Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் குழந்தைகளை நல்லவராக்கும் ஃபார்முலா!

நாம் என்ன விதைக்கிறோமோ அதுதான் விளையும். கருவேலம் விதைச்சா ஆலமரம் வளராது. அதுபோலதான் குழந்தை வளர்ப்பும். குழந்தைப் பருவத்தில் ஒரு விஷயத்தை கிரகித்துக் கொள்ளும்போது, அந்த விஷயம் வாழ்நாள் முழுக்க மனசைவிட்டு அகலாமல் அப்படியே பசுமரத்தாணிபோல மனதில் பதிந்துவிடும். குழந்தைகளை மனிதத் தன்மையோடு வளர்ப்பது குறித்து,சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல மருத்துவர் கீர்த்தன்யாவிடம் பேசியபோது, குழந்தை வளர்ப்பின் மிக முக்கிய அம்சத்தை கையில் எடுத்தார், 

“2013-ம் ஆண்டு மட்டும் 30% நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அவர்களின் நண்பர்களின் வன்முறைக்கு ஆளாகி உள்ளார்கள். 7 - 12ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளில் 50 சதவிகிதத்துக்கும் மேலானோர் சக மாணவர்களால் பாலியல் ரீதியாக தொல்லை செய்யப்பட்டுள்ளனர். 50% சதவிகிதத்துக்கும் மேலான மாணவர்கள் தேர்வில் ஆசிரியர்களை ஏமாற்றி காப்பி அடித்துள்ளனர். இரக்கமும் கருணையும் பின்னுக்குத் தள்ளப்படும்போது மாணவ சமுதாயம் அரக்கர்களாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும், மரியாதை தெரியாதவர்களாகவும்தானே மாறும்? அடிபட்டுக் கிடக்கும் பிராணிகளை வீட்டுக்கு எடுத்துவந்து உதவ நினைக்கும் குழந்தையிடம் கோபம் காட்டாதீர்கள். உங்கள் நேரமின்மையினால் அவர்களின் இரக்க குணத்தை முளையிலேயே கிள்ளி எறியாதீர்கள்.

இன்று பெரும்பான்மையான பெற்றோர், தங்கள் குழந்தைகளை ஒரு நடமாடும் கௌரவ அடையாளமாகத்தான் உருவாக்க விரும்புகிறார்கள். விளைவு... எதிர்காலத்தில் உங்களையும் அவர்கள் உறவாக, உயிராக இன்றி பராமரிப்புப் பொருளாகவே பார்க்கவிருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள். பாசம் என்றால் என்னவென்று அறியாமல் அவர்கள் வளர்ந்து நிற்கும்போது, அதற்கான பொறுப்பை மதிப்பெண்களுக்கும், பணத்துக்கும், தனி மனித வெற்றிக்கும் முதல் இடத்தை தந்து பிள்ளைகளை வளர்த்தெடுத்த பெற்றோரே ஏற்க வேண்டும். உங்கள் குழந்தைகள் அனைவர் மத்தியிலும் தனித்துத் தெரிய அவர்கள் நடத்தை, திறமைதான் காரணமாக இருக்க வேண்டுமே தவிர, உடுத்தும் உடை, உபயோகிக்கும் விலைமதிப்புமிக்க பொருட்கள், படிக்கும் பள்ளி, கௌரவம், அந்தஸ்து போன்றவை அவர்களை அடையாளப்படுத்தக் கூடாது!’’

- பெற்றோர் மனசாட்சியினை உண்மை வார்த்தைகளால் உரசிய கீர்த்தன்யா, குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகளையும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும், அதைக் கையாளும் வழிகளையும் தொகுத்துத் தந்த அட்டவணை...

நடைமுறை

நமது கலாசாரத்துக்கு மாறாக மேற்கத்திய கலாசாரத்தின் கவர்ச்சிகரமான உடைகளை சிறுமிகளுக்கு உடுத்திவிடுவது. வயதுக்கு வந்தபின் அதே மேற்கத்திய உடைகளை அணிய தடை போடுவது.

குழந்தைகள் விரும்பும் பொருட்களை அதன் அதிக விலை பற்றி யோசிக்காமல், கேட்டவுடன் வாங்கிக்கொடுத்து குழந்தைகளின் எதிர்பார்ப்பை வளர்த்துவிடுவது. பின்னர் குடும்ப நிதிநிலைமையில் இறக்கம் ஏற்படும்போது, அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாமல் போவது.

பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி... குழந்தைகளுக்கு எப்படிப் படிப்பது எனப் பொறுமையாகக் கற்றுக் கொடுப்பது இல்லை. ஆனால், பள்ளியில் படிப்பது போதாதென டியூஷனுக்கும் அனுப்பி, எந்நேரமும் படி படி என தொல்லை கொடுப்பது. குழந்தைகள் விருப்பத்துக்கு படிப்பை தேர்வு செய்யாமல், உங்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணிப்பது.

குழந்தைகள் முன்னிலையில், வீட்டுப் பெரியவர்கள் மற்றும் உறவினர்களை தவறாகப் பேசுவது, வீட்டு பணியாளர்களையும், காய்கறி விற்பவர், ஆட்டோ ஓட்டுநர் போன்ற தொழிலாளர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது.

