வீட்டுக்கு வீடு நூலகம்!

‘‘சிறு வயதிலிருந்தே புத்தக வாசிப்புப் பழக்கத்துடன் வளரும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிப் பாடங்களை சுலபமாகப் படித்துவிடுகிறார்கள். மேலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளிலும், தனியார் வேலைவாய்ப்புத் தேர்வுகளிலும் மற்ற மாணவர்களைவிட இவர்கள் 19% அதிகத் திறனை வெளிப்படுத்துகிறார்கள் என்று தன் ஆய்வு முடிவில் தெரிவிக்கிறது, அமெரிக்காவின் நெவாடா (nevada) பல்கலைக்கழகம்!’’

- சென்னை, மேற்கு தாம்பரம் அகல்யா ஆர்ட் கேலரியை சேர்ந்த  உஷாராணி, இதையே தன் தொழிலுக்கான ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளார்.

“இந்த சர்வேயைப் படித்ததும் எனக்குத் தோன்றிய புதுமையான கான்செப்ட்தான், வீடுகளில் நூலகம் அமைத்துக் கொடுப்பது. வீட்டில் உள்ள பெரியவர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்களின் ஆர்வத்துக்கும் தேடலுக்குமான புத்தகங்களாகத் தேர்ந்தெடுத்து ஹோம் லைப்ரரி அமைத்துக் கொடுக்கப்படும். அவர்களின் விருப்பம், எங்களின் பரிந்துரை எல்லாமுமாக பரிசீலிக்கப்பட்டு, ஒரு முழுமையான நூலகத்தை அவர்கள் வீட்டில் இடம்பெறச் செய்வோம். புதிதாக வெளியாகும் புத்தகங்களைப் பற்றிய விவரங்களை தொடர்ந்து அவர்களுக்கு மெயில் அனுப்புவோம். விரும்பும்பட்சத்தில், அதையும் அந்த நூலகத்தில் சேர்த்துவிடுவோம்’’ எனும் உஷாராணி, இதை ஆரம்பித்த இந்த 6 மாதங்களில் பல வீடுகளுக்கும் கொண்டு சேர்க்கிறார்.

‘‘பிள்ளைகளின் பள்ளி, கல்லூரிக் கட்டணத்தில் இருந்து பைக், மொபைல் வரை லட்சக்கணக்கில் செலவழிக்கும் பெற்றோர்கள் பலர். ஆனால், அவர்களின் அறிவுத் தேடலுக்கு அடிப்படையான நூலகத்தை  அமைத்துக் கொடுப்பவர்கள் சிலரே. அந்த சிலருக்கும் பிள்ளைகளுக்கு புத்தகங்கள் வாங்கிக்கொடுக்கும் அக்கறை இருந்தாலும், அறநெறி, இலக்கியம், சப்ஜெக்ட் சார்ந்தவை என பல பிரிவுகளை உள்ள டக்கிய ஒரு முழுமையான புத்தக சேகரிப்பை தங்கள் பிள்ளைக்கு எப்படி ஏற்படுத்திக்கொடுப்பது என்பது தெரிவ தில்லை. அந்தக் குறையை நாங்கள் நிவர்த்திக்கிறோம். குறைந்தபட்சம் 2,000 ரூபாயில் இருந்து ஹோம் லைப்ரரி அமைத்துத் தரப்படும். அலமாரியுடன் கூடிய லைப்ரரி என்றால், கட்டணம் வேறுபடும்’’ என்பவர்,

‘‘பிள்ளைகளை லைப்ரரி ரூமுக்கு அனுப்பிவிட்டு, பெற்றோர் டி.வி பார்த்தால் இந்த முயற்சியின் நோக்கம் ஈடேறாமல் போகலாம். எனவே, நூலகம் அமைத்துக்கொடுப்பதுடன் அதைப் பயன்படுத்தும் ஆர்வத்தை பிள்ளைகளிடம் தூண்டுவதும் பெற்றோரின் பொறுப்பே! அது வெற்றியடைந்துவிட்டால், உங்கள் வீட்டில் தலைமுறைக்கும் அந்த அறிவுத் தேடல் தொடர்ந்துகொண்டிருக்கும்!’’

- புத்தகங்களுக்கு இடையில் சிரிக்கிறார், உஷாராணி!

கே.அபிநயா  படம்: கே.கார்த்திகேயன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick