டை சலவைக்குப் போயிட்டு வரும்போது சில சமயம் ஓட்டை விழுந்துடும். ‘கிழிஞ்சாதான் கதருக்கு மரியாதை... இருக்கட்டும்’னு போட்டுட்டுக் கிளம்பிடுவார். சாப்பிடும்போது, டி.வி பார்க்கும்போது எல்லாம் தரையில்தான் உட்காருவார். கேப்டனோட அந்த எளிமைதான், எப்பவும் அவர்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம்! ஒரு விஷயம் தெரியுமா... அவரும் என்னை மாதிரியே ஸ்போர்ட்ஸ் பர்சன். பேஸிக்கலி அவர் ஒரு ஃபுட் பால் பிளேயர்!

கல்யாணமாகி ஏழு வருஷத்துக்கு அப்பறம், கேப்டன் அவருக்காக என்னைக் கதை கேட்கச் சொன்னார். அவர் போலீஸா நடிக்கும் எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். `ரமணா' படம் என்னை மிகப்பெரிய அளவில் பாதிச்ச படம்! இல்லத்தரசியா இருந்த என்னைக் கொஞ்சம் கொஞ்சமா நிர்வாகப் பொறுப்புகளுக்குப் பழக்கினது அவர்தான். அவர், ஓடா உழைக்கிறதைப் பார்க்கும்போது ஒரு மனைவியா வருத்தமாவும், ஒரு மனுஷியா ஆச்சர்யமாவும் இருக்கும். நேரம்தவறாமையில் கேப்டன் ரொம்பக் கவனமா இருப்பார். இன்னிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு எந்த நேரத்துக்கு வர்றதா சொன்னோமோ, அந்த நேரத்துக்குத் தவறாமப் போயிடுவோம்.

தன்னோட ஒரு வயசுலயே அம்மாவை இழந்துட்டவர். எல் லாமே அப்பாதான் அவருக்கு. சாமியறை யில முதல் கடவுளே அப்பாவும், அம்மாவும்தான்! பன்னிரண்டாவது படிச்சிருக்காரு. வெளியூர்களுக்குப் போகும்போதெல்லாம்... ‘இந்த ஸ்கூல்ல நான் படிச்சிருக்கேன்’னு ஸ்கூலைக் காட்டுவாரு. ஒரு டிகிரி வாங்கல என்ற வருத்தம் கேப்டனுக்கு உண்டு. அதனால பசங்களை நல்லா படிக்க வைக்கணும்னு சொல்லிட்டே இருப்பார். மூத்தவன் விஜயபிரபாகரன், பி.ஆர்க்... சின்னவன் சண்முக பாண்டியன், விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சு முடிச்சுட்டாங்க. பசங்க லேட் நைட் சினிமாவுக்குப் போகக் கூடாது; பார்ட்டி, கிளப்புக்கு நோ. ரெண்டு விஷயத்தில் மட்டும் கண்டிப்பான அப்பா. கலாசாரத்தை மீறி எதுவும் நடக்கக்கூடாது அவருக்கு.’’

‘‘கேப்டன் வளர்ச்சியில் உங்க பங்கு என்ன?’’

‘‘சினிமாவில் அவருக்கு முதல் ரசிகையா இருந்தது, நடிகர் சங்கத் தலைவரா அவரோட நேர்மையான செயல்பாடுகளை ஊர் மெச்சினதுக்கு முன்னாடி வீட்டில் அவரைப் பாராட்டியது, அரசியல்ல இறங்க ஆலோசனைகள் நடந்த காலத்தில், அவர் பலத்தை நான் உணர்ந்தேன். இப்போ எதிர்க்கட்சித் தலைவரா அவர் எதிர்கொள்ற பிரச்னைகள், விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் அவரை செய்ற கிண்டல்களை எல்லாம் மனதில் பாரமா ஏறாம, காதோட திரும்பிடுற மாதிரி அவருக்கு அனுசரணையா இருக்கிறது... இப்படித்தான் அவரின் ஒவ்வொரு கட்டத்திலும் கணவனைக் கொண்டாடுற மனைவியா இருக்கேன். கேப்டனுக்கு மட்டுமில்ல... எல்லா ஆண் மகனுக்கு உள்ளேயும் ஒரு சூப்பர் ஹீரோ இருப்பார். அதைக் கண்டுபிடிச்சுக் கொண்டாடுற மனைவி கிடைச்சுட்டா, அவங்க தன் துறையில் நிச்சயம் நம்பிக்கையோட நடை போடுவார்கள்; வெற்றியை அடைவார்கள்!’’

ஆஸம்!

 கே.அபிநயா   படம்:சு.குமரேசன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
என் போட்டோவை திருடினால் சந்தோஷம்!
சந்தோஷ ஸ்வரங்கள்... கலக்கும் காதல் தம்பதி!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close