Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

40 ஆண்டு கலக்கல்... கறுப்பு - வெள்ளை முதல் கலர் வரை!

ந்தக் காலத்தில் ஊருக்கு ஒரு டி.வி இருக்கும். பஞ்சாயத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அந்த டி.வி-யில், குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். அதிலும் தமிழ் நிகழ்ச்சிகள், சில மணி நேரங்கள் மட்டுமே! இந்த சில மணி நேரங்கள் என்பது... ஒவ்வொரு ஊரிலும் திருவிழாதான்! ஊர்மக்கள் காத்திருந்து ஒன்று கூடி நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்கள்.

ஆரம்பத்தில் மேல்மட்ட மக்கள் சிலருடைய வீடுகளில் கறுப்பு, வெள்ளை டி.வி-யை வாங்கத் தொடங்கினார்கள். அந்தக் காலத்தில் அது ஒரு ‘கெத்து’. அந்த வீடுகளுக்கு அக்கம்பக்கத்து வீட்டினர் ‘டி.வி பார்க்க’ செல்வார்கள். பெரும்பாலும் ஜன்னல் வழியேதான் பார்க்க அனுமதி கிடைக்கும். அலுமினியக் கம்பிகள் வைத்த பெரிய ஆன்டெனா, மரத்தாலான, கதவுகள் வைத்த டி.வி கவர்... பிறகு சிறிய அளவிலான ஆன்டெனா, வண்ணத் தொலைக்காட்சி என தொலைக்காட்சி பல பரிணாமங்கள் கடந்து, தற்போது டி.டி.ஹெச் ஒளிபரப்பு வரை விஸ்வரூபம் எடுத்துள்ளது அதன் டெக்னாலஜி.

90-களுக்குப் பிறகு, தனியார் தொலைக்காட்சிகள் மெதுவாக பரவி, இன்று விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் தலைக்காவேரி, பொதிகையே!

தென்னிந்தியாவில் துவங்கப்பட்ட முதல் தொலைக்காட்சி என்கிற பெருமை பொதிகைக்கு உண்டு. இலக்கியம், கல்வி, அரசியல், ஆன்மிகம், அறிவியல், பொழுதுபோக்கு என பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் பொதிகை தொலைக்காட்சி, 1975-ல் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த மகிழ்வான தருணத்தைக் கொண்டாடும் வகையில் சென்னை, நாரதகான சபாவில் சமீபத்தில் சிறப்பான விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது.

தமிழக ஆளுநர் ரோசய்யா தலைமை விருந்தினராகவும், பிரசார் பாரதியின் தலைவர் ஏ.சூரியபிரகாஷ், திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்ட நிகழ்வில், சிறப்பு விருந்தினர்கள் பொதிகை யுடனான தங்களின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் சூடுபிடிக்க ஆரம்பித்தன.

பொதிகையில் இதுநாள் வரை பங்கெடுத்து வந்த கலைஞர்கள், நேயர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டு, வீட்டுத் திருமணத்தில் நெடுநாள் கழித்து சந்திக்கும் உறவுகளைப் போல நலம் விசாரித்துக் கொண்டது அழகான தருணம். பத்மா சுப்ரமணியம், கிரேஸி மோகன், வரதராஜன் போன்றவர்களைச் சுட்டிக்காட்டி பலரும் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் சிறப்புக்களையும், அவர்களுடனான தூர்தர்ஷன் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதோடு, ஆட்டோகிராஃப்கள், செல்ஃபிகள் என அரங்கத்தையே லைவ் சேனலாக்கிக் கொண்டிருந்தார்கள்.

`ஒலியும் ஒளியும்’, `வயலும் வாழ்வும்’, `கண்மணிப் பூங்கா’, `மனைமாட்சி’, `திரைமலர்’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இப்போதும் பேசப்படுவவையாக இருப்பதே பொதிகையின் தரத்துக்குச் சான்று. சிறுகுடும்பம் சீரான வாழ்வு, பெண் கல்வியின் அவசியம், பெண் சிசுக்கொலை, போலியோ விழிப்பு உணர்வு தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதன் மூலம்... வெறுமனே பொழுதை மட்டும் போக்காமல், சமூகத்தைப் பழுது பார்க்கும் பணியையும் செவ்வனே செய்து கொண்டிருக்கும் சேனல் என்றால், என்றைக்கும் முதலிடம் பொதிகைக்கே!

கற்றுத் தந்த பொதிகை!

`பொதிகை'யில் செய்திவாசிப்பாளராக இருந்த வரதராஜன், தன் நினைவுகளை நம்மிடம் பகிர்ந்தபோது, ``என்னுடைய அடையாளமே பொதிகைதான். செய்தி வாசிப்பதிலிருந்து ஓய்வு பெற்று 7 வருடங்கள் ஆனாலும், இன்னமும் மக்கள் மத்தியில் நான் அடையாளப்படுத்தப்படுவது செய்தியாளராகத்தான். என்னைப் பார்க்கிற நேயர்கள், தங்களின் குடும்ப உறுப்பினர்களுள் ஒருவராகவே இணைத்துக் கொண்டார்கள். பொதிகையில் நேரலையாக செய்தி வாசிப் பது ரொம்பவே வித்தியாசமான அனுபவம். நான் செய்தி வாசிக்கும்போது திடீரென ‘சற்று முன் கிடைத்த செய்தி’ என வாசிக்க வேண்டியிருக்கும். அப்படியான சந்தர்ப்பங்கள் எனக்கு நிறையவே வந்திருக்கின்றன. செய்தியை வாசிக்கும் என்னைத் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்குப் பின்னால் செய்திப்பிரிவில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் வேலை பார்த்தால்தான், அந்தச் செய்தியை உங்களுக்கு நான் தரவே முடியும். அது ஒரு மாபெரும் கூட்டு முயற்சி. அந்த வகையில் பொதிகையில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். அதுதான் இப்போதும் என்னை வழிநடத்துகிறது'' என்று பெருமை பொங்கச் சொன்னார்.

பொன்.விமலா  படங்கள்: ப.சரவணகுமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மரங்களைப் பாதுகாக்கும் ‘பட்டாம்பூச்சி’!
`தலை’யாய பிரச்னைகள்... சுலபமான தீர்வுகள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close