Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்டு... பாதுகாக்கும் வழிகள்!

ஒரிஜினல் பட்டு - எப்படிக் கண்டுபிடிப்பது?

தீபாவளிக்குப் பட்டுப் புடவை வேண்டும் என்பது, பெண்கள்  பலரின் விருப்பம். இப்படி ஆண்டுக்கு ஒரு பட்டாக எடுத்து பீரோவில் அடுக்கினால் மட்டும் போதாது... பல ஆயிரங்கள் செலவழித்து வாங்கும் அதை முறையாகப் பராமரிப்பதும் அவசியம். பட்டு தொடர்பான நம் சந்தேகங்களுக்குப் பதில் தருகிறார், ஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவக்குமார்...

``அப்படி என்னதான் ஸ்பெஷல் பட்டில்?’’

``ஒரிஜினல் நூல், பட்டுப்பூச்சியின் கூட்டில் இருந்து எடுக்கப்படுவது. இதில், அழகூட்டுவதற்காக, தங்கம் மற்றும் வெள்ளி இழைகளை (ஜரி) இழைத்துக் கைத்தறியில் நெய்வார்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும் அழகு குறையாமல் பளபளப்பாக இருக்கும். பட்டுக்குத் தீட்டில்லை, எல்லா சமயங்களிலும் கட்டலாம் என்பது நம்பிக்கை.’’

``ஒரிஜினல் பட்டை எப்படிக் கண்டுபிடிப்பது?’’

``ஆர்ட் சில்க், டெஸ்டட் சில்க் (Tested silk), பிளண்டட் சில்க் என பட்டில் ஏகப்பட்ட கலப்பட வகைகள் பெருகியுள்ள இந்தச் சூழலில், தூய்மையான பட்டைக் கண்டறிவது சிரமம்தான். பட்டில் அனுபவம் உள்ள பயனாளர்களுக்கும், பட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்குமே அது கை வரும். மற்றவர்கள் எப்படித்தான் கண்டறிவது என்றால், ஒரு வழி இருக்கிறது. ஒரு நூலை மட்டும் தனியாக எடுத்து நெருப்பில் காட்டும்போது, தலை
முடியை நெருப்பில் காட்டினால் வருவதுபோன்ற ஒரு வாசனை வந்தால் அது ஒரிஜினல். மேலும் அந்த நூல் மிச்சமில்லாமல் எரிந்துபோகும். அதுவே அந்த நூல் எரியும்போது பிளாஸ்டிக் வாசனை வந்து நெகிழும் தன்மையுடன் இருந்தால் அது கலப்படம். அதிக விலையில் அல்லது அதிக எண்ணிக்கையில் பட்டுப்புடவை வாங்கும்போது, தேவைப்பட்டால் ‘லேப்’புக்கு அனுப்பியும் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.’’

``ஒரிஜினல் பட்டு எந்த விலையில் இருந்து கிடைக்கும்?’’

``3,000 ரூபாயில் இருந்து 2,00,000 ரூபாய் வரை இருக்கிறது. சிறிது அல்லது பாதி மட்டும் ஒரிஜினல் பட்டு நூல் சேர்ப்பது போன்ற பட்டுகளும் மார்க்கெட்டில் உள்ளன. அதற்கு ஏற்ப விலை மாறுபடும்.’’

``பட்டுப்புடவை பாதுகாப்பு எப்படி?’’

``அணிந்த பின், அப்படியே மடித்து வைக்கக் கூடாது. அதில் படிந்திருக்கும் வியர்வை பட்டைப் பாழாக்கும். பிளவுஸ், புடவை இரண்டையும் நிழலில் நன்கு விரித்து உலரவிட வேண்டும். உலர்ந்த பின்னும் மடித்தோ, அயர்ன் செய்தோ வைக்கக் கூடாது. அடுத்த பயன்பாடு வரை அதிக நாட்கள் புடவை மடிப்பிலேயே இருப்பதால், அந்த மடிப்புகளில் எல்லாம் பட்டு நூல் சேதமடைந்துவிடும். 

 புடவையின் அகலத்துக்கும் சற்று அதிக நீளமான `வுடன் ஸ்டிக்’கில் (திரைச்சீலைகளுக்குப் பயன்படுத்துவது போன்றது) முதலில் வெள்ளை காட்டன் துணியை ரோல் செய்துகொள்ளவும். பிறகு, பட்டுப்புடவையை அதில் ரோல் செய்யவும். முடித்த பின், மீண்டும் இரண்டு சுற்றுக்கு வெள்ளை காட்டன் துணியினை ரோல் செய்து முடிக்கவும். இந்த ரோலை அப்படியே அலமாரியில் வைத்துக்கொள்ளவும். இதனால் மடிப்புப் பிரச்னை தவிர்க்கப்பட்டு, புடவை பாதுகாக்கப்படும்.

  பட்டுப்புடவைகளை எக்காரணம் கொண்டும் தண்ணீரில் அலசக்கூடாது. தரமான டிரைவாஷ் கடைகளில் கொடுத்தே வாங்க வேண்டும். டிரைவாஷ் எனும்போது, சிலர் பள்ளு, பார்டர், உடல் பகுதிகளைத் தனித்தனியாக வாஷ் செய்யாமல் ஒன்றாக வாஷ் செய்யும்போது, உடல் பகுதியிலுள்ள நிறம் பார்டரிலோ, பார்டரின் நிறம் உடலிலோ கலந்துவிடலாம். சிலர் டிரைவாஷ் செய்யாமல் நன்றாக அயர்ன் மட்டும் செய்துவிட்டு டிரைவாஷ் செய்துவிட்டதாகச் சொல்லிவிடுவார்கள்... எச்சரிக்கை!

  பட்டுப்புடவையில் கறை படிந்துவிட்டால், சோப்பு, ஷாம்பு, ஸ்டெயின் ரிமூவர் போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தக் கூடாது. பூந்திக்கொட்டை பயன்படுத்தலாம். புடவையின் நூலுக்கோ நிறத்துக்கோ எந்தத் தீங்கும் நேராது.''

``பட்டுப்புடவைகளில் சாயம் போகுமா?’’

``நிச்சயமாக! துவைப்பது, அலசுவது போன்றவற்றால் நாளாக ஆக தானாக நிறம் மங்கும். பொதுவாக பட்டில் மிகவும் அடர்த்தியான சிவப்பு, பச்சை போன்ற நிறங்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கலாம். லைட் பிங்க், லைட் கிரீன் போன்ற மெல்லிய நிறங்கள் ஓ.கே!’’

``பட்டு வேஷ்டிகளைப் பற்றி?’’

``பட்டு வேஷ்டிகளை துவைக்கும்போது முறுக்கிப் பிழியக்கூடாது. சோப்புத் தூளில் ஊறவைத்து பின்பு, கைகளால் அழுக்குப் பகுதிகளில் சுத்தம் செய்தபிறகு, அலசலாம். பட்டுப்புடவைகளைப் போன்றே பட்டு வேஷ்டிகளையும் ரோல் ஸ்டிக்கில் சுற்றி வைக்கலாம். உங்கள் திருமணத்துக்குக் கட்டிய பின், உங்கள் பையன் திருமணத்தின் போதும் எடுத்துக்கட்டினால் அதே மெருகுடன் இருக்கும்!’’

வே.கிருஷ்ணவேணி,  படங்கள்:சொ.பாலசுப்ரமணியன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஆப்பிள் கன்னங்களுக்கு..!
லெஹாங்காவுக்கு மாற்று... எத்னிக் கவுன்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close