Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டீச்சிங்... ஷூட்டிங்... லாஃபிங்...

- அட, அன்னலட்சுமி டீச்சர்!காமெடி ஸ்டார்

ன்னலட்சுமி டீச்சர்... விஜய் டி.வி ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கும் கன்டஸ்டன்ட். வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும் இவர், நம் வீட்டு வாண்டுகளில் இருந்து பெரியவர்கள் வரை ஃபேவரைட் ஆகியிருக்கிறார்!

‘‘விடாமுயற்சிதான் இன்னிக்கு இந்த வெற்றியை எனக்குக் கொடுத்திருக்கு. எத்தனை தோல்விகள் கண்டாலும் அடுத்து எந்த மேடைனு தேட ஆரம்பிச்சுடுவேன். எத்தனை அவமானங்கள் பார்த்தாலும் எல்லா சேனல்களின் ஆடிஷனுக்கும் ஏறி இறங்கிடுவேன். இப்போ அன்னலட்சுமியை தமிழ்நாட்டுல பெரும்பாலானவங்களுக்குத் தெரியுமே!’’

- கலகலவென பேச்சை ஆரம்பித்தார் டீச்சர்.

‘‘நான் மூணாவது படிக்கும்போதே, என் வாய்த் திறமையைப் பார்த்து மேடை ஏத்தினாங்க ரெஜினா மேரி டீச்சர். நானும் டீச்சராகி அவங்கள மாதிரியே பசங்களுக்கு ஃப்ரெண்ட்லியா இருக்கணும்கிறதுதான் லட்சியமாச்சு. அதனாலயே டி.டி.எட் (DTEd), பி.எஸ்ஸி, எம்.ஏ, பி.எட் முடிச்சுட்டு திருச்சி, காட்டூர்ல இருக்கும் பரமஹம்சா ஸ்கூல்ல தமிழ் மற்றும் சயின்ஸ் டீச்சரா வேலை பார்த்துட்டு இருக்கேன்.

தினமும் ‘அன்னலட்சுமி மிஸ் வந்துட்டேன்!’னு கிளாஸ் வாசல்ல ஒரு குட்டி ஜம்ப் பண்ணிதான் உள்ள போவேன். அந்த நிமிஷமே ஸ்டூடன்ட்ஸ் எல்லோரும் இந்த சிரிப்பு டீச்சரை ஆர்வமா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. பாடம் ரொம்ப பிராக்டிக் கலா நடத்துவேன். நகம் வளர்த்தா கிருமி சேர்ந்து சாப்பிடும்போது வயித்துக் குள்ள போய் இன்ஃபெக்‌ஷனை உண்டாக்கும்னு புரியவைக்க, வயித்து வலி வந்த மாதிரி நடிச்சுக் காட்டி கிளாஸ் எடுப்பேன். பேரன்ட்ஸ் யாராச்சும், ‘பையன் ஒழுங்காவே சாப்பிட மாட்டேங்கிறான்’ என்கிற மாதிரி கம்ப்ளெயின்ட் பண்ணினா, ‘அப்போ நீங்க ஒழுங்கா சமைக்கலை!’னு சொல்லி, இப்படி எப்பவுமே பசங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேங்கிறதால, அவங்க நம்மளோட அப்படியே ஜெல் ஆகிடுவாங்க!’’ என்றவரிடம், இப்போது டீச்சிங்கையும் ஷூட்டிங்கையும் சமாளிக்கும் விதம் பற்றிக் கேட்டோம்.

‘‘ஆரம்பத்துல சமாளிக்க முடியல. பேசாம டீச்சர் வேலையை விட்டுடலாம்னு நினைச்சேன். ஆனா... எங்க ஸ்கூல்ல, இந்த அறிவான, அழகான டீச்சரை (பிராக்கெட்டுக்குள்ள ஆச்சர்யக்குறி எல்லாம் போட்டு கேலி பண்ணக்கூடாது ஆமா!) அனுப்ப மனசில்லாம, தினமும் மதியம் 12.30 மணிக்குள்ள முடியுற மாதிரி என் வகுப்புகளை எல்லாம் மாற்றியமைச்சு டைம்டேபிள் போட்டு உதவினாங்க. அதனால இப்போ நோ பிராப்ளம்!’’ என்றவரிடம், `‘நிகழ்ச்சிக்காக வேலையை விட நினைக்கும் அளவுக்கு மீடியாவில் இன்ட்ரஸ்டா?!’’ என்றால், ‘உச்சுரு!’ என்கிறார்.

“ஸ்கூல் படிக்கும்போது எல்லா நாடகங் களிலும் நான்தான் ஹீரோயின். டீச்சர் ஆனதும் பசங்களை டான்ஸ், டிராமாவுக்கு தயார் பண்ணும் பொறுப்பை அவ்ளோ ரசிச்சு செய்வேன். லோக்கல் ஏரியாவில் நடக்கும் பட்டிமன்றங்கள் தொடங்கி, சன் டி.வி ‘அரட்டை அரங்கம்’ வரை பேசியிருக்கேன். கலைஞர் டி.வி ‘அழகிய தமிழ் மகள்’ நிகழ்ச்சியின் `கிரியேட்டிவ் ஹெட்’டா மூணு வருஷம் வேலை பார்த்திருக்கேனாக்கும்!’’ என்று வியக்க வைத்தவரிடம், ‘கிரியேட்டிவ் ஹெட் டு போட்டியாளர்... ஏன்?’ என்றோம்.

‘‘ஹெட்டா இருந்தாலும் அது ஆஃப் ஸ்டேஜ். இது ஆன் ஸ்டேஜ். பொதுவா நான் கலந்துக்கிற பட்டிமன்றங்களில் மனோரமா ஆச்சி, கோவை சரளா அக்கா மாதிரினு சொல்லி என்னை அறிமுகப்படுத்தும்போது, அவ்ளோ மகிழ்ச்சியா, நெகிழ்ச்சியா இருக்கும். சினிமாவில் நடிக்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்கு ஒரு பிளாட்ஃபார்மா ‘கலக்கப்போவது யாரு’ அமையும்னு நம்புறேன். என்னைப் பொறுத்த வரைக்கும், காமெடி... காமநெடி இல்லாம, எல்லா தரப்பும் ரசிக்கிற மாதிரி இருக்கணும். பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், சேனல்னு எந்த தளத்தில் இயங்கினாலும், எனக்குள்ள எப்பவும் ஒரு டீச்சருக்கான சமூக அக்கறையும் இருக்கும்!’’

- சட்டென விட்ட மழை போல பேச்சை நிறுத்தி `பை’ சொல்கிறார், அன்னலட்சுமி!

இந்துலேகா.சி படங்கள்:என்.ஜி.மணிகண்டன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நமக்குள்ளே!
என் போட்டோவை திருடினால் சந்தோஷம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close