உங்களுடைய கௌரவத்துக்காகவும், அடுத்தவர்களிடம் பெருமை பேசுவதற்காகவும் குழந்தைகளை ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என நிர்பந்திப்பது, விலைமதிப்புள்ள உடை, பொருட்களை மட்டுமே வாங்கிக் கொடுப்பது என, நாம் வசதி மிக்கவர், உயர்ந்தவர் எனும்  கருத்தை சிறு வயதிலேயே குழந்தைகள் மனதில் பதிய வைப்பது.

பாதிப்பு

(1) சிறு வயதிலிருந்து உடுத்திவந்த உடைக்கு திடீரென தடைவரும்போது எது சரி, எது தவறு என மனதளவில் ஏற்படும் குழப்பம். (2) சக தோழிகள் இதுபோல உடை உடுத்திவரும்போது என்னுடைய சுதந்திரம் ஏன் பறிக்கப்படுகிறது எனும் கேள்வி. (3) பெற்றோரின் உடையை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது, என்னுடைய உடைகளை நானே தேர்வுசெய்தால் என்ன எனும் எண்ணம்.

இதுவரை கேட்ட பொருள் உடனுக்குடன் கையில் வந்ததை வைத்து சக நண்பர்கள் மத்தியில் கிடைத்த மரியாதை, தற்போது ஆசைப்பட்டது எதுவும் கிடைக்காமல், சக நண்பர்களிடம் அவமானப்படுவதால் ஏற்படும் மன உளைச்சல்.

படிப்பின் மீதே வெறுப்பு ஏற்படுவது. தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாவது. சொந்தமாக முடிவு எடுக்கத் தெரியாமல் போவது.

பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தவறுவது. சக மனிதர் களை மனிதராகப் பார்க்காமல் மட்டமாக நடத்துவது.

தன்னுடன் படிக்கும் சக மாணவர்களைக் காட்டிலும் நாம்தான் உயர்ந்தவர் எனும் எண்ணம் வலுப்பது, ஏழ்மையில் இருப்பவர்களை தாழ்வாக நினைப்பது. ஒரு கட்டத்தில் குடும்ப பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும்போது, தாழ்வு மனப்பான்மையினால் மன உளைச்சலுக்கு ஆளாவது.

தீர்வு

(1) குழந்தைகளுக்கு நம் கலாசாரத்தை சிறுவயது முதலே எடுத்துச்சொல்லி வளர்ப்பது.  (2) குடும்பத்தின் பாரம்பர்யத்தையும், கடைப்பிடித்துவரும் ஒழுக்கநெறிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லுங்கள். (3) `என்னுடைய வயதுக்கு எனக்கான சரியான உடைகளை என்னால் தேர்வு செய்துகொள்ள முடியும், நீ என்னைப்போல் வளர்ந்ததும் உனக்கானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்’ என உறுதியளியுங்கள்.

உங்கள் குழந்தை ஒரு பொருளை கேட்கும்போது அதன் அத்தியாவசியத்தையும், அநாவசியத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வைப்பது மற்றும் சமயம் கிடைக்கும்போது அருகிலிருக்கும் ஏதாவது ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்று, வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கும் குழந்தைகளின் நிலைமையை கண்முன் காட்டி, இவர்களின் கையால் அவர்களுக்கு ஏதாவது பரிசளிக்கச் செய்வது போன்ற விஷயங்களால், பொருட்களின் அருமை மற்றும் உதவும் மனப்பான்மை என இரண்டு குணங்களையும் வளர்க்க முடியும்.

(1)படிப்பு விஷயத்தில் குழந்தைகளை பெற்றோர்கள் அதிகமாக கண்டிக்கவும் கூடாது, கண்டிக்காமல் விடவும் கூடாது. பக்குவமாக எடுத்துச் சொல்லவும். (2) குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான தாய்மாமன், சித்தப்பா, சித்தி போன்ற மூன்றாம் தரப்பினர் மூலம் படிப்பின் அவசியத்தை ஒரு தோழமையுடன் எடுத்துச்சொல்லி புரிய வைக்கலாம்.

குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை கரடியாகக் கத்திப் புரியவைக்க முடியாது. அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ அதற்கு நாமே சிறந்த உதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும். ஏனெனில், கண்ணால் பார்ப்பதைத்தான் உடனுக்குடன் மனதில் வாங்கிக்கொள்வார்கள்.

மொழியை மொழியாக மட்டுமே பதிய வையுங்கள். 7 வயது வரை குழந்தைகளுக்கு மொழியை கற்றுக்கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும். அதனால் ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக் காமல் அக்கம்பக்கத்தில் உள்ள வேற்று மொழியாளர்களிடம் பேசவைப்பது என குறைந்தது ஐந்து மொழிகளையாவது கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுங்கள்.

 

இந்துலேகா. சி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
உங்கள் குழந்தை உண்மையிலேயே நலமா..?!
இன்னொரு பால் நிகராகுமோ..?
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close